தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆச்சி மனோரமா! (22)

ஆச்சி மனோரமா! (22)

ஆச்சி மனோரமா! (22)


PUBLISHED ON : ஆக 05, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 05, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வைரம்' நாடக சபாவில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு, சினிமாவில் நடிக்க ஆசை. அதற்காக, சென்னைக்கு செல்ல தயாரானார். ஆனால், அவரது பெட்டி திடீரென்று காணாமல் போகவே, மன உளைச்சலுக்கு ஆளாகி, உடுத்துவதற்கு துணி கூட இல்லாமல் தவிப்பதாக கூறி, நாடக சபாவினரிடம் சண்டை போட்டார்.

உடனே, சபாவிலிருந்து அவருக்கு துணிமணிகள் வாங்கி கொடுக்கப்பட்டது. வேறு வழியில்லாமல் அதை பெற வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார், அந்நடிகை.

நாடக குழுவினரின் உதவியை பெற்றுக் கொண்ட காரணத்தால், அவர்களுக்கு கடன் பட்டவராகி விட்டார். எனவே, அவர்களை மீறி அவரால் சுயமாக செயல்பட முடியவில்லை. அதனால், அவரது சினிமா கனவு முற்றிலும் சமாதியாகி போனது. அந்த நாடக சபாவிலேயே தொடர்ந்து நடித்து, காலம் தள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டார்.

சில நாட்களுக்கு பின்தான், உண்மையான திருடன் யார் என்பது அவருக்கு தெரிந்தது.

அவர், சென்னைக்கு சென்று விட கூடாது என்பதற்காக, நாடக சபாவினரே, அந்த நடிகையின் பெட்டியை திருடியுள்ளனர்.

இந்த மாதிரி பல உத்திகளை கையாளுவது அவர்களின் வழக்கம்; இதேபோன்ற ஒரு சம்பவம் மனோரமாவுக்கும் நிகழ்ந்தது...

ஒருமுறை சென்னையிலிருந்து, உடனே புறப்பட்டு வருமாறு மனோரமாவிற்கு, ஒரு பட நிறுவனத்திடமிருந்து தந்தி வந்தது. இந்த தந்தி, நாடக குழுவினரிடம் சிக்க, அதை படித்தவர்கள், தந்தியை பார்த்தால் மனோரமா சென்னைக்கு சென்று விடுவார் என நினைத்து, அதை சுக்கல் சுக்கலாக கிழித்தெறிந்து விட்டதுடன், இந்த விஷயம் மனோரமாவிற்கு தெரியாமல் ரொம்ப கவனமாக மறைத்து விட்டனர். இரண்டு, மூன்று மாதங்கள் கடந்தன.

ஒருநாள், நாடக குழுவினரோடு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார், மனோரமா.

அப்போது, நாடக சபாவை சேர்ந்த ஒருவர், 'அந்த தந்தியை பார்த்திருந்தா இந்நேரம், மனோரமா சினிமாவில் நடிச்சு, பேர் வாங்கியிருக்கும்...' என்று கூறி விட்டார்.

இதைக் கேட்ட மற்றவர்களோ, கொஞ்சம் கூட குற்ற உணர்ச்சி இல்லாமல், அப்போது பிரபலமாக இருந்த நடிகர்கள் சிலரின் பெயர்களை குறிப்பிட்டு, அவர்களோடு கதாநாயகியாக நடித்துக் கொண்டிருப்பார் என்றும், எங்கு பார்த்தாலும் அவரது போஸ்டர், சுவர்களில் அலங்கரித்து கொண்டிருக்கும் என்றும் கிண்டலடித்தனர்.

இதன் பிறகே, தந்தி வந்த விவரம் மனோரமாவுக்கு தெரிய வந்தது. அவர்களிடம் அதைப் பற்றி கேட்டதற்கு, கேலியும், கிண்டலுமாக பேசி, இன்னும் வெறுப்பேற்றினர்.

வெண் திரையில் தன் உருவத்தை பார்த்துவிட வேண்டும் என்ற ஆசையோடு இருந்தவருக்கு, இந்த விஷயம் எப்படி இருந்திருக்கும்!

'ஒரு படத்திலோ அல்லது நாடகத்திலோ நடிக்கிறப்ப, முதல் சீனிலேயே கதாபாத்திரத்தின் குணாதிசயத்தை வெளிப்படுத்தி விடவேண்டும்; இதுதான் ஒரு நல்ல நடிகனுக்கு அழகு. அதை விடுத்து, முதல் சீனில் எப்படி நடித்தாலும் பரவாயில்லை; அப்புறம் வர்ற காட்சிகளில் பார்த்துக்கலாம் என்று நினைப்பது தவறு...' என்று அடிக்கடி சொல்வார், மனோரமா

அதாவது, கதாபாத்திரத்தை புரிந்து கொள்வதில், குழப்பம் வராமல், ரசிகர்கள், எளிதாக தெரிந்து கொள்கிற மாதிரி இருக்க வேண்டும் என்பது அவரது எண்ணம்.

பணக்கார பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றால், அந்த வேடத்தோடு ஐக்கியமாகி விடுவார், மனோரமா. மேலும், பணக்கார பெண் என்றால், நடை, உடை, பாவனைகளில் மிடுக்குத்தனம் இருக்க வேண்டும்; அதை, கச்சிதமாக உணர்ந்து நடிப்பார்.

தயாரிப்பாளர்களும், நிர்வாகிகளும் அதற்கேற்ற அணிகலன்களை தந்தாலும், இன்னும் கூடுதலாக சில அணிகலன்களை சேர்த்தால் நன்றாக இருக்கும் என்று, தன் யோசனையை கூறவும் அவர் தயங்குவதில்லை.

தான் நடிக்கும் கதாபாத்திரம் பொருத்தமாகவும் இருக்க வேண்டும்; அதேசமயம், ரசிகர்களின் மனதில் நிலைத்து நிற்கவும் வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தவர், மனோரமா.

பொதுவாக ஒரு நடிகர் அல்லது நடிகை தங்கள் வாழ்க்கைக்கும், புகழுக்கும் முக்கிய காரணமாக, பட அதிபர் மற்றும் ரசிகர்களை தான் நினைப்பர்.

பட அதிபர்களின் ஆதரவின்றி வெறும் ரசிகர்களின் ஆதரவை மட்டுமே வைத்து, ஒருவரால் திரை உலகில் தன்னை வளர்த்துக் கொள்ள முடியாது; அதேபோல், பட அதிபர்களின் ஆதரவை மட்டுமே வைத்து, ரசிகர்களின் ஆதரவு இல்லாமல் போனாலும், அவரால் திரை உலக வாழ்வில் நீடித்து நிலைத்து நிற்க முடியாது.

இதுதான் உண்மை; இதுதான் யதார்த்தம்!

— தொடரும்.

நன்றி: சங்கர் பதிப்பகம் சென்னை.

www.shankar_pathippagam@yahoo.com

குன்றில்குமார்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us