sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஆங்கோர் ஏழைக்கு...

/

ஆங்கோர் ஏழைக்கு...

ஆங்கோர் ஏழைக்கு...

ஆங்கோர் ஏழைக்கு...


PUBLISHED ON : ஜன 01, 2023

Google News

PUBLISHED ON : ஜன 01, 2023


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செல்வராணியின் கணவர், பெங்களூரிலிருந்து சென்னைக்கு மாற்றல் வாங்கி வருவதற்குள், ஏழெட்டு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. சென்னை வந்த பின்பும், முன்பு தன் வீட்டில் வேலை செய்த சுகந்தியின் அம்மா மீனாட்சியை பார்த்து விட்டு வர, செல்வராணியால் முடியவில்லை.

செல்வராணியின் கணவருக்கு, பெங்களூருக்கு மாற்றல் கிடைத்த காலகட்டத்தில், மொபைல் போன் புழக்கத்துக்கு வரவில்லை. தொடர்புக்கு கடிதங்களை மட்டுமே பெரிதும் நம்பியிருந்தனர்.

ஆரம்ப நாட்களில், செல்வராணிக்கும், மீனாட்சி அம்மாளுக்கும் கடிதத் தொடர்பு இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாய், அதுவும் ஒரு கட்டத்தில் நின்று, தொடர்பற்றுப் போனது.

சென்னையின் புறநகரொன்றில், செல்வராணியின் வீடிருந்த தெருவில் தான், மீனாட்சி குடும்பமும் குடியிருந்தது. அதை வீடென்று சொல்வது ஒரு அடையாளத்துக்கு தான்.

வீடு இருந்த நிலத்துக்குச் சொந்தக்காரர், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, நிலத்தை காப்பாற்ற, சின்னதாய் குடிசை போட்டு, அதில், மீனாட்சியின் குடும்பத்தை காவலுக்காக குடி வைத்திருந்தார்.

மீனாட்சியின் கணவர், கம்பி கட்டும் கட்டட வேலையில் இருந்தார். அவர் எப்போதும் வேலை முடிந்து, மூக்கு முட்டக் குடித்துவிட்டு, வந்து மீனாட்சி, சுகந்தியை அடிப்பது, ஆபாசமாய் பேசுவது என்று, வீடே எப்போதும் கலவரமாக இருக்கும்.

மிக சுத்தமாகவும், நறுவிசாகவும் வீட்டு வேலை செய்வாள், மீனாட்சி. செல்வராணியின் வீட்டில் வேலை செய்ததுடன், மீதி நேரம், பூ கட்டி வியாபாரம் செய்து வருமானம் ஈட்டி வந்தாள்.

பாத்திரம் தேய்த்துக் கொடுக்கிற வேலைக்கென்று வந்தவள், அவளாகவே வீடு, வாசல் பெருக்குவது, வாரம் ஒருமுறை வீட்டை துடைப்பது, வாஷிங் மிஷினில் போட முடியாத உருப்படிகளை துவைத்துக் கொடுப்பது என்று, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்தாள். சுகந்தி, ஐந்தாம் வகுப்பை படித்து முடிக்கவும், அதன்பின், அவளை பள்ளிக்கு அனுப்புவதில் ஆர்வம் காட்டவில்லை, மீனாட்சி.

செல்வராணி விசாரித்தபோது, 'பொட்டப் புள்ள அதுக்கு மேல படிச்சு என்ன பண்ணப் போறாள்?' என்று, விட்டேத்தியாக சொன்னாள்.

'இந்த காலத்துல போய் இப்படிப் பேசுறீங்க. எந்தப் பிள்ளையா இருந்தாலும் படிக்க வைக்கணும் மீனாட்சி...' என்று வற்புறுத்தியபோது, படிப்பை நிறுத்தியதற்கான காரணத்தை சொன்னாள்...

'அவள் படிச்ச அரசாங்க பள்ளியில், ஐந்தாம் வகுப்பு வரை தான் இருக்கு. அதுக்கு மேல படிக்க அனுப்புறதுன்னா, அம்பத்துார் இல்ல ஆவடிக்கு போகணும். பொட்டப் புள்ளைய தனியா அனுப்ப முடியாது. தினமும், இவள யாரு ஸ்கூலுல விட்டுட்டு சாயங்காலமானா கூட்டிக்கிட்டு வர்றது?' என்றாள்.

