
** வி.ராஜசேகர், பெரியகோட்டை: அலுவலகப் பணிகளுக்கு இடையில் குவியும், வாசகர் கேள்வி கடிதங்களைப் படிக்க நேரம் ஒதுக்குவீர்களா அல்லது கடிதக் குவியலில் இருந்து, நாலு கடிதங்களை எடுத்து பதில் எழுதி விடுவீர்களா அல்லது கேள்விகளை தேர்வு செய்து தர, அசிஸ்டென்டுகள் வைத்திருக்கிறீர்களா?
ஒரு அஞ்சல் அட்டை விடாமல், நானே படிக்கிறேன்; பதில் எழுதுகிறேன்... உதவியாளர்கள், தேர்வு செய்து கொடுப்பவர் என்றெல்லாம் எவரும் கிடையாது. சோறு, தண்ணி, ஏன்... உயிர் மூச்சே, வாசகர்களின் கடிதம் தான் எனக்கு என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!
***
*மு.விஜயலட்சுமி, சூளைமேடு: இந்தியர் களிடையே தான், இதய நோய் அதிகம் என்கிறாளே என் தோழி...
உண்மை தான்! ஐரோப்பிய மக்களை ஒப்பிடும் போது, அவர்களை விட இதய நோய் தாக்கம் மூன்று மடங்கு, 'ரிஸ்க்' அதிகம் என்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும், 25 லட்சம் இதய ஆபரேஷன் நடக்கிறதாம் இந்தியாவில்! 1990 கணக்குப்படி, மாரடைப்பால், 7 லட்சத்து, 83 ஆயிரம் இறப்புகள் நடந்துள்ளதாம். 2020ல், இது, இரு மடங்காகுமாம்! 40 வயதிலேயே, இந்தியர்களுக்கு இதய நோய் வந்து விடுகிறதாம்!
***
*கே.நடராஜன், நெய்வேலி: நம் நாட்டைப் போலவே, மேல் நாட்டிலும் மாமியார் - மருமகள் பிரச்னை இருக்கிறதா?
சேர்ந்து வாழ்ந்தால் தானே பிரச்னை. அங்கெல்லாம், 16-18 வயதிலேயே பிள்ளைகளை தனியே அனுப்பி விடுகின்றனர். மிகப் பெரிய செல்வந்தர் குடும்பங்கள் மட்டுமே இன்றும் கூட்டுக் குடும்பங்களாக உள்ளன. அங்கேயும், முணுமுணுப்புகள் மாமியார் - மருமகளிடையே உண்டு.
***
* சே.கன்னியப்பன், கம்பம் : ஆணுக்கு நிகராக ஆட்டோ ஓட்டினாலும், ராக்கெட்டில் பறந்தாலும், திருமண விஷயத்தில், பெண்களால் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடிவதில்லையே...
'ரிஸ்க்' எடுக்க விரும்புவதில்லை இக்கால சம்பாதிக்கும் பெண்கள். பொறுப்பை பெரியவர்கள் தலையில் கட்டி விடுகின்றனர்; 100க்கு, 90 சுபமாகவே செல்கிறது!
***
*வி.கார்த்திக்ராஜா, வங்கனூர்: அந்துமணியை பார்த்து, எந்த பெண்ணாவது ஜொள் விட்டதுண்டா?
எனக்குத் தெரியாது; நான்தான் தலையைத் தூக்கி தாய்க்குலத்தை நோக்குவதே இல்லையே!
***
*எம்.சதீஷ், விருத்தாசலம் : எதுவுமே படிக்கவில்லை என்று சொல்லி, பரீட்சையில் முதல் மார்க் வாங்கும் நண்பர்கள் பற்றி...
அவர்கள் நண்பர்கள் அல்ல; பொறாமைக் குணம் படைத்தவர்கள்... பட்டு கத்தரிப்பது போல, அவர்களை வெட்டி, விட்டு விடுவது நல்லது!
***
** ஜி.ஞானசம்பந்தம், திருமங்கலம் : வன்முறை எண்ணங்கள் எப்போதும் என் மனதில் தோன்றிக் கொண்டிருக்கிறதே...
உங்களின் எல்லா நடவடிக்கைகளிலும், எண்ணத்திலும் பலவீனம் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுள்ளது. பலவீனமாக இருக்கும் போது தான் ஒருவனுக்கு பலாத்கார சிந்தனை தோன்றும்! எனவே, உங்கள் பலவீனங்களை பட்டியலிட்டு அதிலிருந்து வெளியே வர முயலுங்கள்!
***

