தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆச்சி மனோரமா! (17)

ஆச்சி மனோரமா! (17)

ஆச்சி மனோரமா! (17)


PUBLISHED ON : ஜூலை 01, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 01, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒரு திருப்ப மறைவிலிருந்து குதிரையில், மனோரமா வேகமாக வரவேண்டும் என்றார் இயக்குனர். இந்த ஷாட்டை, பிறகு, ஸ்லோ மோஷனில் பின்னால் போவது போல திரையில் காண்பிப்பதுதான் இதன் நோக்கம்.

குதிரை சவாரி என்பது மனோரமாவிற்கு இதுதான் முதல் முறை. இதற்கு முன் குதிரையை தொட்டுக் கூட பார்த்தது கிடையாது.

குதிரை வேறு இளமைத் துள்ளலோடு சுறுசுறுப்பாக இருந்தது. விட்டால் பிய்த்துக்கொண்டு ஓடத் தயாராக இருப்பதை போல இருந்தது. 'ஏதாவது அசம்பாவிதம் நடந்து விட்டால் என்ன செய்வது?' என்ற அச்சம் வேறு அவருள் எழுந்தது. இருந்தாலும், வருவது வரட்டும் என்று தைரியத்தை வரவழைத்து கொண்டார்.

குதிரையோட்டி திருப்ப மறைவு வரை பிடித்துக்கொண்டே வந்தார். அதனால் பயம் இல்லாமல் இருந்தது. படப்பிடிப்பு ரெடியானதாக இயக்குனர் அறிவித்தார். உடனே, குதிரையோட்டி குதிரையின் காதில் ஏதோ சொன்னார். அப்புறம் கேமராவில் பதிவாகி விடாமல் மறைவாக நின்று கொண்டார்.

குதிரையோ எடுத்தது ஓட்டம்! காற்றை கிழித்துக்கொண்டு அப்படியொரு ஓட்டம்!

எதிர்பாராத இந்த அதிர்ச்சியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல் குதிரையை கெட்டியாக பிடித்துக் கொண்டார் ஆச்சி. எக்காரணம் கொண்டும் குதிரை மீதிருந்து கீழே விழுந்து விடக்கூடாது என்பது மட்டும்தான் அப்போதைய அவரின் ஒரே கவலையாக இருந்தது.

வேகமாக திருப்பத்தில் திரும்பிய அடுத்த நொடியில், அதன் நான்கு கால்களும் வாரியடித்தது போல கால்கள் பிசகி கீழே விழுந்தது அக்குதிரை.

அதன் மேலிருந்த மனோரமாவும் அந்த வேகத்தில் துாக்கி வீசப்பட்டார். எனினும், தவறியும் கீழே விழுந்துவிட கூடாது என்பதற்காக, கெட்டியாக பிடித்திருந்த குதிரையின் கடிவாளம் மனோரமாவின் கைகளில் பலமாகவே சிக்கிக் கொண்டிருந்தது.

தன் எஜமானனின் கட்டளைக்கிணங்க, கீழே விழுந்த குதிரை சமாளித்து எழுந்து, மீண்டும் அதே வேகத்தில் ஓட ஆரம்பித்தது.

அது எழுந்த வேகத்தில், மனோரமாவின் கையிலிருந்த கடிவாளம் இழுபட்ட வேகத்தில், அவரது இடது முன் கை எலும்பு பட்டென்று முறிந்தது. அத்துடன் உடம்பெங்கும் ரத்தக் காயம்.

ஒட்டுமொத்த படப்பிடிப்பு குழுவினரும் அதிர்ச்சி அடைந்தனர். குதிரையோட்டி வேகமாக ஓடி வந்து, அதை அடக்கி நிறுத்தச் செய்தார். மற்றவர்கள் பதறிப்போய் மனோரமா அருகே வந்து அவரை துாக்கி விட்டனர். கையில் பலமாக அடிபட்டிருந்ததால் வலியால் துடித்தார் அவர்.

அவருக்கு அங்கேயே முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின், காரில் அவரது தாயாருடன் சென்னை அனுப்பி வைக்கப்பட்டார்.

காரில் ஏற்றப்படும்போது, தன் கை முறிந்து தொங்குவது போன்று மனோரமாவிற்கு தோன்றியது. கூர்ந்து கவனித்ததில் அது உண்மை என்றும் புரிந்தது.

'அம்மா, என் கை முறிஞ்சு போச்சும்மா...' என்று அழத் தொடங்கினார் ஆச்சி.

'பயப்படாதே... தேவர் அண்ணன் எப்படியாவது காப்பாத்தி விடுவார்...' என்று ஆறுதலாக கூறினார் அவரது அன்னை.

