PUBLISHED ON : மே 20, 2012

**எல்.மகேஸ்வரி, மறைமலைநகர்: ஒரு மனிதனுக்கு துன்பம் எப்போது ஏற்படுகிறது?
'அவன் பைக் வாங்கிட்டானே... வீடு கட்டிட்டானே... கிளி போல பெண்டாட்டி அவனுக்கு அமைஞ்சிட்டாளே...' என எண்ணத் துவங்கும் போது பிறக்கிறது துன்பம்!
***
*எஸ்.சங்கர், பழவந்தாங்கல்: நடந்ததை எல்லாம் என்னால் மறக்க முடியலையே...
அப்படியானால் உங்களால் முன்னுக்கு வர முடியாது! அது மட்டுமல்ல, இருப்பதையும் இழந்து விடும் சோகமும் நேரும். மனித வாழ்வில் நேற்று, இன்று, நாளை என மூன்று கட்டங்கள் உண்டு. நேற்று என்பது இறப்பு; இன்று - பிறப்பு; நாளை - வளர்ப்பு. நேற்று நடந்ததை நினைப்பவன், இறந்தவன். இன்று நடப்பதை நினைப்பவன் வளரப் போகிறவன், நாளை நடக்கப் போவதை நினைப்பவன் வளர்ந்தவன். நீங்கள் இறந்தவராக இருக்கலாமா?
***
** ஏ.ராஜன், பூலுவப்பட்டி: குண்டு வெடிப்புகளை தடுக்க வழியே இல்லையா?
வழி உண்டு! துணிச்சல்மிக்கோரை களமிறக்க வேண்டும். குற்றவாளி என உறுதியாகத் தெரிந்தபின், போட்டு தள்ளி விட வேண்டும். பின்னர், உடம்பில் கல்லைக் கட்டி கடலில் போட்டு விட வேண்டும்! எலும்பு கூடக் கிடைக்காது! இந்த நடவடிக்கைகளை ஆரம்பித்தால், குண்டு வெடிக்குமா? ஐந்து பேர் முக்கியமா? நாடு முக்கியமா? 'மனிதனைக் கொல்ல வரும் பசுவைக் கூடக் கொல்லலாம்...' எனக் காந்தியே கூறியுள்ளாரே!
***
*ஆர்.பாஸ்கரன், மேட்டுப்பாளையம்: காதல் தோல்வியால் அதிகம் பாதிப்படைவது ஆண்களா, பெண்களா?
இக்கால காதல் தோல்விகள், இரு பாலாரையுமே பாதிப்பதில்லை எனத் தோன்றுகிறது. இதற்கு, கிராம, நகர வித்தியாசமும் இல்லை! தோல்விக்குப் பின், அவரவர், அடுத்த ஆளை தேடிச் சென்று விடுகின்றனர். கமலஹாசன் கூட, ஒரு பாடலில், 'டாக்டர் பொண்ணு, 'நோ' சொன்னா, நர்சு பொண்ணை காதலி...'ன்னு பாடி, ஊக்கப்படுத்தி இருக்கிறாரே!
***
*சி.செந்தில், கொளத்தூர்: 'இடதுசாரிகள்' என்றால் யார்? 'வலதுசாரிகள்' என்றால் யார்?
எல்லாரும் ஒருவரே; அவர்கள் அனைவருக்கும் ஒரே நோக்கமே... அது: அப்பாவி ஜனங்களின் தலையில் மிளகாய் அரைப்பது. நாம் தான் விழிப்புடன் இருந்து, இந்த, 'சாரி'களிடம், 'சாரி' (இங்கிலீஷ் சாரி) ஆகாமல் இருக்க வேண்டும்.
***
**கே.திவ்யா, கொசப்பாளையம்: எந்தச் சூழ்நிலையிலும், பெண்கள் தைரியமாகச் செயல்பட ஒரு வழி சொல்லுங்களேன்...
மன வலிமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்; உடல் வலிமை இல்லைஎன்றால் கூட பரவாயில்லை. தைரியமான பெண் எனத் தெரிந்தால், எந்த ஆணும் தவறான கண்ணோட்டத்துடன் நெருங்க மாட்டான். இன்றுள்ள சட்டங்கள் பெண்களுக்கு மிக, மிக சாதகமாகவே உள்ளன.
***
*செ.லட்சுமணன், போரூர்: கொடிய துன்பமாக எதைக் கருதுகிறீர்கள்?
திரும்பக் கொடுக்க முடியாத கடன். வறுமையை விட கொடியது கடன். தூக்கத்தைக் கெடுக்கும்; மன நிம்மதியை இழக்க வைக்கும்!
***
*ஞா.சுந்தரேசன், கரிசல்குளம்: சென்னை கடற்கரையில், ரவுடிகள் தொந்தரவு அதிகம் என்கின்றனரே...
படகு மறைவில் ஒதுங்கி சில்மிஷத்தில் ஈடுபடுவோருக்கும், கும்மிருட்டில் சல்லாபம் செய்வோருக்கும், ரவுடிகளால் சிக்கல் தான். ஆனால், இவ்வளவு மக்கள் தொகை உள்ள சென்னை மாநகரில், நடுத்தர வருமானமுள்ள அல்லது தகப்பன் காசில் வாழும் இளைஞர்களுக்கு, கடற்கரையைத் தவிர, வேறு இடமில்லையே!
***
