தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அம்மாவின் பொற்காலம்!

அம்மாவின் பொற்காலம்!

அம்மாவின் பொற்காலம்!


PUBLISHED ON : மே 13, 2018

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 13, 2018


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சமையல் முடித்து, 'பேக்கிங்' ஆன பின், ''இன்னிக்கு ஜான் வீட்டுல பஞ்சாயத்து... மொத்தமா ஓட்டல்ல ஆர்டர் பண்ணிக்கலாம்ன்னு பிரண்ட்ஸ் சொல்லிட்டாங்க... நான், 10 நிமிஷத்துல கிளம்பறேன்,'' என்று சுந்தர் சொன்னதும், உள்ளே பொங்கி வந்த கோபத்தை கட்டுப்படுத்தி, ''இந்த விஷயம் நேத்திக்கே தெரியுமா?'' என்று கேட்டாள்.

''தெரியும்...''

''சொல்லியிருக்கலாம்ல... இன்னைக்கு வெறும், 'லெமன் ரைஸ்' போதும்ன்னு நெனச்சேன்; மனசு கேக்காம, சாம்பார், பீட்ரூட் கறி, கீரை கூட்டுன்னு செஞ்சுட்டேன்... இப்ப என்னடான்னா வேணாம்ன்னு சொல்றீங்க,'' என்றாள்.

''இப்ப என்ன... சாப்பிடணும் அவ்வளவு தானே... போடு கொட்டிக்கறேன்.''

''இதென்ன இவ்ளோ கடுமையா பேசுறீங்க... இதுல, கோபப்பட என்ன இருக்கு...'' என்றாள்.

''கடுமையா பேசுறேனா... சமைக்கிறதுக்கு முன், ஒரு வார்த்தை கேட்டீயா... என்னை தப்பு சொல்றே...''

''இது, தெனப்படி வேலை தானே...''

''சரி விடு... நான், ஜான் வீட்டுக்கு போகல; உன் கேரியரை துாக்கிட்டு ஆபிஸ் போய் அடைச்சுக்கறேன்.''

அவன் அருகில் போய் நின்ற யமுனா, ''ஜான் வீட்டுல என்ன பஞ்சாயத்துன்னு தெரிஞ்சுக்கலாமா?''

''ஏன் அதுக்கும் ஒரு, 'அட்வைஸ்' பண்றதுக்கா?''

''ஏன் இப்படி பேசறீங்க... என் மேல, உங்களுக்கு என்ன கோபம்?''

''எனக்குன்னு, 'பிரைவசி' இருக்கக் கூடாதா... எனக்கு அவன், 20 வருஷ நண்பன்... நீ வந்து ரெண்டு வருஷம் தான் ஆகுது; அவனுக்கு ஒரு பிரச்னை... 'கொஞ்சம் வந்து பாரேன்'னு கூப்பிடறான், போறேன்...''

''சுந்தர்... நான் கேட்டதுக்கு காரணம் இருக்கு... ஜான் ஒரு நண்பரா சரியா இருக்கலாம்; ஆனா, ஒரு கணவரா எப்படி இருக்கார்ன்னு உங்களுக்கு தெரியுமா... அவரோட மனைவிய ரெண்டு நாளைக்கு முன், எங்க ஆபீஸ் கேன்டீன்ல பாத்தேன்... அலுவலகத்துல நாலு பேரு கிட்ட பேசத் தான் வேண்டி வரும்... 'ஏன் இவ்வளவு கால்ஸ் வருது, ஏன் லேட்டாகுது, சம்பளத்துல ஏன் நாலாயிரம் ரூபாய் குறையுது, குர்த்திக்கு ஷால் போடாம கெளம்பாதேன்'னு ஒரே கண்டிஷனாம்... என்கிட்ட கண் கலங்கினா...

''நாலு வருஷம் ஆகியும் மனைவிய புரிஞ்சுக்காம, சந்தேகப்படுறது சரியா... அவள, அஞ்சு வருஷமா எனக்கு தெரியும்; ரொம்ப நல்லவ. உங்க நண்பர்கிட்ட பேசும்போது, அவளுக்கு ஆதரவா பேசுங்க,'' என்றாள்.

''எனக்கு, என் நண்பனின் சந்தோஷம் தான் முக்கியம்... அவன் பொண்டாட்டிக்காக எல்லாம் பேச முடியாது,'' என்றான்.

யமுனாவிற்கு எரிச்சலாக வந்தது. ஜானின் மனைவி உண்மையிலேயே நல்ல பெண்; ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, கல்வி மூலம் மேலே வந்தவள். கஷ்டம் தெரிந்து வளர்ந்த பொறுப்பான பெண்; திறமைசாலி. அவள் மதிப்பை உணர்ந்து, கம்பெனியும் அவளை மேலே உயர்த்துகிறது. இது, அவள் கணவனுக்கு பிடிக்கவில்லை. ஆண் எனும் ஆதிக்க உணர்வு, மனைவியின் மேன்மையை ஒப்புக்கொள்ள மறுக்கிறது.

