PUBLISHED ON : செப் 22, 2013

அக்டோபர் 1 சிவாஜி கணேசன் பிறந்தநாள்
சிவாஜி கணேசன் நடித்த, கவுரவம் உட்பட, பல வெற்றிப் படங்களை இயக்கியவரும், பிரபல திரைப்பட கதை, வசனகர்த்தா, இயக்குனருமான, 'வியட்நாம் வீடு' சுந்தரம், பல ஆண்டுகள், சிவாஜியுடன் நெருங்கிப் பழகியவர். சிவாஜியை பற்றி, பல சுவாரசியமான தகவல்களை, தினமலர் - வாரமலர் இதழுக்காக, நினைவு கூர்கிறார்:
கடந்த, 1962ல், சென்னை அம்பத்தூரில் உள்ள, 'டன்லப்' தொழிற்சாலையில், நான் பணிபுரிந்த போது, நான் எழுதிய, 'பிள்ளையார் மாப்பிள்ளை யார்' என்ற, நாடகம் அரங்கேறியது. அந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, எம்.ஜி.ஆர்., தனக்கு அணிவிக்கப்பட்ட மாலைகளை, எனக்குப் போட்டு, 'விரைவில், மிகப் பெரிய எழுத்தாளராக வருவாய்...' என்று, வாழ்த்தினார். அவரது ஆசி, விரைவிலே சாத்தியமாயிற்று.
கடந்த, 1965ல், ஒரு நாடகத்திற்கு கதை எழுதி, ஒய்.ஜி.பி.யிடம் காண்பித்தேன். 'எங்க குழுவை விட, சிவாஜிக்கு, இந்த கதை நல்லா பொருந்தும். அவர்கிட்டே கேட்டுப் பாரு...' என்றார். இந்த கதையை கேட்ட என் சகோதரி அகிலா, அடுத்த வீட்டு மாமியிடம் சொல்ல, அதைக் கேட்ட அந்த மாமியின் கணவர் நாகசுப்ரமணியம், சிவாஜியிடம் சொல்லியிருக்கிறார். நாகசுப்ரமணியம், சிவாஜியின் ஆடிட்டர்.
சிவாஜியின் சகோதரர் சண்முகம் என்னைக் கூப்பிட்டு, அந்தக் கதையை கேட்டார். அவருக்கு அந்த கதை பிடித்து விடவே, சிவாஜியை சந்திக்க சொன்னார். பாக்டரிக்கு போகும் காக்கி பேன்ட், சட்டையை தவிர, வேறு நல்ல உடை அப்போது என்னிடம் இல்லை. பாப்பு என்ற நண்பரிடம், வெள்ளை சட்டை இரவல் வாங்கி, அணிந்து கொண்டு, என் வாழ்க்கையை மாற்றி அமைக்கப் போகும், அன்னை இல்லத்திற்குள், முதல் முறையாக நுழைந்தேன். ஹாலில் இருந்த சோபாவில் சிவாஜி வந்து அமர்ந்தார். நான் தரையில் அமர்ந்ததும், 'உன்னை விட, உன் சட்டை பெரிசா இருக்கே...' என்றார். 'ஐ ஆம் நாட், தி மாஸ்டர் ஆப் மை ஷர்ட்...' என்றேன். 'இதே மாதிரி டயலாக் நிறைய இருக்கா?' என்றார். 'ஆமாம்' என்றேன். பின், கதையை சொல்ல ஆரம்பித்தேன்.
பிரஸ்டீஜ் பத்மநாபன், ரிடையராகி வீடு திரும்பும் சீன். அதை சொல்லும் போது, 'இன்னொரு முறை திருப்பிச் சொல்லு... அந்த சீனை நான் செய்துப் பார்க்கிறேன்...' என்றார். கதையை கேட்கும் போதே, கேரக்டரில் முழ்கிப் போகும் தன்மை, சிவாஜியிடம் இருந்ததை, அவரது கண்களில் பார்த்தேன். கதை கேட்டு முடித்தவர், 'பாக்டரி வேலை நேரம் போக, மற்ற நேரங்களில் என் கூட இரு...' என்றார். அவரது நிழலில் இருக்க, அனுமதி கிடைத்தது.
