
ரா.ரவீந்திரன், தாம்பரம்: வாத்தியாருக்கும், வக்கீலுக்கும் மட்டும் ஏன் கோடை விடுமுறை?
வெள்ளைக்காரன் நீதிபதி ஸ்தானத்தில் இருந்தபோது, அவனுங்க சவுகரியத்துக்காக - நீதி கேட்டு நடையா நடக்கிற இந்தியப் பாமரங்க, இரண்டு மாசத்திலே ஒண்ணும் ஆயிட மாட்டானுவ - என்ற அடிப்படையில் அளிக்கப்பட்டது வக்கீல்களுக்கு கோடை விடுமுறை! ஆசிரியர்கள் அவ்வாறு அல்லவே... நாட்டின் அடுத்தடுத்த தலைமுறைகளை பொறுப்பானவர்களாக உருவாக்கும் கடமை கொண்டவர்கள் அல்லவா? ஓய்வு கிடைத்தால் தானே அவர்களால் சிந்தித்து செயலாற்ற முடியும்!
எஸ்.சேகர், திருப்பூர்: 'டூ வீலர்' வைத்திருந்தால் போதும் - எந்தப் பெண்ணும் தன் வலையில் விழுந்து விடுவாள் என்று நினைப்பவர்கள் பற்றி...
அறிவீலிகள்... 'டூ வீலருக்கு' விழுந்தால், ஆறு சக்கர லாரி ஓட்டிக்கும் - 20 சக்கர'டிரெயிலர் ஓட்டிக்கும் எவ்வளவு விழணும்!
ப.சுந்தரி, வடுகபட்டி: வேறு ஒருவருக்கு சொந்தமாகி விட்ட தன் மாஜி காதலியை மறக்க முடியாமல் தவிக்கிறார் என் கணவர்! அவரைத் திருத்துவது எப்படி?
இதே சிக்கலில் நீங்களும் சிக்குண்டு தவிப்பதாக, சூப்பர் ரீல் ஒன்றை சுற்றுங்கள். கொதித்துப் போய், 'ஆ...ஊ' என்று கத்தி, நாலு சாத்து கூட சாத்த வருவார் உங்க வீட்டுக்காரர். அப்போது உணமையைக் கூறி, உங்கள் உள்ளம் படும் வேதனையைச் சொல்லிப் பாருங்கள். பலன் கிடைக்க சான்ஸ் உண்டு!
வி.ரேணுகா, தருமபுரி: திருமணமான பின்னும் வேலைக்கு பெண்கள் செல்வது சரியா?
தன் காலில் தானே நிற்கும், 'பினான்ஷியல் இன்டிபென்டன்ஸ்' பெண்களுக்கு எப்போதும் வேண்டும்! கல்யாணமான பின்னும், ஏன், 'ரிட்டயர்ட்' ஆகும் வரையிலும் பெண்கள் வேலைக்குச் செல்வது அவர்களது சுதந்திரத்திற்கு நலம்!
ஆர்.சி.முத்துக்குமரன், தேனாம்பேட்டை: இவ்வளவு தாய்க்குலங்களின் ஆதரவை பெற்றிருக்கும் நீரும் ஒரு கட்சி ஆரம்பித்தால் என்ன?
அரசியல் சாக்கடையில் அந்துமணியைக் காண தாய்க்குலங்கள் விரும்ப மாட்டார்கள்!
உ.தமிழரசி, புதுச்சேரி: சென்னை கடற்கரை, புதுச்சேரி கடற்கரை ஒப்பிடுக...
முன்னதில் கடலைப் பார்த்து அமரலாம். இரண்டாவதில், கடலுக்கு முதுகைத்தான் காட்டி அமர முடியும்!
ரா.சுமத்திரன், கடலூர்: இரவில் தூக்கம் வராவிட்டால், என்ன செய்வீர்கள்?
பகலில், தப்பு - தண்டா, பொய் புரட்டு செய்பவர்களுக்குத் தான் இரவில் தூக்கம் வராது. படுக்கையில் விழுந்ததும், 'கொர்' ஆரம்பிக்கும் ஆசாமி நான்!