'ஜானுக்கு மட்டுமா... சுந்தருக்கு கூடத் தான், அழகான புடவையோ, வெஸ்டர்ன் டிரஸ்சோ அணிந்து அலுவலகம் கிளம்பினால் பிடிப்பதில்லை. யாரிடமாவது சிரித்து பேசினால் முகம் கறுக்கிறது. ஏன் இப்படி இருக்கின்றனர்... வீடு என்று வந்து விட்டால் அன்பும், மகிழ்ச்சியும் தான் முக்கியம் என்கிற சிறு புரிதல் கூட இல்லையே...' என்று மனதிற்குள் புலம்பிக் கொண்டிருந்த போது, சாவியை எடுத்து, கிளம்பினான்.

''சுந்தர் சாப்பிட்டு போங்க...''

''நீயே சாப்பிடு; தலை வலிக்குது... எதை எடுத்தாலும் ஆர்கியுமென்ட்... இப்படியே போனா, ஜான் மாதிரியே நானும் பஞ்சாயத்துக்கு அலைய வேண்டியது தான்...'' என்று கூறி, கதவை அறைந்து சாத்தி, சென்றான்.

'எவ்வளவு பெரிய வார்த்தை இது... இதற்கு என்ன அர்த்தம்... உள்ளுக்குள்ளே இருந்து இன்று சடாரென்று வந்து விட்டதா... சே... இப்படி உள்ளே ஒன்றும், வெளியே ஒன்றும் வைத்திருப்பவனுடன் எப்படி சந்தோஷமாக வாழ முடியும்... அன்பிற்கு மட்டும் தான் அவளால் கீழ்படிய முடியுமே தவிர, இப்படி அதிகாரத்திற்கோ, ஆதிக்கத்திற்கோ அல்ல. உண்மையாக இல்லாதவனுடன் சேர்ந்து இருக்கவே முடியாது...' உள்ளுக்குள் கோபமும், ஆத்திரமும் பொங்கின.

வீட்டை பூட்டி, அம்மா வீட்டுக்கு கிளம்பினாள்.

ஓடி வந்து அணைத்துக் கொண்ட அம்மா, ''வா யமுனா... பாத்து ஒரு வாரமாச்சேன்னு மனசு அடிச்சுக்கிட்டது; லீவு போட்டியா... கண்ணெல்லாம் உள்ள போயிருக்கேடி... மாப்பிள்ள ஆபிஸ் போயாச்சா... இரு, மொதல்ல, 'லெமன் சர்பத்' தரேன்,'' என்று சிறுமி போல ஓடினாள்.

'அம்மா, உன் அன்புக்கு முன், வானம் கூட மிகச் சிறியது. எப்படி வளர்த்தாய் என்னை... நல்லவளாக, வல்லவளாக, அன்புள்ளவளாக, புரிந்து கொள்பவளாக... ஆனால், 'ஜஸ்ட் லைக் தட்' என்பது போல நடந்து கொள்கிறானம்மா நீங்கள் பார்த்து வைத்த மாப்பிள்ள...' என்று மனதுக்குள் புலம்பினாள்.

''இரு, நிமிஷத்துல மோர்க்குழம்பு பண்ணிடறேன்... ஜவ்வரிசி வடாம் பொரிக்கட்டுமா... ராத்திரி மாப்பிள்ள வந்து கூட்டிட்டு போறாரா...''

''இல்லம்மா... இனிமே, இங்கதான் இருக்கப் போறேன்,'' என்றாள்.

''புரியல...''

''சுந்தர எனக்கு பிடிக்கல... எப்ப பாத்தாலும் ஏட்டிக்கு போட்டி. என், மதிப்பு என்னன்னு புரிஞ்சுக்காத அசமஞ்சம்...'' படபடப்புடன் சொல்லி அழுதாள்.

''சரி... மொதல்ல சர்பத் குடி... வெயில்ல வந்திருக்கே...''

''நீதான் அப்பாகிட்ட சொல்லணும்... நீ சொன்னாதான் கேட்பார்.''

''சரி சரி...'' என்று, அவள் குடித்த கோப்பையை வாங்கி, கீழே வைத்து, வாஞ்சையுடன் மகள் தலையை வருடி, ''உன் வேதனை புரியுது; நம்ம அருமை புரிஞ்சுக்காத ஆளோட வாழறது வேதனை தான்... எனக்கும் அது தெரியும்; கல்யாணமாகி வந்த புதுசுல, இதெல்லாம் அனுபவிச்சுருக்கேன்,'' என்றாள்.