கார் சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது. அதுவரை வலி உயிர் போயிற்று.

சென்னையில், டாக்டர் நடராஜனை தேடி போவதற்கு பதிலாக, தேவர் பிலிம்சை நோக்கி கார் பயணித்தது.

'டாக்டரிடம் போகலையா?' என்று பதற்றத்தோடு கேட்டார் மனோரமா.

'டாக்டரை விட புத்துார் கட்டுதான் பெஸ்ட் என்று தேவர் நினைக்கிறார். அதனால, புத்துார் கட்டு போடறவங்க சிலரை இங்க வரச்சொல்லி இருக்காங்க. அது போட்டா எல்லாம் சரியா போயிடும்...' என்று துணைக்கு வந்தவர் கூறினார்.

ஒரு வழியாக அவர்கள் தங்கள் கட்டு போடும் வேலையை முடித்து போய் விட்டனர். அப்புறமும் மரண வலி குறையவே இல்லை. முடியாமல் தேவர் பிலிம்ஸிலேயே படுத்து விட்டார் மனோரமா.

வலியின் தீவிர தாக்கத்தில், ஒருவிதமான மயக்கம் கலந்த உறக்கம். ஆழ்ந்த உறக்கம் என்று கூற முடியாது; ஆழ்ந்த மயக்கம் என்று வேண்டுமானால் கூறலாம்.

அப்போது, திடீரென்று கையில் படீரென்று ஒரு மிகப்பெரிய சத்தம் கேட்டது. வலி மீண்டும் அதிகரித்தது.

அவர்களின் கட்டு நன்றாக சேராமல் மீண்டும் எலும்பு விலகி விட்டது. வலி... வலி... வலி...

அங்குள்ளோர் மறுபடியும் திரண்டனர். எதற்கும் ஒரு எக்ஸ்ரே எடுத்து பார்க்கலாம் என்று தீர்மானித்தனர். அப்படியே லேபுக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.

கடைசியில், புத்துார் கட்டு சரியில்லை என்ற முடிவுக்கு வந்து, டாக்டர் நடராஜனையே அணுகுவது என்று தீர்மானிக்கப்பட்டது. அங்கு அழைத்து செல்லப்பட்டார் மனோரமா.

கையைப் பார்த்ததுமே, ''என்ன, புத்துார் கட்டா?'' என்று இளக்காரமாக கேட்டார் டாக்டர்.

''யாரோ சொன்னத கேட்டு கட்டு போட்டோம். ஆனா, அது பிரயோஜனமில்ல,'' என்று மென்று விழுங்கினார் மனோரமாவின் அன்னை.

''என் மேல உங்களுக்கு நம்பிக்கை இருந்தா ஊட்டியிலிருந்து நேரா இங்கதானே வரணும். எதுக்காக புத்துார் கட்டு போட்டீங்க? அதுவுமில்லாம எக்ஸ்ரே வேற எடுத்திட்டு வந்திருக்கீங்க. என்னால ட்ரீட்மென்ட் கொடுக்க முடியாது. வேற எங்கயாவது கூட்டிட்டு போங்க,'' என்று கறாராகவும், கோபமாகவும் கூறிவிட்டார் டாக்டர் நடராஜன்.

இதைக் கேட்டதும், மனோரமாவும், அவரது அன்னையும் அதிர்ந்து போயினர். ரொம்பவும் நம்பிக்கையான டாக்டரே இப்படி சொன்னால் என்ன செய்ய முடியும்?

மனோரமாவின் அன்னை அழுது புரண்டு, டாக்டரின் கால்களில் விழாத குறையாக கெஞ்சிக் கூத்தாடி பிறகுதான் மனம் இரங்கினார் டாக்டர். சிகிச்சை அளிக்க சம்மதித்தார்.

பின், சிகிச்சை தீவிரமாக நடைபெற்றது. அப்புறம் மெல்ல மெல்ல குணமாக தொடங்கியது.

நாட்கள் பல கடந்து கொண்டிருந்த வேளையில், இன்னொரு பிரச்னை பூதாகரமாக உருவெடுத்தது.

இவர் ஒப்பந்தம் ஆகியிருந்த பல படங்களில் நடிக்க முடியாத சூழல் இருந்ததால், பல படங்கள் அப்படி அப்படியே முடிக்க முடியாமல் தடைபட்டு நின்றது.

எத்தனைதான் வேகமாக இவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்தாலும், முழுவீச்சில் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத நிலையே நீடித்தது.

- தொடரும்.



நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.

www.shankar_pathippagam@yahoo.com

- குன்றில்குமார்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us