PUBLISHED ON : மார் 10, 2013

** மு.வள்ளியப்பன், மதுரை : நிம்மதியான வாழ்க்கை அமைய என்ன செய்ய வேண்டும்?
எல்லாம் உங்கள் கையில் தான்! ஒருவனுக்கு சொர்க்கமும், நரகமும் அவனுக்குள்ளேயே இருக்கிறது; எதில் வேண்டுமோ, அதில் அவன் வாசம் செய்யலாம்!
***
*மா.அருண்குமார், திருவானைகாவல்: ஒரு மனி தனுக்கு, ஆதரவும், அர வணைப்பும் மிகவும் தேவைப்படுவது குழந்தைப் பருவத்திலா, வாலிபத்திலா, வயோதிகத்திலா?
பதவி போன பின்... அதாவது, ரிட்டயர் ஆன பின்!
***
*வி.கணபதி, சென்னை: அந்துமணி பதிலில், வாரம் தோறும் சராசரியாக எட்டு கேள்விகள் மட்டுமே இடம் பெறுகின்றன. வாரந்தோறும் சராசரியாக எத்தனை கேள்விகள் வாசகர் களிடமிருந்து வருகின்றன?
சொன்னால் கோபிக்கக் கூடாது... 600 முதல் 700 அஞ்சலட்டைகள், அட்டைக்கு குறைந்தது, மூன்று கேள்வி களுடன் வருகின்றன... என்ன செய்வது பொ.ஆ., ஒதுக்கியுள்ள பக்கம் ஒன்று தானே!
***
** டி.கண்ணன், பல்லடம் : வேலை தேடுவதை விட, ஏதாவது தொழிலைத் தேடுவதே நல்லது என்கிறானே என் நண்பன்!
ஆயிரத்தில் ஒரு சொல்! தொழில் என்றால் பேக்டரி கட்டி, இயந்திரங்கள் நிர்மாணித்து என்றெல்லாம் எண்ணி விட வேண்டாம்... முதலே இல்லாமல் அல்லது மிகக் குறைந்த முதலீட்டில் செய்யக் கூடிய ஆயிரம் வேலைகள் உள்ளன! உங்கள் நண்பர் பேச்சைக் கேளுங்கள்!
***
*ஞா.கார்த்திகேயன், பரமகுடி: இப்போதெல்லாம் நீங்கள் பயணக் கட்டுரையே எழுது வதில்லையே... வெளிநாடு செல்வதில்லையா?
நிறைய பயணக் கட்டுரை எழுதி விட்டோமோ என்ற ஐயம்... பார்த்த நாடுகள் பற்றி எல்லாம் ஏற்கனவே எழுதி விட்டேன். பார்க்காத நாடு எதுக்கும் செல்லவில்லை. சென்று வந்த நாடுகளுக்கே திரும்பத் திரும்ப செல்லும் நிர்பந்தம்... எனவே தான், புது பயணக் கட்டுரைகள் இல்லை!
***
*மு.பாரதி கிருஷ்ணன், ராமநாதபுரம்: மொபைல்போன் பற்றி சேதி ஏதும் உண்டா?
உண்டே! ஒரு மொபைல் போனில் இருந்து மற்றொரு மொபைல் போனுக்கு தகவல் அனுப்பும் எஸ்.எம்.எஸ்., வசதி பற்றி தெரியும் அல்லவா? அந்த வசதியைப் பயன்படுத்தி, நம்மவர் களில், 52 சதவீதம் பேர், காதல் செய்திகளை மட்டுமே பரிமாறி கொள்கின்றனர்! இது, சிங்கப்பூரில், 33 சதவீதம் தானாம்!
***
*எஸ்.வேணு, கீழ்கட்டளை : உங்களது பெஸ்ட் பிரெண்ட் எத்தனை பேர்?
இருவர்!
முதலாமவர்: கடிகாரனார்!
இரண்டாமவர்: நாள்காட்டியார்!
இவர்கள்தான் என் சிறந்த நண்பர்கள்; 'நேரமும், நாளும் ஓடிக் கொண்டே இருக்கிறது... 'முன்னேறு, முன்னேறு' என ஒவ்வொரு நொடியும் உணர்வு கொள்ள வைக்கும் ஊக்க, 'டானிக்' இவர்கள் தான்!
***
**சே.ராமசுப்பிரமணியன், நத்தம்: அரசியல்வாதி - நடிகன்... ஒற்றுமை, வேற்றுமை என்ன?
இருவரிடமும் கணக்கில் காட்டாத பணம் கொட்டிக் கிடப்பது ஒற்றுமை! நடிகன், திரையிலும், அரசியல்வாதி வெளியிலும் நடிப்பது வேற்றுமை!
***
