PUBLISHED ON : ஏப் 10, 2011

கேரள மாநிலம், கோட்டயம் செல்வதற்காக திருவனந்தபுரம் மெயிலில் அமர்ந்து இருந்தோம்; இடம், சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன்.என்னையும், லென்ஸ் மாமாவையும் தவிர, குப்பண்ணாவும், அன்வர் பாயும் உண்டு.
பயண திட்டம் தயாராகும் போதே, 'பஸ்ட் கிளாஸ், டிக்கெட் எடுத்தால் தான் வருவேன்...' எனக் கூறி விட்டார் அன்வர் பாய். செலவை பொருட்படுத்தாமல், அதே போல செய்திருந்தார் மாமா!
ரயில் கிளம்பி தட, தடவென ஓட ஆரம்பித்திருந்தது... 'ரயிலில் சென்ற ஒரு பண்ணையாரின் கதை சொல்லட்டுமா?' எனக் கேட்டார் குப்பண்ணா; அனைவரும் தலையாட்டினோம்...
வெள்ளைக்காரன், அப்போது தான் நம் நாட்டில் ரயில் விடத் தொடங்கி இருந்த காலம். ஒரு பண்ணையார், முதன்முதலாக பக்கத்து டவுனுக்கு மாட்டு வண்டியில் போய் விட்டு, திரும்பி வரும் போது ரயிலில் பயணம் செய்தார்.
பண்ணையாருக்கு வெற்றிலை போடும் பழக்கம் உண்டு. வெற்றிலை போட்டுக் குதப்பி, இரண்டு விரல்களை உதட்டின் குறுக்கே வைத்து, 'சர்'ரென்று வெற்றிலை எச்சிலை ஜன்னல் பக்கமாகத் துப்பினார்.
ஜன்னலில் கண்ணாடி உண்டு... அது, இறக்கப்பட்டிருக்கிறது என்பது பற்றி எல்லாம் அவருக்குத் தெரியவில்லை; முதல் பயணமாயிற்றே... எச்சில் அதில் பட்டு, எதிரே இருந்தவர் முகமெல்லாம் தெறித்தது. ஒருவன், பண்ணையாரை ஓங்கி அறைந்து விட்டான்.
கிராமத்துக்கு வந்த பண்ணையாரிடம், 'ரயில் பயணம் எப்படி?' என்று கேட்டனர். 'நன்றாகத்தான் இருந்தது... வெற்றிலை எச்சிலைத் துப்பினால் மட்டும் திருப்பித் துப்பி, அடிக்கின்றனர்!' என்றாரே பார்க்கலாம் பண்ணையார் எனக் கூறிச் சிரித்தார் குப்பண்ணா.
'ரயில் பற்றி நான் ஒரு தகவல் சொல்றேன் பா...' என்ற அன்வர் பாய் தொடர்ந்தார்...
'இந்தியாவின் முதல் ரயில்வே போக்குவரத்து எங்கிருந்து, எங்கு விடப்பட்டது என்று கேட்டால், மும்பையிலிருந்து, தானாவிற்கு என்று உடனே சொல்லி விடுவீர்கள். இரண்டாவது ரயில் பாதை எங்கு அமைக்கப்பட்டது தெரியுமா? சென்னை வியாசர்பாடியிலிருந்து, வாலாஜா ரோட்டிற்கு... 21 கி.மீ., தூரம் பாதை அமைக்கப்பட்டு ரயில் விடப்பட்டது...' என்றார்.
'ரயில் கதை கிடக்கட்டும்... சுவாரசியமாக ஏதாவது சொல்லும்...' என குப்பண்ணாவிடம் கேட்டபடியே, உ.பா.,வை வாயில் கவிழ்த்துக் கொண்டார் லென்ஸ் மாமா...
'இதோ...' என்றபடியே, தாம் குதப்பிக் கொண்டிருந்த வெற்றிலையை வெளியே சென்று துப்பிவிட்டு வந்த குப்பண்ணா ஆரம்பித்தார்...
