
*சூ.கன்னியப்பன், ராமநாதபுரம் : ஆணின், 14 வயது காதல், 21 வயது காதல் - இதில் எது நீடிக்கும்?
இரண்டுமே, 'பெயிலியர்' ஆகக் கூடும்! ஆண்களுக்கு, 26 - 27க்கு பிறகுதான், மென்டல் மெச்சூரிட்டி - மனமுதிர்ச்சி ஓரளவேனும் வரும்! அதன்பின், இந்த முயற்சியில் இறங்கினால் நலம்!
***
*ஞா.சிவகாசி, போடி: உங்கள் பதிலைப் படிப்பதால் ஏதாவது பயன் உண்டா?
சர்வே செய்தி, பொது அறிவு, சினிமா, தத்துவம், அரசியல், இன்னும் பல விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாமே... (கேள்வி வெளியானால், கேட்டவர் பரிசு பெறுகிறாரே!)
***
*எம்.ஜெய்சங்கர், பல்லடம்: தங்களுக்கு எந்த வாசகருமே கேள்விகள் அனுப்பா விட்டால் என்ன செய்வீர்கள்?
இருக்கவே இருக்கிறது, 'கருணாநிதி பாணி!' நிருபர்கள் எவரும் பேட்டி காண வராத நாட்களில், கருணாநிதியே கேள்வியும் எழுதி, பதிலும் சொல்லி, அதை பத்திரிகை ஆபீசுகளுக்கு அனுப்புவதில்லையா... ஆனால், என் வாசகர்கள் அப்படி தவிக்க விட மாட்டார்கள் என்னை!
***
** ஜி.ராஜன், வல்லம் : நெருங்கிய நண்பன் பகையாளியாகி விட்டான். இழந்த நட்பை திரும்பப் பெற என்ன செய்வது?
தவறு உங்கள் மீது இருந்தால், சிறிதும் தயங்காமல் மன்னிப்பு கேட்டு விடுங்கள். நடந்ததை மறந்துவிட, பாரதியாரே அறிவுறுத்தியுள்ளார் என்பதை நண்பனிடம் கூறுங்கள். மீண்டும் நட்பு கிடைக்க வாய்ப்புண்டு!
***
** நி.அங்கம்மாள், அத்திப்பட்டு: ஒருவரோடு ஒருவர், மனதால் வாழ்ந்து விட்டு, பின், வேறு ஒருவரோடு எப்படி வாழ முடியும்?
தட் இஸ் லைப்... அதுதான் வாழ்வின் நிதர்சனம் - என்பதை புரிந்து கொள்கின்றனர். வாழந்தாக வேண்டுமே!
***
*சே.இந்திரகுமார், மேட்டுப்பாளையம்: உங்களுக்கு பணத் தட்டுப்பாடே வருவதில்லையாமே!
ரொம்ப சரி! வாங்கும் சம்பளம் சொற்பமானாலும், எந்த விலைவாசி ஏற்றத்திலும், தட்டுப்பாடே ஏற்பட்டதில்லை... தேவைகளை வரவுக்குள் அடக்கி வைத்தால், எவருக்குமே பணத் தட்டுப்பாடு வராது! (அது சரி இந்திரகுமார்... என் சமாச்சாரம் எப்படித் தெரிந்தது உங்களுக்கு?)
***
** ஆர்.அகிலா, கிருஷ்ணகிரி : அமெரிக்காவில் இரண்டே கட்சிகள் தான்... எனக் கூறுகின்றனரே... உண்மையா?
பிரதான கட்சிகள் இரண்டு என்பது உண்மை! அவை: ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி ஆகியவை. இவை இரண்டு மட்டுமே, மாறி மாறி ஆட்சிக்கு வரும். நம்மூர் தி.மு.க., - அ.தி.மு.க., போல! சிறிய கட்சிகளும் பல உள்ளன; கம்யூனிஸ்ட் கட்சி உட்பட... இவர்கள் அங்கும் தெரு முனைகளில் தகர டப்பா உண்டியல் குலுக்குவரா என்பது தெரியவில்லை!
***

