தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/ஆயுள் தரும் அம்மச்சி மரம்!

ஆயுள் தரும் அம்மச்சி மரம்!

ஆயுள் தரும் அம்மச்சி மரம்!


PUBLISHED ON : செப் 02, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 02, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

இன்று, கிருஷ்ண ஜெயந்தி; இந்நாளில் பட்டு போன பலா மரத்துக்கு பூஜை நடக்கும் கிருஷ்ணன் கோவில் பற்றி தெரிந்து கொள்வோமா...

கேரள மாநிலம், நெய்யாற்றின் கரையில் உள்ளது, பாலகிருஷ்ணன் கோவில். இங்குள்ள,'அம்மச்சி மரம்' எனப்படும், பட்டுப் போன பலா மரத்துக்குத் தான், கிருஷ்ண ஜெயந்தி அன்று, பூஜை நடக்கிறது.

நாகர்கோவில் - திருவனந்தபுரம் சாலையிலுள்ள தக்கலை என்ற ஊரின் அருகில் உள்ளது, பத்மநாபபுரம் அரண்மனை; இங்கு தங்கியிருந்த, திருவிதாங்கூர் மகாராஜா மார்த்தாண்ட வர்மா, ஒருசமயம், திருவனந்தபுரத்திற்கு பயணம் செய்து கொண்டிருந்தார். அவரை வழியில் கொலை செய்ய முடிவு செய்தனர், மன்னரின் எதிரிகள். இதை அறிந்த மன்னர், வழக்கமான பாதையை மாற்றி, நெய்யாற்றின்கரை வழியாக செல்ல முடிவெடுத்தார்.

நெய்யாற்றங்கரையை அடைந்த அவர், பரிசல் ஓட்டிகள் உதவியுடன் அக்கரைக்கு சென்றார். இதை மோப்பம் பிடித்த எதிரிகள், அந்த இடத்திற்கு வந்தனர். அவர்களிடம் இருந்து தப்பி ஒளிய, இடம் தேடினார், மன்னர்.

அங்கே மாடு மேய்த்துக் கொண்டிருந்த சில சிறுவர்கள், அவரை ஒரு பலா மரப் பொந்தில் பதுங்கி இருக்கச் செய்தனர். எதிரிகள் அவரைப் பற்றி விசாரித்த போது, 'அப்படி யாரும் வரவில்லையே...' என, கூறினர், சிறுவர்கள். அதனால், வேறு இடத்துக்கு போய் விட்டனர் எதிரிகள். தன் உயிரைக் காப்பாற்றிய சிறுவர்களுக்கு பரிசளிக்க நினைத்த மன்னர், அவர்களைத் தேடிய போது, காணவில்லை.

மாடு மேய்க்கும் சிறுவர்களின் வடிவில் பகவான் கிருஷ்ணரும், அவரது தோழர்களுமே தன் உயிரை காப்பாற்றியதாக நினைத்த மன்னர், அங்கே கிருஷ்ணருக்கு கோவில் அமைத்தார். சுவாமிக்கு, 'நவநீதகிருஷ்ணன்' என, திருநாமம் சூட்டப்பட்டது. 'நவநீதம்' என்றால் வெண்ணெய்; சிறுவனின் வடிவில் உள்ள இந்த கிருஷ்ணரை, 'பாலகிருஷ்ணன்' என அழைத்தனர், மக்கள். அந்தப் பெயரே கோவிலுக்கு நிலைத்து விட்டது.

கோவில் நுழைவு வாசலில், கிருஷ்ணரின் கீதா உபதேச காட்சி வடிக்கப்பட்டுள்ளது. திருமணத்தடை நீங்கவும், குழந்தைப்பேறு கிடைக்கவும், சுவாமிக்கு மாவு பொடியில் முழு காப்பு மற்றும் சந்தனக் காப்பு செய்கின்றனர்.

பால் பாயசம் நைவேத்யம் செய்யப்படுகிறது. பிரகாரத்தில் சாஸ்தா, கணபதி, நாகர் மற்றும் பள்ளியறை பகவதி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர். சக்தி வாய்ந்த பள்ளியறை பகவதி சன்னிதானம் மட்டும் மலையாள மாதத்தில் முதல் வெள்ளி மட்டுமே திறக்கப்படும்.

மன்னர் பதுங்கியிருந்த புராதன பலா மரத்தின் அடிப்பாகம் இன்றும் இருக்கிறது. தீய்ந்து போன, இந்த மரத்தை, 'அம்மச்சி பிலாவு' என்கின்றனர். தன் பேரன் மீது பாசம் வைக்கும் அம்மாச்சியைப் போல், மன்னரின் உயிர் காத்ததால், இம்மரத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. தீர்க்காயுளுடன் வாழ, இந்த மரத்தை வணங்குகின்றனர். கிருஷ்ணரின் கையில் வெண்ணெய் வைத்து வழிபாடு செய்கின்றனர்.

இங்கே ஒரு கனமான உருண்டை கல் இருக்கிறது. மன்னரின் உயிரை காப்பாற்றிய ஊர் என்பதால், மார்த்தாண்ட வர்மா தன்னுடைய படைக்கு ஆட்களை இங்கு தேர்வு செய்துள்ளார். பணியில் சேர விரும்புவோர், இந்த கல்லைத் துாக்க வேண்டும்; அப்போதுதான் படைக்கு தேர்வு செய்யப்படுவர். தற்போதும் அந்த கல் இருக்கிறது; ஆனால், எவராலும் துாக்கத்தான் முடிவதில்லை.

நாகர்கோவிலில் இருந்து, 46 கி.மீ., துாரத்தில், நெய்யாற்றின்கரையில் பேருந்து நிலையத்தை ஒட்டிய, ரவுண்டானா அருகில் உள்ளது, இக்கோவில்!

தி.செல்லப்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us