வியட்நாம் வீடு நாடகத்தின், ஒத்திகை ஆரம்பித்தது. சூரக்கோட்டையில் அவரது பண்ணை வீட்டில், ஒவ்வொரு சீனாக நான் படித்துச் சொல்வதைக் கேட்டு, மனதில் ஏற்றிக் கொண்டார். 250 பக்கங்கள் உள்ள வசனத்தை, உன்னிப்பாக கேட்டு, திருப்பிச் சொல்லக் கூடிய, அசாத்திய ஞாபக சக்தி சிவாஜிக்கு உண்டு. இது, கடவுள் அவருக்கு கொடுத்த, மிகப்பெரிய பரிசு என்றே சொல்ல வேண்டும்.
கடந்த, 1967ல், ஆகஸ்ட் 15,16,17 ஆகிய மூன்று நாட்களும் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில், வியட்நாம் வீடு நாடகம் அரங்கேறியது. நாடக ரசிகர்கள், சபாக்காரர்கள், பொதுமக்களின் பாராட்டுதல்கள் கிடைத்தன. இரண்டாவது நாள், நாடகத்தின் இடைவேளையில் நடந்த நிகழ்ச்சியில், பல சபா தலைவர்கள், காரியதரிசிகள் அவருக்கு போட்ட எல்லா மாலைகளையும் கழட்டி, எனக்குப் போட்டு, 'சுந்தரமாக இருந்த இவன், இனி, வியட்நாம் வீடு சுந்தரமாக மாறுவான்...' என்று, மேடையில் அறிவித்தார் சிவாஜி. இப்போது நினைத்தாலும், உடல் சிலிர்க்கிறது.
ராஜா அண்ணாமலை மன்றத்தில் 1962ல், எம்.ஜி.ஆர்., கூறியது, 1967ல் அதே அண்ணாமலை மன்றத்தில், நடிகர் திலகத்தின் அருளால், நிறைவேறியது. தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும், இந்தியாவின் சில முக்கிய நகரங்களிலும், ஆயிரம் முறைக்கு மேல், இந்நாடகம் மேடை ஏறி, சாதனை படைத்தது.
வியட்நாம் வீடு நாடகம், மேடையில் சாதனை செய்த பின், நடிகர் திலகம் தன்னுடைய சொந்த பேனரான, சிவாஜி புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில், வியட்நாம் வீடு கதையை படமாக்கினார். பி.மாதவன் படத்தை இயக்கினார். திரைப்படமாக வும், வியட்நாம் வீடு பெரிய வெற்றி பெற்றது. பிரஸ்டீஜ் பத்மநாப அய்யர் பாத்திரம், மிகவும் பேசப்பட்டது. நடிகர் திலகம், அந்தணராக நடித்த, முதல் முழு நீள கதை இது.
வியட்நாம் வீடு நாடகத்தை அடுத்து, ஒய்.ஜி.பி.,யின் யுனைடெட் அமெச்சூர் ஆர்ட்டிஸ்ட் குழுவிற்கு, கண்ணன் வந்தான் என்ற, நாடகத்தையும், மேஜர் சுந்தர்ராஜனின் நாடக குழுவிற்காக, ஞான ஒளி என்ற, நாடகத்தையும் எழுதினேன். இரண்டும், சிறப்பான வரவேற்பை பெற்ற, வெற்றி நாடகங்கள்.
சிவாஜி, பிரபல இந்தி நடிகர், சஞ்சீவ் குமாரோடு வந்து, இரு நாடகங்களையும் பார்த்தார். அவருக்கு, இரு நாடகங்களும் பிடித்திருந்தன. ஞான ஒளி அதே பெயரில் படமாக்கப்பட்டது. சிவாஜி கிறிஸ்துவராக நடித்தார். பூண்டி மாதா கோவிலை பின்னணியாக வைத்து, எழுதப்பட்ட கதை அது.
