PUBLISHED ON : அக் 26, 2014

எஸ்.பொன்பாண்டியன், அனுப்பானடி: ஒரு ஆண், திருமணம் செய்ய சரியான வயது என்ன?
கை நிறைய சம்பாதிக்கும் நிலையை எட்டிய பின், திருமணத்தைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கலாம்; ஆனால், இப்போதெல்லாம் முளைத்து மூன்று இலை விடுமுன்னே காதல், கல்யாண சிந்தனை தான்... படிப்பில் கோட்டை விட்டு, வாழ்வையும் தொலைத்து விடுகின்றனர்.
வி.ப.ஜார்ஜ், திருப்பூர்: நிம்மதியாக தூங்குவதற்கு ஒரு வழி சொல்லுங்களேன்...
ரொம்ப சிம்பிள்... யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள்; யாரிடமும் கடன் வாங்காதீர்கள். தலையணையில் தலை சாய்ந்ததும் நிம்மதியாக தூக்கம் வரும்!
கே.வண்டார்குழலி, ராமநாதபுரம்: அலுவலகத்தில் சக ஆண்களிடம் சாதாரணமாக சிரித்துப் பேசினால் கூட கண், காது, மூக்கு வைத்து தவறாக பேசுபவர்களை என்ன செய்வது?
கண்டுக்காமல் விட்டு விடுங்கள்; இவர்களை எல்லாம் திருத்த முயல்வது, விழலுக்கு இறைத்த நீருக்கு சமம்!
எம்.ஆனந்த்குமார், பொன்நகரம்: பெண்களிடம் மீண்டும் மீண்டும் பார்த்து ஆண்கள் அதிசயிப்பது எது?
அவர்களின் பொறுமை, சாந்தம், அடக்கம்! காரணமில்லாத விஷயங்களுக்கெல்லாம் முணுக்முணுக்கென ஆண்களுக்கு கோபம் வந்து கத்துவர். பெண்கள் அப்படி அல்ல, நிதானம் மிகுந்தவர்களாக இருப்பதால், எதையும் ஆராய்ந்து அறிந்தே முடிவெடுப்பர்; இதுவே, ஆண்களை அதிசயிக்க வைக்கிறது!
பொ.முருகேசன், சேத்தியாதோப்பு: என் நண்பன் பிடிவாதக்காரனாக இருக்கிறான்; அவன் எதிர்காலத்தை நினைத்தால், பயமாக உள்ளதே...
நல்லதுக்காக பிடிவாதம் பிடித்தால் கவலை வேண்டாம்; அவர் எதிர்காலம் சோலைவனமாகத்தான் அமையும். தன் கவுரவம் மற்றும் அடுத்தவனை கெடுக்கும் விஷயத்தில் பிடிவாதமாக இருந்தால், எதிர்காலம் பாலைவனம் தான்!
கே.அன்வர் அலி, கோவை: இன்றைய சூழ்நிலையில் பிழைக்கத் தெரிந்தவர்கள் யார்?
கூடவே இருந்து குழி பறிக்கத் தெரிந்தவர், கோள் சொல்லக் கற்றுக் கொண்டவர்கள், 'உங்களைப் போல் உண்டா?' என, ஜால்ரா தட்ட பழகிக் கொண்டவர்கள் - இவர்கள் பிழைத்து வருகின்றனர்; ஆனால், இவர்களின் இந்த மாதிரி பிழைப்பு அதிக நாள் நீடிக்காது!
எம்.ராணி, விளாங்குடி: என் தோழி எனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டாள்; என் மனம் பழி வாங்கத் துடிக்கிறதே...
பழி வாங்கல் ஆரம்பத்தில் இனிக்கும்; மன சாந்தி கிட்டியது போன்ற தோற்றம் கொடுக்கும். ஆனால், அதுவே விரைவில் கசப்பாக மாறிவிடும். எய்தவரையே,'பூமராங்' போல திரும்பி வந்து தாக்கக் கூடும்; அதனால், மன்னித்து விடுங்கள்.