வீடு அருகே உள்ள தனியார் பள்ளியில், சுகந்தியை சேர்த்து விடும்படியும், அவளது படிப்புச் செலவுகளை தானே ஏற்பதாகவும் கூறினாள், செல்வராணி. தடாலென்று செல்வராணியின் கால்களில் விழுந்து கதறி, நன்றி தெரிவித்தாள், மீனாட்சி.

முதலில், ஆங்கில வழி கல்வியை படிப்பதற்கு மிகவும் திணறினாள், சுகந்தி. அவளின் பயம் போக்கி, மெதுவாய் படிப்பதில் ஆர்வமூட்டி படிக்க வைத்தாள், செல்வராணி. பிளஸ் 2 வரை, ஒரு பிரச்னையும் இல்லாமல் படித்து முடித்தாள், சுகந்தி.

பிளஸ் 2வில் பிரமாதமான மதிப்பெண்கள் வாங்கவில்லை. ஆனாலும், சுகந்திக்கு இன்ஜினியரிங் படிக்க ஆசை. அவளின் மதிப்பெண்களுக்கு, அரசு கல்லுாரிகளில் இடம் கிடைக்கவில்லை.

சுகந்தி, படித்து தலையெடுத்தால் அவளின் குடும்ப வறுமை போகும் என்ற எண்ணத்தில், தன் கணவரிடம் சொல்லி, சுயநிதி பொறியியல் கல்லுாரி ஒன்றில் பெருந்தொகை கட்டி சேர்த்து விட்டாள்,, செல்வராணி..

பிளஸ் 2 வரை சுமாராக படித்த சுகந்திக்கு, திடீரென்று படிப்பின் மீது அக்கறை வந்து, கல்லுாரியில் மிக நன்றாக படிக்கத் துவங்கினாள். செமஸ்டர் தேர்வில் அதிக மதிப்பெண்களையும் எடுத்தாள்.

சுகந்தி அப்பா, அவ்வப்போது குடித்து விட்டு வந்து சண்டை போடுவதும், தெருவில் நின்று, மனைவியையும், மகளையும் ஆபாசமாக பேசுவதும் தொடர்ந்து கொண்டிருந்தது. அது மரத்துப் போனதாலோ அல்லது பழகிப் போனதாலோ, அவர்கள், அவரை சட்டை செய்வதில்லை.

இன்ஜினியரிங் முடித்து, கல்லுாரி கேம்பஸ் இன்டர்வியூவில், மொபைல் போன் தயாரிப்பு கம்பெனி ஒன்றில், சுகந்திக்கு வேலையும் கிடைத்தது.

ஒரு வருஷம் பயிற்சி. மாதம், 12 ஆயிரம் ரூபாய் சம்பளம். முடிந்ததும், ரெகுலர் வேலைக்கான போஸ்டிங். மீனாட்சியின் வாழ்க்கையில் விடிவுகாலம் பிறந்து விட்டது என்று செல்வராணியும், அவள் கணவனும் சந்தோஷப்பட்டுக் கொண்டனர்.

ஆனால், அந்த சந்தோஷம் நான்கைந்து மாதங்கள் கூட நிலைக்கவில்லை. சுகந்திக்கு திருமணம் செய்ய, வரன் பார்த்து விட்டதாய் மீனாட்சி சொல்லவும், செல்வராணிக்கு அதிர்ச்சியாய் இருந்தது.

சுகந்தி, நாலு வருஷமாவது வேலைக்கு போனால், குடும்பம் முன்னுக்கு வரும் என்று, செல்வராணி எவ்வளவோ எடுத்துக் கூறியும், ஏற்கவில்லை, மீனாட்சி.

'என் புருஷன் எந்த நேரம் என்ன பண்ணுவானோன்னு பயமா இருக்கு. அவரோட சொந்தத்துல தான் சுகந்திக்கு கல்யாணம் பண்ணணும்னு, இப்பவே சண்டை போடத் துவங்கிட்டார்.

