தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வழக்கறிஞரான பெண் ஆட்டோ ஓட்டுனர்!

வழக்கறிஞரான பெண் ஆட்டோ ஓட்டுனர்!

வழக்கறிஞரான பெண் ஆட்டோ ஓட்டுனர்!


PUBLISHED ON : மார் 03, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 03, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பெங்களூரு தேவசங்கரி நகர் பகுதியில் இருந்து வெளி வருகிறது ஒரு ஆட்டோ. அந்த ஆட்டோவை ஓட்டி வருகிறார் ஒரு பெண். மலர்ந்த கண்களும், சிரித்த முகமும் கொண்ட அந்த பெண்ணை பார்த்து, பலரும் வாழ்த்து தெரிவிக் கின்றனர். பதிலுக்கு அவரும் நன்றி தெரிவித்தபடி, தன் பயணத்தை தொடர்கிறார். இவரது இந்த ஆட்டோ ஓட்டுனர் பணி, இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. அடுத்த மாதம் முதல், இவர் காக்கி சீருடையை கழட்டி வைத்துவிட்டு, கறுப்பு கவுனை மாட்டி, நீதிமன்றத்தில் வாதாடப் போகிறார்.

ஆம்... ஆட்டோ டிரைவர் வெங்கடலட்சுமி, வழக்கறிஞர் வெங்கடலட்சுமி ஆகிறார். இது ஒன்றும் ஒரு நாள் கதை அல்ல, அவரது மனதிற்குள் விழுந்த பல நாள் விதை. எளிய குடும்பத்தைச் சேர்ந்த வெங்கடலட்சுமிக்கு, டிகிரி முடித்த கையோடு திருமணம் ஆகி விட்டது. கணவர் வெல்டிங் வேலை செய்பவர். திருமணத்திற்கு சாட்சியாக ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.

பெண் குழந்தையை நல்லதொரு பள்ளியில் சேர்த்தார். படிப்பு செலவு அதிகமானது. கணவரது வருமானம் போதவில்லை. தனக்கு தெரிந்த சமையல் வேலையை மேற்கொண்டார். ஐம்பது, நூறு பேரின் தேவைக்கு, வீட்டிலேயே சமைத்து, எடுத்துப்போய் கொடுத்து, வருமானம் பார்த்து வந்தார். சமைத்த உணவுகளை எடுத்துப் போக வேண்டிய ஆட்டோ டிரைவர், பல சமயம் வராமல் போய், தொழிலில் சங்கடத்தை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, இவரே ஆட்டோ ஓட்டுவது என்று முடிவு செய்தார்.

ஆட்டோ வாங்கியதும், பலரும் இவரது ஆட்டோவில் பயணம் செய்ய விருப்பப்படவே, சமையல் தொழிலை விட்டுவிட்டு, ஆட்டோ ஓட்டுனராகி விட்டார். மீட்டருக்கு மேல் கட்டணம் வசூலிப்பது இல்லை. வாடிக்கையாளரிடம் சரளமாக ஆங்கிலத்தில் பேசுதல் போன்றவற்றால், இவருக்கு வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடியது. இப்படியே சில ஆண்டுகள் ஓடியது. இந்த நிலையில் தான் ஒரு நாள், ஐந்து பேர் கொண்ட ரவுடி கும்பல் இவரை தாக்கி, கடத்தி, விபச்சார கும்பலிடம் விற்பதற்கு முயன்றது. மிகவும் போராடி தப்பிய வெங்கடலட்சுமி, உடனே, போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

இவரது புகார் அங்கே கண்டு கொள்ளப்பட வில்லை. 'நாளைக்கு வாம்மா, அப்புறம் வாம்மா' என்று அலைக்கழிக்கப்பட்டார். குற்ற வாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில், தீவிரமாக இருந்த வெங்கடலட்சுமி, வழக்கு பதிவு செய்ய மிகவும் சிரமப்பட்டார். கோர்ட்டில் வெங்கடலட்சுமி சார்பில் வாதாடிய வழக்கறிஞரின் வாதத்தில் உயிரே இல்லை. மேலும், இந்த வழக்கை கோர்ட்டிற்கு கொண்டு வருவதற்கே பதிமூன்று ஆண்டு களாகி விட்டது.

தன்னைப் போல எத்தனை அபலைப் பெண்கள் இப்படி சத்தில்லாத, உணர்வில்லாத, உயிரில்லாத வாதத்தால் மோசம் போய்க் கொண்டு இருக்கின்றனர் என்று உணர்ந்து, அப்போதே தானும் ஒரு வழக்கறிஞராவது என்று முடிவு செய்தார். சட்டக்கல்வியை தபால் மூலம் படிப்பதால் பலன் இல்லை என்பதால், தன் 36வது வயதில், கல்லூரியில் சேர்ந்தார். காலை 8:00 மணியில் இருந்து, மதியம் 2:00 மணி வரை கல்லூரி வாழ்க்கை. பிறகு மதியம் 2:00 மணி முதல், இரவு வரை ஆட்டோ ஓட்டும் பணி. ஆட்டோவிலேயே பாட புத்தகங்களை வைத்திருப் பார். வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் நேரத்திலும், ஆட்டோவை ஓட்டாத நேரத்திலும், பாட புத்தகங்களை படிப்பார். வீட்டிற்கு போனதும், அன்றைய பாடக் குறிப்புகளை படித்து முடித்து விட்டே தூங்கப் போவார்.

இப்படியான இவரது ஐந்து ஆண்டு படிப்பு வீண் போகவில்லை. நல்ல மதிப்பெண்கள் எடுத்து வெற்றிகரமாக, எல்.எல்.பி.,படித்து முடித்தார். ஆனாலும், பார் கவுன்சில் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் தான், வழக்குகளில் ஆஜராக முடியும் என்ற நிலை. அந்த தேர்வையும் வெற்றிகரமாக முடித்ததன் எதிரொலியாக, வருகிற மார்ச் மாதம் முதல் கோர்ட்டிற்கு வழக்கறிஞர் வெங்கட லட்சுமியாக செல்ல இருக்கிறார். 'ஒரு நியாயமான ஆட்டோ ஓட்டுனராக இருந்த நான், இனி நேர்மையான, அதே நேரத்தில், சமூகத்தில் நீதி கிடைக்காத பெண்களுக்காக வாதாடும் வழக்கறிஞராக இருப்பேன்...' என்கிறார் உறுதியாக. பெண்கள் தினம் கொண்டாட இருக்கும் இத்தருணத்தில், இவரது சாதனையை பாராட்டி வாழ்த்துவோம்.

***

எம். ராஜரிஷி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us