புதுவையில், கவிஞர் பாரதிதாசன் குடியிருந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டுக்காரர், கவிஞரிடம் பகை கொண்டிருந்தார். அவரால், கவிஞருக்குச் சில இடையூறுகள் நேர்ந்தன. பக்கத்து வீட்டுக்கு சில அடியாட்கள் அடிக்கடி வந்து போவர்.
இவைகளுக்கெல்லாம் அஞ்சுபவரா கவிஞர்! அவர் குடியிருந்த வீட்டிற்கெதிரில் ஒரு காலி மனை இருந்தது. அதன் உரிமையாளரை அணுகி, அந்த இடத்திற்கு வாடகை பேசிக் கொண்டார். இடத்தை சுத்தப்படுத்தச் செய்தார். சிலம்பப் பயிற்சி செய்யும் திடலாக அதை மாற்றினார். இளைஞர் சிலரைக் கூட்டி வந்து, அங்கு காலையும், மாலையும் பயிற்சி செய்ய வைத்தார். கோல் சண்டை, குத்துச் சண்டை முதலிய விளையாட்டுக்கள் அங்கு நடைபெற்றன.
இதைக் கண்டு அஞ்சிய கவிஞரின் பக்கத்து வீட்டுக்காரர், வீட்டைக் காலி செய்து விட்டுப் போய் விட்டாராம். முள்ளை முள்ளால் எடுத்தத் திறம் இதுவன்றோ?
அக்காலத்தில் கவிஞர் அடிக்கடி தம் வீட்டை மாற்றுவார். கவிஞர் கூனிச்சம்பட்டியில் பணியில் இருந்த சமயம் அது. அந்த வீட்டிற்கு அடுத்த வீட்டுக்காரரும் அடிக்கடி தொந்தரவு கொடுத்து வந்தார்.
ஒருநாள் விடியற்காலை, ஐந்து மணியளவில் அந்த வீட்டுத் தெருக்குறட்டில் தப்பு, சேமக்கலம் ஒலிக்கலாயிற்று; இவை இரண்டும், இறந்தவர் வீட்டில் பயன்படுத்தும் வாத்தியங்கள்.
வீட்டுக்காரர் (கவிஞரின் பகைவர்) கதவைத் திறந்து பார்த்த போது ஒருவர் மேற்சொன்ன எறிமணியை (சேமக்கலம்) அடித்துக் கொண்டிருக்கக் கண்டார். அடிப்பதை நிறுத்தச் சொல்லி, 'என்ன சேதி?' என்று கேட்டார். அதற்கு அவர், 'இந்த வீட்டில் யாரோ இறந்து விட்டதாகச் சொல்லி, முன் பணம் கொடுத்து, காலை, ஐந்து மணிக்கு வந்து அடிக்கச் சொல்லி ஒருவர் சொன்னார்!' என்று பதிலளித்தார்.
'சொன்னவன் எவன்?'
'யாரோ ஒருவர் வந்து சொன்னார்...'
'இந்த வீட்டில் இல்லை; போய் விடு!' என்று கூறி, விரட்டி விட்டார்.
தப்பு - சேமக்கலம் அடிக்கக் கேட்டு, தெருவில் பலர் விழித்துக் கொண்டனர். அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் விசாரிக்க வந்து விட்டனர். அவர்களுக்கு பதில் சொல்வதே பக்கத்து வீட்டுக்காரருக்கு பெரிய வேலையாகி விட்டது.
கவிஞர் இந்த ஏற்பாடுகளை செய்து விட்டு, விடியலிலேயே கிளம்பி விட்டார். பக்கத்து வீட்டுக்காரர், 'கவிஞர் தாம் இந்த ஏற்பாட்டைச் செய்திருக்க வேண்டும்...' என்று முடிவு செய்து கொண்டார்.