'பத்து நாளைக்கு முன், பாதிக் கிழவன வீட்டுக்கு கூட்டிக்கிட்டு வந்து, அவனுக்கு ரெண்டாம் தாரமா, சுகந்திய கல்யாணம் பண்ணி வைக்கப் போறதா சொல்லி, ஒரே சண்டை. அதனால தான் சுகந்திய ஒரு கவுரவமான இடத்துல கல்யாணம் கட்டிக் குடுத்து, வீட்லேர்ந்து வெளியேத்திடணும்ன்னு முடிவு பண்ணிட்டேன்...' என்றாள்.

'மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துன கதையா இருக்கு, நீங்க பண்றது. வீட்டுக்காரருக்கு தெரியாமல், நீங்க, உங்க மகளை கூட்டிக்கிட்டு துாரமா போய், தனியா வீடெடுத்து தங்கிக்குங்க. நான் வேணா அதுக்கு ஏற்பாடு பண்றேன்...' என்றார், செல்வராணியின் கணவர்.

'இந்த சமூகத்துல, ரெண்டு பொம்பளைங்கள தனியா வாழ விட்ருவாங்களா, சார்... இப்பவே, என்கிட்ட பூ வாங்குறது மாதிரி, எவ்வளவு ஆம்பளைங்க என் கையச் சுரண்டி பச்சையா, கூப்பிடுறாங்க தெரியுமா? என் புருஷன் என்னதான் குடிகாரனா இருந்தாலும், எங்களுக்கு ஆம்பளத் துணையா இருக்கிறான். அவன் இல்லாட்டி எங்களை சீரழிச்சிருவாங்க சார்...'

விசாகப்பட்டினத்தில், மீனாட்சியின் அக்கா பரிந்துரையில் தான், ராகவேந்தர் என்பவனுக்கு, சுகந்தியை திருமணம் செய்து அனுப்பி வைத்தனர். ஆனால், அவள் சந்தோஷமாக இருக்கவில்லை என்பது தான் அவலம்.

திருமணமாகி மூன்றே மாதத்தில், கட்டின புடவையும், கழுத்தில் மஞ்சள் கயிறுமாய் அம்மா வீட்டிற்கு திரும்பி வந்தாள், சுகந்தி.

ராகவேந்தர் பற்றிய தகவல்கள் மொத்தமும் பொய்யாய் இருந்தன. அவனுடைய குடும்பத்திற்கு இருந்த கடன்களை அடைக்க, திருமணம் செய்துள்ளான். சுகந்தியிடம் நைசாக பேசி, அவள் அணிந்திருந்த நகைகளை எல்லாம் வாங்கி விற்று, கடன்களை அடைத்ததும், தினசரி சண்டையும், அடியுமாய் வாழ்வு மாறியது.

உறவினர்களுடன் விசாகப்பட்டினம் போய், மாப்பிள்ளை வீட்டாரிடம் நியாயம் கேட்டாள், மீனாட்சி. பிசினஸ் செய்ய, 50 ஆயிரம் பணம் கொடுத்தால், சுகந்தியுடன் வாழ்வதாக, மாப்பிள்ளை கூற, கடன் வாங்கி கொடுத்தாள், மீனாட்சி.

அச்சமயத்தில், செல்வராணியின் கணவருக்கு பெங்களூருக்கு வேலை மாற்றலானது. மகனுக்கும் டில்லியில் வேலை கிடைக்க, குடும்பத்துடன் சென்னையிலிருந்து வெளியேறி விட்டனர். செல்வராணி, பெங்களூரூ, டில்லி என, மாறி மாறி வாழ்ந்து, எட்டு ஆண்டுகள் ஓடி விட்டன.

மீனாட்சி குடியிருந்த பழைய வீட்டிற்கு தேடிப் போனாள், செல்வராணி. அங்கு, பிரமாண்டமான அடுக்கு மாடி குடியிருப்பு ஒன்று முளைத்திருந்தது. அவர்கள் பற்றிய தகவல் அறிந்தவர்கள் யாருமே அங்கு இல்லை.