கண்ணன் வந்தான் என்ற, என் மேடை நாடகம், கவுரவம் என்ற பெயரில், சிவாஜி, இரு வேடங்களில் நடித்த, வெற்றிப்படம். தொழிலதிபர் டி.எஸ்.கிருஷ்ணாவின் உருவ அமைப்பு, பிரபல வக்கீல் வி.பி.ராமன் பேசுகிற பாணி, பிரபல வக்கீல் கோவிந்த் சுவாமிநாதன் போன்று நிற்பது, நடப்பது என்று, எல்லாம் கலந்து, பாரிஸ்டர் ரஜினிகாந்த் வேடத்தில், சிவாஜி, நடித்து சாதனை படைத்தார். வியட்நாம் மூவிஸ் என்ற பெயரில், தி இந்து நிறுவனத்தை சேர்ந்த ரங்கராஜனும், நானும் இணைந்து இப்படத்தை தயாரித்தோம். இப்படத்தை நானே இயக்குவதற்கு, வாய்ப்பு கொடுத்தார் சிவாஜி.
*'கலைகள் எல்லாம் உங்களிடம் பாடம் படிக்கும்; உங்கள் காலடி மண் கூட நடிக்கும்...' என்று, ஒரு விழாவில் சிவாஜியை பாராட்டி பேசினேன். அதை, ரொம்பவும் ரசித்தார் சிவாஜி.
* ஒய்.ஜி.பி., குழுவிற்கு, நான் எழுதிய மற்றொரு பிரபல நாடகம், பரீட்சைக்கு நேரமாச்சு. முக்தா சீனிவாசன் இயக்கத்தில், திரைப்படமாக உருவாக்கப்பட்டது. இந்த படம் உருவான போது, மனதை உருக்கும் சம்பவம் ஒன்று நடந்தது.
ஜஸ்டிஸ் கோபிநாத் என்ற படத்தின் டிஸ்கஷன் நடந்த போது, இயக்குனர் யோகானந்த், திடீரென்று, அதிர்ச்சியடைந்து அலறினார். என்னவென்று எங்களுக்கு புரியவில்லை. 'என்னமோ மாதிரி இருக்கீங்களே... என்று ஆச்சு?' என்று கேட்டோம். பத்து நிமிடங்கள் கழித்து, இயக்குனர் யோகானந்தின் இரண்டாவது மகனுக்கு, மின்சார ரயிலில் விபத்து ஏற்பட்டது என்று டெலிபோனில் செய்தி வந்தது. எல்லாரும், மருத்துவமனைக்கு ஓடினோம். அங்கு சென்ற போது, யோகானந்தின் மகன், இறந்து விட்டான் என்ற செய்தி, எங்களுக்கு கிடைத்தது. உடனே, சிவாஜிக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. 'டைரக்டர் மனைவிக்கு, இந்த விஷயத்தை, ரொம்ப கவனமாக, நாசூக்காக சொல்லணும். அவங்க, ரொம்ப இளகிய மனம் படைச்சவங்க. சின்ன அண்ணாமலையும், சுந்தரமும் டைரக்டர் வீட்டுக்கு போய் சொல்லட்டும்...' என்றார் சிவாஜி. அவருடைய வீட்டுக்கு சென்று, அவரது மனைவியிடம் தயங்கி தயங்கி, பேச ஆரம்பித்தோம்.
'பையன், அவங்க அப்பாவை பார்க்க போகிறேன் என்று சொன்னான்...' என்றார்.
'அத பத்தி தான்...' என்று, நாங்கள் தயங்கியதும், 'என் பையன் உயிரோடு இல்லையா?' என்று அவர் சடாரென்று கேட்கவும், நாங்கள் தான் அதிர்ந்து போனோம்.
நாங்கள் விஷயத்தை சொன்னதும், அப்படியே மவுனமாகி விட்டார். சிவாஜியிடம் நடந்ததை சொன்னோம்.
நான் எழுதிய, பரீட்சைக்கு நேரமாச்சு கதையும், மகனை இழந்த தந்தையின் கதைதான். ஒரு ஜீப்பில் அடிபட்டு, ஒய்.ஜி.மகேந்திரன் இறக்கும் காட்சியை, இயக்குனர் முக்தா சீனிவாசன், பல்கலைக் கழகத்தின் அருகே, பீச் ரோடில் படமாக்கினார். ஷூட்டிங் பார்க்க பெரிய கூட்டம் கூடியிருந்தது. சிவாஜி என்னை தனியாக கூப்பிட்டு, 'கூட்டத்தில் வைத்து எனக்கு சீனை விளக்க வேண்டாம். என் காதில் கேட்கிற மாதிரி, 'டைரக்டர் ' யோகானந்த் என்று மட்டும் ஞாபகப்படுத்து. அந்த புத்திர சோகத்தை நான் வெளிப்படுத்துகிறேன்...' என்றார். அந்த காட்சி மிகவும் உருக்கமாக அமைந்தது.
