sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (17)

/

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (17)

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (17)

நான் சரோஜாதேவி பேசுகிறேன்! - நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை தொடர் (17)


PUBLISHED ON : நவ 24, 2024

Google News

PUBLISHED ON : நவ 24, 2024


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பத்மஸ்ரீ விருது கிடைத்த செய்தி அறிந்து, பெங்களூரு வந்த எனக்கு, ஏகப்பட்ட வரவேற்பு.

பத்மஸ்ரீ விருது கிடைத்த போது, சந்தோஷத்தில், குடும்பத்தினருடன் விழாவில் பங்கேற்றேன். இதே சந்தோஷம், பத்மபூஷண் விருது கிடைத்தபோது எனக்கு கிடைக்கவில்லை. என் சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள, என் அம்மாவும், கணவரும் அப்போது இல்லை.

கடந்த, 1992ல், எல்லாரையும் அழைத்து, பெரிய ரோஜாப்பூ மாலை போட்டு, 'நம் சரோஜாவுக்கு பத்மபூஷண் விருது கிடைத்திருக்கிறது...' என்று சொல்லி, கன்னட நடிகர் ராஜ்குமாரின் மனைவியான, பர்வதம்மா தான் பாராட்டினார்.

திருமணமான பின், படங்களில் நடித்தாலும், குடும்ப வாழ்க்கைக்கு எந்தவிதமான இடையூறும் ஏற்படாத வண்ணம் பார்த்து கொண்டேன். எல்லா படங்களையும் ஒப்புக் கொள்ள மாட்டேன்; ஒவ்வொன்றையும் கதை கேட்டு தான் ஒப்புக் கொள்வேன். வீட்டுப் பக்கம் அதிக கவனம் இருக்கும்படியான படங்களாகப் பார்த்துக் கொள்வேன்.

ஒருமுறை, காஷ்மீரில் படப்பிடிப்பின் போது, ஷர்மிளா தாகூர் வந்திருந்தார். அவரும், நானும் சாப்பிட உட்கார்ந்தபோது, 'திருமணம் ஆன பின், வீட்டு விவகாரங்கள் எல்லாம் எப்படி பார்த்துக் கொள்கிறாய். எனக்கு மிகவும் கஷ்டமாய் இருக்கிறது...' என்றார்.

'நிறைய படங்கள் ஒப்புக் கொண்டால், இம்மாதிரி கஷ்டங்கள் வரும். 10 நாட்கள் படப்பிடிப்பு இருந்தால் மீதி, 10 நாட்கள் வீட்டில் இருப்பேன். ஞாயிற்றுக் கிழமைகளில் படப்பிடிப்புக்கு போவதில்லை. வீடு தான்...' என்றேன்.

'எவ்வளவு நன்றாக எல்லாவற்றையும், 'பிளான்' செய்கிறாய்...' என்று ஆச்சரியப்பட்டார், ஷர்மிளா தாகூர்.

ஒவ்வொரு ஆண்டும், பிள்ளையார் சதுர்த்தி விழாவை எல்லாரையும் அழைத்து பிரமாதமாக கொண்டாடுவோம். பிள்ளையார் சதுர்த்தி விழா முடிந்த பின், சாங்கி டாங்கி ஏரியில், பிள்ளையாரை விட போயிருந்தார், என் கணவர், ஹர்ஷா. நான் வீட்டில் இருந்தேன்.

போன இடத்தில் ஏதோ பள்ளத்தில் காலை விட்டு தடுக்கி விழுந்திருக்கிறார், என் கணவர்.

பிள்ளையார் விக்கிரகமும், கீழே விழுந்து துாள் துாளாகப் போய், மஞ்சள், குங்குமம் எல்லாம் சிதறியுள்ளது. எப்படியோ எழுந்து சமாளித்து, வீட்டிற்கு வந்திருக்கிறார். அவருடன் என் அக்கா பத்மாவும் போயிருந்தாள்.

ஒவ்வொரு முறையும், ஏரியில், பிள்ளையாரை கரைத்து விட்டு வந்த பின், எனக்கு பிரசாதம் தருவார். அன்றைக்கு தரவில்லை.

'பிரசாதம் எங்கே?' என்றேன்.

அவர் எதுவும் பேசாமல், சும்மா உட்கார்ந்திருப்பதை பார்த்து, 'என்ன ஆயிற்று?' என்று, அவர் காலைப் பார்த்தேன். பெரிய காயம். எதோ அபசகுனமாக எனக்கு தோன்றியது. இதற்கு நடுவில், மாமியார் உடல்நிலை பற்றிய பயம் வந்தது.

நடைபிணமானார், ஹர்ஷா. திடீரென்று என்னை அழைத்து, என் அக்கவுன்ட்ஸ் பற்றியெல்லாம் சொல்ல ஆரம்பித்தார்.

'இதையெல்லாம் நீங்கள் தானே பார்த்துக் கொள்கிறீர்கள்? எதற்காக என்னிடம் சொல்கிறீர்கள்...' என்றேன்.

