PUBLISHED ON : செப் 26, 2010

**சு.உலகநாயகி, சென்னை: அடுத்த பெண்களைப் பற்றி மனைவியிடம் வர்ணிக்கும் ஆண் வர்க்கத்தினரை திருத்துவது எப்படி?
அழகை ரசிக்கும் மனப்பக்குவமும், முயற்சியும் உள்ளவர்களுக்கு மட்டுமே வர்ணனை கலை கை வந்தது! வர்ணிக்கும்படி ஒருவர் இருந்தால், அவரை வர்ணிப்பதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. அந்த மனைவியும், இதே போல வர்ணிக்கும்படி உள்ள ஆண்களை தன் கணவனிடம் வர்ணிக்கலாம்! விகல்பமில்லாமல் அழகை வர்ணிக்கும் திறனை, அந்த ஆடவன் (கணவன்) பெற்று இருப்பதால், தவறாக எடுத்துக் கொள்ள மாட்டார்.
*ஆர்.முருகேசன், சூலூர்: ஐம்பது பைசா சில்லரை தராவிட்டால் கூட, பஸ் கண்டக்டர், காய்கறி வியாபாரி, மளிகை கடைக்காரர்களிடம் பெண்கள் சண்டைக்கு போய் விடுகின்றனரே... ஏன்?
காசின் அருமை தெரிந்தவர்கள் என்பதால் கறாராக இருக்கின்றனர். இதே ஐம்பது பைசா குறைத்து கொடுத்தால் அவர்கள் வாங்கிக் கொள்வரா?
** எஸ்.வரலட்சுமி, விருத்தாசலம்: கணவருக்கு தெரியாமல் நான் போஸ்ட் ஆபிசில் பணம் சேமிக்கிறேன்... இது தவறா?
?கணவன் கண் அயர்ந்த நேரத்தில், அவன், 'பாக்கெட்'டில் கை போட்டு, அதை சினிமா தியேட்டரில் கொட்டுவதுதான் தவறு!
*ஆர்.சாவித்ரி, திருத்தணி: நான் பி.எஸ்.சி., பி.எட்., முடித்து, ஆசிரியை பணி நியமனத்திற்கு காத்திருக்கிறேன்; வயது 25. எனக்கு பார்க்கும் வரன் எல்லாம் தட்டிக் கொண்டே போகிறது. என் கூட படித்தவர்களுக்கு எல்லாம் திருமணமாகி, ஒன்று, இரண்டு குழந்தைகள் இருக்கிறது. வீட்டில் உள்ளவர்கள் ஜாடையாக, 'யோகம் கிடையாது!' என்று கூறுகின்றனர். பக்கத்து வீட்டு பெண்கள், அதிகம் கேலி பேசுகின்றனர். ஒவ்வொரு நிமிஷத்தை கழிப்பதும் ஒரு வருடம் போல தோன்றுகிறது. மற்றவர்களின் கேலிப் பேச்சுகளில் இருந்து தப்புவது எப்படி?
மற்றவர் கேலி பேச்சை, இந்த காதில் வாங்கி, அந்த காது வழியே வெளியேற்ற பழகுங்கள்; புத்தகங்கள், பத்திரிகைகள் படிப்பதில் அதிக கவனத்தை செலுத்தினால், பிதற்றல்களை அசை போடுவதற்கு நேரம் இல்லாமல் போகும்! முடிந்தால், அக்கம் பக்கம் குழந்தைகளுக்கு டியூஷன் எடுக்கலாம். படித்தது மறந்துவிடாமலாவது இருக்கும்.
*எம்.எட்வர்ட், கள்ளக்குறிச்சி: தன் வீட்டுக்காரர் எவ்வளவு சம்பாதித்தாலும், அடுத்த வீட்டுக்காரியின் கணவனை புகழ்பாடும் பெண்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
பணத்தை சம்பாதித்துக் கொடுப்பதோடு கணவனின் கடமை முடிந்து விடுவதில்லை! அடுத்த வீட்டுக்காரியின் கணவனை, 'இவர் மனைவி புகழ்கிறாள்' என்றால், அடுத்த வீட்டுக்காரர் தன் குடும்பத்தை கவனித்துக் கொள்ளும் பாங்கு, மனைவி, குழந்தைகளிடம் அவர் காட்டும் அன்பு, அரவணைப்பு போன்றவை காரணங்களாக இருக்கலாம். பணம் மட்டுமே திருப்தியை தந்துவிடாது!
** சி.மாணிக்கவேலு, புதுச்சேரி: சம்பள வாழ்க்கை எனக்கு அலுத்துவிட்டது. கையில் காசும் இல்லை. என்ன செய்வது?
'இந்தியன் எக்ஸ்பிரஸ்' அதிபர் ஒரே ஒரு பித்தளை டம்ளருடன்தான் சென்னை வந்தார். சிம்சன் அதிபர் சாதாரண குமாஸ்தாவாகத் தான் அக்கம்பெனியில் பணியாற்றத் துவங்கினார். வெறும் கையில் முழம் போடும், 'டெக்னிக்'கை படியுங்கள். கையில் பணம் வைத்திருப்பவர்கள் ஒருநாளும், 'அட்வென்சரில்' இறங்குவதில்லை.
