தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/வியப்பான விசாகம்!

வியப்பான விசாகம்!

வியப்பான விசாகம்!


PUBLISHED ON : மே 23, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 23, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தெய்வங்கள் பூமியில் அவதாரம் செய்யும்போது, குறிப்பிட்ட நட்சத்திரங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர். திருமால், ராமனாகப் பிறக்கும்போது புனர்பூசம், கிருஷ்ணராகப் பிறக்கும் போது, ரோகிணி என, தேர்ந்தெடுத்தார்.

பிறப்பும், இறப்புமற்ற சிவன், பூலோகத்திற்கு தன் அம்சமான முருகனை அனுப்பும்போது, தேர்ந்தெடுத்த நட்சத்திரம், விசாகம். அதுவும் வைகாசி மாத, விசாகம். ஏன் இந்த மாதம், நட்சத்திரம், முருகனுக்கு அமைந்தது தெரியுமா?

வட மண்டலம், தென் மண்டலம் என, இரு பிரிவாக ஆனது, வான மண்டலம். வட மண்டலத்தில், அசுவினி முதல் சுவாதி வரையான, 15 நட்சத்திரங்கள் உள்ளன.

தென் மண்டலத்தின் முதல் நட்சத்திரம் விசாகம். இங்கே, விசாகம் முதல் ரேவதி வரையான, 12 நட்சத்திரங்கள் உள்ளன. விசாகத்திற்குரிய ராசி, துலாம். இதன் சின்னம் தராசு. ஆம்... தராசின் முள் போல நடுநிலையுடன் செயல்பட்டார், முருகன்.

ஏனெனில், அவரால் சம்ஹாரம் செய்யப்பட்ட சூரபத்மன், யாரோ ஒருவனல்ல. முற்பிறப்பில், முருகனின் தாய் பார்வதியின் தந்தையாக இருந்த தட்சன்.

தட்சனின் மகள் என்பதால், பார்வதியை தாட்சாயணி என்றனர். ஆனால், தன் மருமகனான சிவனை அவமதித்து, உயிர் விட்டான், தட்சன். அவனே இன்னொரு பிறப்பில், பத்மாசுரனாகப் பிறக்கிறான். அப்போதும், பிறவி குணம் மாறவில்லை.

எனவே, சிவனின் அம்சமான முருகன், தன் முன்னாள் தாத்தா என்றும் பாராமல், நடுநிலையுடன் நின்று, அவனை சம்ஹாரம் செய்தார். அதாவது, சூரபத்மனைக் கொல்லாமல், மயிலாகவும், சேவலாகவும் மாற்றி, தன் வாகனமாகவும், கொடியின் சின்னமாகவும் ஏற்றார்.

விசாகம் நட்சத்திரத்தை, ராதா என்பர். ராதா என்பதற்கு, 'மேலான படைப்பு' என, பொருள். ஒரு மேலான படைப்பாகவே, அசுரர்களை ஒடுக்க, பூமிக்கு வந்தார், முருகன். இதனால் தான் இதற்கு அடுத்த நட்சத்திரத்தை, 'அனுராதா' (அனுஷம்) என்பர்.

'அனு' என்றால், துணையாக வருவது. முருகனுக்கு உதவியாக வீரபாகு உள்ளிட்ட, நவ வீரர்கள் வந்தனர். இதைக் கருத்தில் கொண்டே, விசாகத்துக்கு அடுத்த நட்சத்திரத்தை, அனுஷம் என்றனர்.

கோடை முடிந்து குளிர் காலத்தின் துவக்கமாக அமையும், வைகாசி. முருகனும், கோடை கால வெப்பம் போல தகித்த அசுரர்களை அழிக்க, குளிர் நிலவாய் தோன்றியவர்.

வைகாசி மாதம் விசாகம் நட்சத்திரம், வான மண்டலத்தைப் பிரிப்பது போல, இந்த மாதம், காலத்தைப் பிரிக்கிறது. மேலும், வான மண்டலத்தின் வட பிரிவை தேவ மண்டலம் என்றும், தென் மண்டலத்தை, அசுர மண்டலம் என்றும் பிரிப்பர்.

முருகன் தேவ மண்டலத்திலிருந்து, அசுர மண்டலத்தின் துவக்கமான விசாக நட்சத்திரத்தில் காலெடுத்து வைத்ததால், அவருக்கு, விசாகம், ஜென்ம நட்சத்திரமாகக் கொள்ளப்பட்டது.

இந்த சிறப்புகளை எல்லாம் மனதில் கொண்டு, நடுநிலை நாளான மே 25, வைகாசி விசாகத்தன்று, முருகப்பெருமானை வணங்கி, அவரது இன்னருள் பெறுங்கள்.

தி. செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us