தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : செப் 01, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* ச.குப்புசாமி, கடலூர்: அரசியல் கட்சிகள் போடும் கூட்டணிகள் விவஸ்தை இல்லாமல் இருக்கிறதே...

வாக்காளர்கள் மாங்கா மடையர்களாக இருக்கும் வரை, ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன என்ற, பொது ஜனத்தின் மனப்பான்மை தொடரும் மட்டும், அரசியல்வாதிகளும், அவர்களது கட்சிகளும், கூட்டணிகளும் விவஸ்தை இல்லாமல் தான் இருக்கும்.

***

*எஸ்.கனகதுர்கா, தி.நகர்: எதிலும் திருப்தி அடையாதவர்கள் ஆண்களா, பெண்களா?

முதலாமவர் தான்; 'போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து!' என்ற குணம் உடையவர்கள் பெண்கள் தான்!

***

*என்.பொன்னி, கூத்தபாக்கம்: இரவல் நகை அணிந்து விசேஷங்களுக்கு செல்வது சரிதானா?

சரி இல்லை. நம்மிடம் இல்லாததை இருப்பதாக காட்டிக் கொள்வதில், ஒரு பெருமையும் இல்லை; இந்த நகைக்காக தான் விசேஷ வீட்டினர், 'நகை'ப்பர் என்றால், அந்த உறவோ, நட்போ தேவையே இல்லை! புன்னகை இருக்கும் போது, பொன் நகை எதற்கு?

***

*பி.பழனி, திருப்பூர்: வாழ்க்கை வண்டியில் மனைவி முன் சக்கரமா, பின் சக்கரமா?

பின் சக்கரம்! அது சுற்றினால்தான் வண்டி ஓடும்! குடும்ப பாரம் முழுவதையும் சுமப்பதில் இருந்து, பிள்ளைகளை படிப்பிப்பது வரையிலும் சகல பொறுப்புகளும் அவள் தலையில் தானே... ஆண்களுக்கு, சம்பாதிப்பது மட்டும் தானே பொறுப்பாக இருக்கிறது.

***

** ஆர்.ராமமூர்த்தி, பண்ருட்டி: நம்பிக்கை துரோகம், உண்ட வீட்டிற்கு இரண்டகம், உடன் இருந்து குழி பறித்தல்... இதில் எதைத் தாங்கிக் கொள்ள முடியாது?

மூன்றுமே ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல... மாறி வரும் இந்தக் காலகட்டத்தில், நமது தோலை எருமைத் தோல் கூட இல்லை, காண்டாமிருகத் தோலாக மாற்றி, அனைத்தையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது; ஆனால், இந்த துரோகம் புரிபவர்கள், உடனடியாக இல்லாவிட்டாலும், ஒரு கால கட்டத்தில் நிம்மதியையும், நல்ல தூக்கத்தையும் இழப்பர் என்பது உறுதி.

***

*ஜெ.சங்கரநாராயணன், கிழக்குமருதூர்: நீங்கள் ரகசியமாக யாருக்கும் தெரியாமல், 'சைட்' அடிப்பதாக, நம்ப தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனவே... அது பற்றி...

இதில் என்ன ஒளிவு - மறைவு... மனிதர்களின் நடவடிக்கைகளை கூர்ந்து கவனித்தால் தானே நாலு விஷயம் தெரிந்து கொள்ள முடியும்! பின், அது பற்றி எழுத முடியும்... இது தெரியாதா உங்களுக்கு?

***

** எஸ்.அந்தோணிராஜ், திருக்கோவிலூர்: சட்டம் எப்போது இருட்டறையாகிறது?

வழக்கறிஞர்கள், எதிர் தரப்பினரிடம் சோரம் போகும்போது, நீதி தர வேண்டிய நீதி அரசர்கள், அநீதிக்கு அடிமையாகி, நீதி தேவதை, கண்ணில் உள்ள கருப்புத் துணியை தான் கட்டிக் கொள்ளும் போது, சட்டம் இருட்டறையாகிறது.

***

*க.யாஸ்மின், கடலூர்: வேலையில்லா பட்டதாரிகளாக, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையற்றவர்களாக இருக்கும் இன்றைய இளைஞர்களுக்கு உங்களின் அறிவுரை என்ன?

'கவுரவம் பாக்காதீங்க!' - ஒரு முறை அல்ல; நூறு முறை சொன்னதாக எடுத்துக்கங்க... கிடைக்கிற வேலை எதுவானாலும் ஏத்துக்கங்க... தானா பிடிப்பு, நம்பிக்கை வரும் வாழ்க்கையில்!

***

ஆர்.கல்யாணகுமார், போடிநாயக்கனூர்: கராத்தே கற்ற பெண்களை திருமணம் செய்து கொள்ள மறுக்கின்றனரே... என்ன காரணம்?

குடித்துவிட்டு சண்டை போட முடியாது... அனாவசியமாக வம்பிழுக்க முடியாது... ஊர் சுற்றி, லேட்டாக வர முடியாது. மொத்தத்தில் ஆட்டம் போட்டால், அடி கிடைக்கும் என்ற பயம் தான்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us