இதனால், கவிஞரைப் பார்க்கும் போதெல்லாம் வசைபாடலானார். 10 நாட்களுக்குப் பிறகு, ஒருநாள், பகல், 12 மணி அளவில், அக்கா பரதேசி மடத்தைச் சேர்ந்த ஏழெட்டுப் பரதேசிகள் வந்து, பக்கத்து வீட்டில் நுழைந்தனர். அந்த வீட்டுக்காரர், 'என்ன?' என்று கேட்க, 'இன்று புண்யாவசனம் என்றும், ஏழைகளுக்கு உணவளிக்கப்படும் என்றும், சரியாக 12 மணிக்கு பகல் உணவிற்காக இந்த முகவரிக்கு வர வேண்டும் என்றும் யாரோ மடத்தில் வந்து சொன்னார்கள்...
அதனால்,வந்தோம்!' என்றனர்.
'இங்கு புண்ணியாவசனமும் இல்லை; ஒரு மண்ணுமில்லை. போங்கடா வெளியே!' என்று அவர் பரதேசிகளைத் துரத்த, அவர்கள் தெருவில் நின்று வசை பொழிந்து சென்றனர்.
இந்த உத்திகளெல்லாம் பாவேந்தருக்கே உரியன. பகைவர்களை அடக்க அவர் செய்த தந்திரங்கள் என்று பாவலர் மணிசித்தன், 'பாவேந்தருடன் பயின்ற நாட்கள்' என்ற நூலில் குறிப்பிட்டு இருக்கிறார்...' என முடித்தார்.
மாமா, 240 மி.லி., முடித்து இருந்தார்... 'பசிக்கிறதே...' என அன்வர் பாய் கூறவும், மல்லிகைப் பூ போன்ற இட்லியை எடுத்து வைத்தார் லென்ஸ் மாமா... அவர் வீட்டிலிருந்து எடுத்து வந்திருந்தார். இட்லியின் மீது பொடி தடவப்பட்டு இருந்தது. அத்துடன் சிதம்பரம் கொத்சு, காய்ந்த மிளகாய், தேங்காய் இட்டு அரைக்கப்பட்ட வழிச் சட்டினி... ஒரு பிடிபிடித்து, தூங்கி எழுந்த போது எர்ணாகுளம் டவுன் ஸ்டேஷனில் வண்டி நின்று கொண்டிருந்தது.
படுக்கையை எடுத்துச் செல்ல வந்த அட்டண்டர், முகம் துடைக்கக் கொடுத்த சிறிய டவல் நான்கில் ஒன்றைக் காணோம் என தொணத்திக் கொண்டிருந்தார்.
'சரி... அதற்கு பைன் ஏதும் இருந்தால் சொல்லுங்கள்... கொடுத்து விடுகிறோம்...' என்றதும், டி.டி.,யை அழைத்து வந்தார். அவர், 'சார்... அந்த டவலின் விலை 24 ரூபாய்... இவரிடமே கொடுத்து, ஒரு கடிதமும் எழுதிக் கொடுத்து விடுங்கள்... இல்லை என்றால் இவர் சம்பளத்தில் பிடித்து விடுவர்...' என்றார்.
பணத்தைக் கொடுத்த பின், அந்த அட்டண்டர், 'மீண்டும் தேடிப் பார்க்கிறேன்...' எனச் சொல்லி, மேல் பர்த்தில் தேட, அங்கிருந்த பள்ளத்தில் டவல் கிடைத்தது.
'தப்பா நினைக்காதீங்க சார்... எவ்வளவு பணம் படைத்தவராக இருந்தாலும், சிலர், இது போன்ற சின்னச் சின்ன பொருட்களை எடுத்துச் சென்று விடுவர்... இப்படித்தான் பாருங்கள்... நடிகை ஒருவருடன் வரும் உதவியாளப் பெண், மூன்று முறை இதே வேலையைச் செய்து விட்டார்... நான்காம் முறை பிடித்து விட்டேன். தன் பெட்டியிலிருந்து எடுத்துக் கொடுத்தவர், 'டிக்கெட் காசில் இதுவும் அடக்கம் என நினைத்து விட்டேன்...' என்றாரே பார்க்கணும்...' என்றார் மலையாளம் கலந்த தமிழில்!
— ஒருவர் முகத்தை ஒருவர் குசும்பாகப் பார்த்துக்கொண்டோம்!
***