''என்னம்மா சொல்றே... உன் மீது உயிரையே வெச்சிருக்காரே அப்பா... நீ கிழிச்ச கோட்டை தாண்ட மாட்டாரே... அவரா உன் அருமை தெரியாம இருந்தார்...'' என்றாள், ஆச்சரியத்துடன்!

''ஆமாம்; அது மட்டுமில்ல, குடிப்பார், ரேஸ் கோர்ஸ்லயே பழியா கெடப்பார்... சிகரெட் இல்லாம இருக்கவே மாட்டார். வேணும்ன்னே ஏதாவது தப்பு கண்டுபிடிச்சு அடிப்பார்... அடின்னா சாதாரண அடி இல்ல; கையில கிடைக்கிறத எடுத்து வீசறது, தலைய சுவத்துல மோதுறது, வயத்துல மிதிக்கிறது...''

''இதெல்லாம் நீ சொன்னதே இல்லயே...''

''இப்பவும் சொல்லியிருக்க மாட்டேன்; உன் வாழ்க்கை பத்தின பயம் தான் சொல்ல வைக்கிறது. ஒரு தடவை, சாப்பிடற தட்டை வீசி எறிஞ்சார்... நெத்தி கிழிஞ்சு ரத்தம் கொட்டியது; தையல் போட்ட லேடி டாக்டர், 'ஏன் அந்த ஆள் கூட இருக்கே... வந்துடு, 'லேப் அசிஸ்டென்ட் வேலை வாங்கித் தரேன்'னு சொன்னா.

''ஆனா, எங்க போனாலும் உலகம் இப்படித்தான் இருக்கும்; ஆண் என்கிறவன் இப்படித்தான் இருப்பான்ங்கிற தெளிவு அந்த வயசுலேயே எனக்கு இருந்துச்சு. பொருந்தி வராத கணவனையோ, மனைவியையோ மாத்திக்கிட்டே போகிறது தீர்வு இல்லன்னு நினைச்சேன். குடும்பங்கிற அமைப்பு நமக்கு வேணும்; பாதுகாப்பு, அன்பு, துணை, தோழமை எல்லாம் வேணும்... அதனால, உதறிச் செல்லாமல் உள்ளுக்குள் இருந்துகிட்டே போராட தீர்மானிச்சேன்.''

குறுக்கிடாமல் கவனித்தாள், யமுனா.

''தைரியத்த வளத்துக்கணும்ன்னா முதல்ல சுயமா நிக்கணும்ன்னு தீர்மானிச்சேன்... எனக்கு தெரிஞ்ச தையல் வேலைய, இன்னும் ஆழமா கத்துகிட்டேன். வீடு தேடி வந்த வாடிக்கையாளர்களுக்கு ரவிக்கை, சுடிதார், பாபா சூட், நைட்டி மற்றும் பாவாடைன்னு தைச்சுக் கொடுக்க, கை நெறைய காசு வந்தது...

''ஏழை பெண்களுக்கு இலவசமா டெய்லரிங் சொல்லிக் கொடுத்தேன்... அப்பத்தான், உங்கப்பாவுக்கு என் மீது மரியாதை வந்தது. கொஞ்சம் கொஞ்சமா கெட்ட பழக்கங்கள விட்டு, தன் ஆரோக்கியத்தையும் மீட்டு, வீட்டோட அருமையையும் புரிஞ்சுகிட்டார். தன் பழைய குணங்கள், பழக்கங்கள் எதையும் நினைவுபடுத்தாம சந்தோஷமா வாழற என் மனசை புரிஞ்சுகிட்டார். அப்ப, ஆரம்பிச்சது எங்களோட பொற்காலம்... அந்த வருஷம் தான் நீ பொறந்தே....''

புன்னகையுடன் எழுந்தாள், அம்மா.

'என்ன சொல்கிறாள் அம்மா... அமைப்பின் உள்ளேயே இருந்துதான் போராட வேண்டும் என்றா... பனித்துளிக்குள் இருக்கும் சூரியனை நாம்தான் தேட வேண்டும்; அடிமைத்தனத்திலிருந்தும், அறியாமையிலிருந்தும் வெளியே வருவது அவரவர் கைகளில் தான் இருக்கிறது என்றா சொல்கிறாள்...' அவளுக்குள் மாறுபட்ட சிந்தனை உதயம் ஆனது.

''சமையலறையில என்னம்மா செய்றே?''

''அடைக்கு ஊறப் போடறேன்... உனக்கு ரொம்ப பிடிக்குமே...''

''இல்லம்மா கிளம்பறேன்... சுந்தருக்கு சப்பாத்தி ரொம்ப பிடிக்கும்; நைட் செய்து வைக்கணும்,'' என்ற மகளை மென்மையாக அணைத்து, முத்தமிட்டாள், அம்மா.

வானதி

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us