சரி, இவ்வளவு துாரம் வந்ததற்கு, அங்காளம்மனை தரிசித்து போய் விடலாம் என்று கோவிலுக்கு சென்றாள். அங்கே, கோவில் பூசாரியின் மனைவி, செல்வராணியை அடையாளம் கண்டு, வில்லிவாக்கத்தில் மீனாட்சி இருப்பதாக சொல்லி, முகவரியும் கொடுத்தாள்.

மீனாட்சியை தேடி, வில்லிவாக்கம் போனபோது, செல்வராணிக்கு நிறைய ஆச்சரியங்கள் காத்திருந்தன.

மகளுடன் ஹவுசிங் போர்டு குடியிருப்பு ஒன்றில் குடியிருந்தாள், மீனாட்சி; ஆளே மாறிப் போயிருந்தாள். செல்வராணியை பார்த்ததும், ஓடி வந்து கட்டிக்கொண்டாள். அவர்கள் இருந்தது, சொந்த குடியிருப்பாம். கேட்கவே சந்தோஷமாக இருந்தது, செல்வராணிக்கு.

பேச்சு சத்தம் கேட்டு, அறையிலிருந்து சுகந்தியும் வந்து, செல்வராணியின் கால்களில் விழுந்து, வணங்கினாள்.

''பணம் புரட்டி, கொடுத்தும், என்னை சந்தோஷமாக வைத்திருக்கவில்லை. தினசரி சண்டை தான். எனவே, ரயில் ஏறி அம்மாகிட்ட வந்துட்டேன், ஆன்ட்டி.

''அம்மாதான் என்னை வம்படியா மறுபடியும் விசாகப்பட்டினம் அனுப்புறதுக்கு ஆசைப்பட்டாங்க. அங்க அனுப்புனா, கண்டிப்பா நான் செத்துடுவேன்னு சொல்லவும், அரை மனசா ஒத்துக்கிட்டாங்க.

''சான்றிதழ்களுடன் வேலை தேடினேன்; கிடைச்சது. இதோ, இப்ப குடும்பமே ரொம்ப சந்தோஷமா இருக்கோம்,'' என்றவள், ''இந்த வாழ்க்கை நீங்க போட்ட பிச்சை,'' என்றாள் கண்ணீருடன்.

சுகந்தியை அணைத்தபடி, ''எல்லாம் சரி, உங்க அப்பா என்னானார்,'' என்றாள், செல்வராணி.

''நான் திரும்பி வந்ததுமே, அப்பாகிட்ட, 'நீ குடிய விட்டொழிச்சாதான் எங்க கூட இருக்கலாம். இல்லைன்னா நீ உன் வழியில வெளியில போய் தங்கிக்க'ன்னு, சொல்லிட்டேன். கொஞ்ச நாள் முரண்டு பிடிச்சார். அவரால தனியா இருக்க முடியாததால, வேற வழியில்லாம கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டார். இப்ப, 'பில்டிங் லேபர் கான்ட்ராக்ட்' எடுத்து பண்ணிக்கிட்டு இருக்கிறார்,'' என்றாள், சுகந்தி.

''நாங்களே உங்களை தேடி பெங்களூரு வரணும்ன்னு இருந்தோம். சரியான நேரத்துல, நீங்களே தேடி வந்துட்டீங்க,'' என்றாள், மீனாட்சி.

''அப்படியா, என்ன விஷயம்?''

''சுகந்திக்கு, அடுத்த மாசம் கல்யாணம் வச்சிருக்கோம். அவளோட ஆபீசுல வேலை பார்க்கிற ஒருத்தர் தான் மாப்பிள்ளை,'' என, அம்மா சொன்னதை கேட்டதும், சுகந்தியின் முகம் வெட்கத்தால் சிவந்தது.

''கேட்பதற்கு சந்தோஷமா இருக்கு. உன் விஷயத்தில் படிப்பும், அதற்கு உதவின நானும் தோற்று விடுவோமோ என்று பயந்தேன். நல்லவேளை, அப்படி எதுவும் நடக்கவில்லை. திருமணத்துக்கு கண்டிப்பாக வருகிறேன்,'' என்று கூறி விடைபெற்றாள், செல்வராணி.

சோ. சுப்புராஜ்






      Dinamalar
      Follow us