PUBLISHED ON : ஜூன் 08, 2014

எம்.பிரசன்னகுமார், தல்லாகுளம்: கொலை, கொள்ளையால் பாதிக்கப்பட்டவர்கள், 'இழந்தது இழந்தாச்சு... ஆளை விடுங்க...' என, போலீசிடம் கெஞ்சிக் கூத்தாடும் நிலைமைக்கு வந்து விடுகின்றனரே...
உண்மைதான். மக்களின் தோழனாக, அவனுக்கும், அவன் உடமைக்கும் காவலனாக இருக்க வேண்டியவர்களை, நேர்மாறாக செயல்படும் கலாசாரத்தை வளர்த்து விட்டவர்கள் அரசியல் வாதிகள். எந்தக் குற்றமும் செய்யாமல், பெல், பிரேக், லைட் எல்லாம் சைக்கிளில் இருந்தால் கூட, 'காத்து கம்மியா இருக்கே... துட்டு வெட்டு...' என்ற இழிநிலை, இப்போது உள்ளது!
வி.எஸ்.செல்வேந்திரன், கும்பக்கரை: சாமுத்திரிகா லட்சணப்படி, மீசையுடன் தாடியும் வளர்ப்பவர்கள், அர்த்தபூர்வமான வாழ்க்கையை விரும்புகிறவர்களாகவும், சாதனை விரும்பிகளாகவும் இருப்பராம். இதன்படி, நீங்கள் நடத்தும் அர்த்தபூர்வமான வாழ்க்கையில் எதை சாதிக்க விரும்புகிறீர்கள்!
நம்ம தாடி - மீசை விஷயம், உங்களுக்கு எப்படி தெரியும்.
ஜெ.பூபாலராஜா, ஸ்ரீவில்லிபுத்தூர்: டில்லியில் வாழும் தமிழர்கள் ஜாதி, மதி பேதமின்றி ஒன்றுபட்டு வாழ்கின்றனர். தமிழ்நாட்டில், அந்த மனப்பான்மை இல்லையே...
கல்வி, பல கலாசாரங்களின் அறிமுகம், 'தான்' என்ற, அகம்பாவத்தை நீக்கி விடுகிறது. தமிழ்நாட்டையே எடுத்துக் கொள்ளுங்க... சென்னையில் வாழும் பிற மாவட்ட தமிழர்கள், ரொம்ப, 'ரிபைன்' ஆக உள்ளனர். டில்லியைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?
பெ.செந்தில்வேலன், கடலூர்: தேசிய விருது பெற்ற படங்களை, இன்றைய ரசிகர்கள் பார்க்க பயப்படுவது ஏன்?
அடிதடி, 'டுஷிங் டுஷிங்' குத்தாட்டம், கானா பாட்டு ஆகியவற்றில், ரசிகர்களின் ஆர்வத்தை திருப்பி விட்டு விட்டனரே...
ஐ.லட்சுமணன், திருப்பூர்: இளம் பெண்களிடம் பேசும் போது, முகம் பார்த்து பேசும் தைரியம் உண்டா உங்களிடம்?
இரண்டு சங்கதிகள் உண்டு; முதலில், இளம் பெண்கள் யாருமே என்னுடன் பேச வருவதில்லை. இரண்டாவது, அப்படியே பேசி, 'பஸ் ஸ்டாப் எந்தப் பக்கம்?' 'மார்க்கெட் எந்த சைடு?' எனக் கேட்டு விட்டால் கூட, தந்தி அடித்து விடும் எனக்கு... தலையை குனிந்து, தத்து, பித்து என்று ஏதோ உளறி, தப்பித்தால் போதுமென ஓடி விடுவேன்!
ம.டேவிட்ராஜ், மணலாறு: காதலிப்பவர்கள் எல்லாம் கல்யாணம் செய்து கொள்கின்றனரா?
நான் அறிந்தவரை, 99.99 சதவீதம் இல்லை. பார்க்கும் சினிமா, படிக்கும் கதை, நோக்கும் உலக நடப்பு எல்லாம், ஆணையும், பெண்ணையும் காதலிக்கத் தூண்டுகின்றன. கல்யாணம் என, வரும் போது, இருவருமே நிதர்சனத்தை புரிந்து, அவரவர் வழியே சென்று விடுகின்றனர்!
சி.கலா, கம்பம்: அடுத்தவர் மனைவி, நம்மிடம் வலிய வந்து, குழைந்து பேசுவதைத் தவிர்க்க முடியாமல் தவிக்கும் ஆண்களுக்கு, உம் யோசனை என்ன?
ஒன்றுமே தெரியாத பாப்பா... என்ன தவிப்பு வேண்டியிருக்கு... உண்மையிலேயே தவிர்க்க விருப்பம் இருந்தால், அந்த ஏரியா பக்கமே நடமாட மாட்டீர்களே!
எஸ்.ஆரோக்கியமேரி, நாகர்கோவில்: ஒரு சிறுகதை எழுதி முடிக்க, ஐம்பது பக்கங்களை வீணாக்கினேன். இது வெற்றியா, தோல்வியா?
வெற்றிக்கு முதல்படி, 'பர்பெக் ஷன்' வேண்டும் என்ற அடிமன எண்ணம் தான், பக்கங்களை கிழிக்கச் செய்திருக்கிறது. இதே போல தொடர்ந்து முயலுங்கள். முழு நீள வெள்ளைத் தாளில் ஆறு பக்கங்களில் அடித்தல், திருத்தல் இல்லாமல், எழுத பழகி விடலாம்!
எம்.என்.சம்பந்தன், விருதுநகர்: குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே, 'செக்ஸ்' அறிவை போதிக்க வேண்டும் என்று நினைத்தாலும், செயல்படுத்த மனம் தயங்குகிறதே...
அதை, அறிவாக நினைக்காமல், இன்னும் உங்கள் மனம், ஆபாசமாக நினைக்கிறது. இதுவே, தயக்கத்திற்குக் காரணம்!