அப்படத்தில், நடாதூர் நரசிம்மாச்சாரி கதாபாத்திரத்தில், தத்ரூபமாக, ஒரு வைணவப் பெரியவராகவே சிவாஜி வாழ்ந்திருப்பார். முதல் நாள் பார்த்தசாரதி பெருமாள் கோவிலில், சிவாஜி நடந்துவரும் காட்சி படமாக்கிய போது, வைணவ பெரியவர் வேடத்தில் இருந்த சிவாஜியை பார்த்து, பலரும் வியந்து போயினர்.
ஏ.பி.நாகராஜரை பற்றிய ஒரு சுவையான நிகழ்ச்சியை கூறியே ஆக வேண்டும்.
திருவிளையாடல் படத்திற்காக செட்டில் இருந்தபோது, ஏ.பி.என்., நாடகங்களின் உதவியாளர் தசரதன், 'நாளை, நக்கீரனும், சிவனும் மோதும் காட்சி படமாக்கப்பட உள்ளது' என்று கூறியவர், மேலும், நாடக நடிகர் ஒருவர், நக்கீரன் வேடம் போட இருப்பதாக தகவல் சொன்னார். வசனங்களை நல்லா பேசறவங்க இரண்டு பேர், ஒன்று சிவாஜி மற்றவர் ஏ.பி.நாகராஜன். 'கம்பீரமான தோற்றமும், தெளிவான தமிழ் உச்சரிப்பும் கொண்ட ஏ.பி.என்., நக்கீரன் வேடத்தில் நடித்தால், அந்தக் காட்சி சிறப்பாக அமையும். அந்த நாடக நடிகருக்கு, படத்தில் வேறு கதாபாத்திரம் கொடுக்க ஏற்பாடு செய்துவிடலாம்...' என்று, சிவாஜியிடம் யோசனை சொன்னேன். அது அவருக்கு பிடித்துவிட்டது. ஏ.பி.நாகராஜனுக்கு, தகவல் போனது. ஏ.பி.நாகராஜனுக்கு இன்ப அதிர்ச்சி. சிவாஜியின் பிடிவாதத்தால், ஏ.பி.என்., நக்கீரனாக நடித்து கொடுத்தார். சிவனும், நக்கிரனும் சந்தித்து பேசும் காட்சி இன்னும் ரசிகர்கள் மனதில் நிற்கிறது.
சென்னை தூர்தர்ஷன் ஆரம்பிக்கப்பட்ட போது, ஒளிபரப்பான, 'மலரும் நினைவுகள்' நிகழ்ச்சியில் சிவாஜி, என் பெயரை குறிப்பிட்டு, 'இவன் என் பையன். சென்டிமென்ட் டயலாக்கை எல்லாம் லட்டு மாதிரி எழுதுவான். இவன் எப்போதும், என் கூடத்தான் இருக்கணும்...' என்று குறிப்பிட்டார். அந்த நற்பெயர்தான், எனக்கு கிடைத்த ஆஸ்கர் விருது.
சிவாஜியுடன் நான் பழகிய போது நடந்த சம்பவங்களில், கையளவு எடுத்து, தினமலர் - வாரமலர் வாசகர்களுக்கு கொடுப்பதன் மூலம், சிவாஜியை நினைக்கிறேன். கண்களை ஈரத்தால் நனைக்கிறேன்.
கடந்த 1967ம் ஆண்டு முதல், கண்ணாடிப் பேழையில், அவரை வைக்கும் வரை, அவர் கண்பார்வையில் இருந்தேன் என்பதே, எனக்கு கிடைத்த பெரும் பேராக, பாக்கியமாக கருதுகிறேன், என்று முடித்தார், 'வியட்நாம் வீடு' சுந்தரம்.
***
எஸ். ரஜத்
