PUBLISHED ON : ஆக 31, 2014

வி.ஆர்.மணிமேகலை, பூலுவபட்டி: பிஞ்சிலேயே பழுத்த கேஸ்கள், இப்போதெல்லாம் பெருகி விட்டதே... மூலக் காரணம் என்னவாக இருக்கும்?
சினிமா, சினிமா, சினிமா!
கே.அன்வர்அலி, காரணம்பேட்டை: என் நண்பன் தன்னைத் தானே கெட்டிக்காரன் என, சொல்லிக் கொள்கிறானே...
மண்டைக்கனம் ஏறுபவர்கள் தலை, கால் புரியாமல் கூறிக் கொள்ளும் வார்த்தை இது. இப்படிப்பட்டவர்களிடம் இருந்து விலகி இருப்பது எப்போதுமே நல்லது!
வி.சந்தியா, சைதாப்பேட்டை: தலையில் பல்லி விழுந்தால் மரணமாமே...
ஆமாம்... மரணம் தான் பல்லிக்கு! தலையில் விழுந்த பல்லியை அடித்துக் கொன்று விடுகிறானே மனிதன்! மூட நம்பிக்கையில் மூழ்கி காலத்தை விரயம் செய்யா தீர்கள்!
பீ.ரமேஷ்,போரூர்: இரவில் எனக்கு தூக்கமே வருவதில்லையே...
துக்கம்தான் தூக்கமின்மைக்கு காரணம்; துக்கத்துக்குக் காரணம் கடன். கடன் எக்கச்சக்கமாக இருந்தால், கண்டிப்பாக தூக்கம் வராது!
ரா.ராஜாராம், புதுச்சேரி: பணம் பொல்லாததா?
கத்தியால், மனிதனை குத்தியும் கொல்லலாம்; மாம்பழத்தை துண்டு போட்டு சாப்பிடவும் பயன்படுத்தலாம். பயங்கரவாதிகளிடம் பணம் இருந்தால், அழிவுக்கு பயன்படுத்துகின்றனர். அதே பணம் தொண்டு நிறுவனங்களிடம் இருந்தால் ஏழை, எளியோர், வியாதியஸ்தர், அனாதைகளின் உயர்வுக்கு பயன்படுத்துகின்றனர். இருக்குமிடத்தைப் பொறுத்து, பணத்தின் பயன்பாடு!
டி.மாலா, வளசரவாக்கம்: இன்று மக்களிடையே சேமிப்பு பழக்கம் வளர்ந்துள்ளதா?
வளர்ந்திருக்கிறது; ஆனால், கஷ்டப்பட்டு சம்பாதித்து, மிச்சம் பிடித்த பணத்தை எப்படி முதலீடு செய்வது என்ற கலைதான் தெரியவில்லை. 30 முதல் 47 சதவீதம் வட்டி தருகிறோம் என, விளம்பரம் செய்யும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, படித்தவர்கள் கூட ஏமாந்து போகின்றனர்.
ஆர்.நரசிம்மன், தேவாரம்: வாகன,'ஸ்டெப்னி' வாழ்க்கை, 'ஸ்டெப்னி' விளக்கம் தேவை...
முதலாவது, 'ஸ்டெப்னி' ஆபத் பாந்தவன்; துன்ப காலத்தில் கை கொடுப்பதில் தேர்ந்தவன். இரண்டாவது, 'ஸ்டெப்னி' தொல்லைகளுக்கும், துயரங்களுக் கும், துக்கங்களுக்கும் தூபம் போட அவதரித்தது.
கி.சுப்பிரமணியன், திருக்கனூர்: பெண்களை நம்பவே கூடாது என்கிறானே என் நண்பன்...
அப்போ, உங்கள் நண்பர் வாழும் இடம் சுடுகாடு போல அல்லவா இருக்கும்?