'இல்லை இல்லை... நீயும் இதையெல்லாம் தெரிந்து கொள்...' என்றார்.

சில நாட்களில், என் மாமாவும், அதையடுத்து, என் அப்பாவும் இறந்து போயினர். தொடர்ச்சியாக இறப்புகள் வந்ததில், ஹர்ஷாவுக்கு ஆரோக்கியம் கெட்டது.

சிருங்கேரியில் இருந்து புரோகிதரை அழைத்து, மூன்று நாட்களுக்கு ஹர்ஷா பெயரில், 'கணபதி ஹோமம்' செய்து, மந்திரங்கள் ஓதச் செய்தோம்.

சுமங்கலிப் பெண்கள் எல்லாரும் அட்சதை போட்டு, ஆசீர்வாதம் செய்தனர்.

எல்லாவற்றையும் முறைப்படி செய்து, ஏப்ரல் மாதம் எல்லாரும் சென்னை சென்றோம்.

அங்கே, சிவாஜி கணேசனின் தம்பி மரணமடைந்தார். அவர் மனைவி அலமேலு, என் நெருங்கிய தோழி. அவளுக்கு ஆறுதல் சொல்லப் போயிருந்தோம்.

ஏப்., 10ம் தேதி உகாதி.

சிவாஜியின் மனைவி கமலக்கா வீட்டில் உணவருந்தி விட்டு, எங்களின் மாந்தோப்பை பார்த்து வந்தோம்.

உட்லண்ட்ஸ் ஹோட்டல் அதிபர் கிருஷ்ணராவ் எனக்கு, அப்பா மாதிரி.

'உட்லண்ட்ஸ் ஹோட்டலில், 'பில்லியர்ட்ஸ் ரூம்' ஒன்று திறந்திருக்கோம். அதைக் காட்டுகிறேன் வா...' என அழைத்தார், கிருஷ்ணராவ்.

நாங்கள் அதை பார்த்து விட்டு வந்ததும், 'டிவி'யில் கிரிக்கெட் மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தார், ஹர்ஷா.

'நான் கிருஷ்ணர் கோவிலுக்குப் போய் வருகிறேன்...' என்றேன்.

'நானும் வருகிறேன் இரு...' என்றார், ஹர்ஷா.

இருவரும் கிருஷ்ணர் கோவிலுக்கு போனோம்.

அன்றைக்கு என்னமோ போல் இருந்தது.

வழக்கமாக ஏதாவது பேசும் அர்ச்சகரும், அன்றைக்கு ஒன்றுமே பேசவில்லை; மவுனமாகவே பிரசாதம் தந்தார்.

மறுநாள் வெள்ளிக்கிழமை.

மல்லிகைப் பூ செண்டை அனுப்பி வைத்திருந்தார், ரசிகர் ஒருவர். மல்லிகை பூ என்றால், எனக்கு உயிர். அவ்வளவையும் தலையில் வைத்துக் கொண்டேன்.

ஏர்போர்ட்டுக்கு வந்தால், 4:30 மணிக்கு கிளம்ப வேண்டிய பெங்களூரு விமானம் தாமதமாக, 6:00 மணிக்குத் தான் கிளம்பும் என்றனர். திரும்ப எதற்காக ஹோட்டலுக்கு போக என எண்ணி, ஏர்போர்ட் லவுஞ்சிலேயே இருந்தோம். நான் நிலை கொள்ளாமல் இங்கேயும் அங்கேயுமாக நடந்தேன். இதனால், மல்லிகைப் பூக்கள் சிதறின.

'என்ன ஏர்போர்ட் முழுக்க உன்னுடைய பூக்கள் சிதறிக் கிடக்கின்றனவே...' என்றார், ஹர்ஷா.

நான் ஒன்றும் சொல்லாமல் சிரித்தேன்.

ஏர்போர்ட்டில் காத்திருந்த போது, அவர், எனக்கு காபி வாங்கி வந்தார்.

'எதற்காக காபி வாங்கி வந்தீர்கள்; நாம் ஊருக்கு சென்ற பின் குடித்திருக்கலாமே! சரோஜாதேவி பெரிய பிலிம் ஸ்டார் என்பதால், கணவனை வேலை வாங்குகிறாள் என்று சொல்ல மாட்டார்களா?' என்றேன்.

'என் மனைவிக்கு நான் காபி கொண்டு வந்து கொடுத்தால் அவர்களுக்கென்ன... உலகத்தில், யாரும் அவரவர் மனைவிக்கு காபி வாங்கிக் கொடுப்பதில்லையா?' என சிரித்தார், ஹர்ஷா.

மறுநாள்...

ஏப்ரல் 18 -

அன்று, ஸ்ரீராம நவமி.

முதல் நாள் இரவு அதிக நேரம் வேலை செய்து கொண்டிருந்தார், ஹர்ஷா.



- தொடரும்

நன்றி: அல்லயன்ஸ் பதிப்பகம் எஸ். விஜயன்






      Dinamalar
      Follow us