PUBLISHED ON : அக் 31, 2010

கே.மகேஸ்வரன், விருதுநகர்: 'மாறுதல் வரும்' என்ற கோஷத்தில், மாறுதலே இல்லை, என்ற வரிகள் நம் நாட்டைப் பொருத்தவரையில் எதற்கு மிகப் பொருந்தும்? அரசியலுக்கா, சமுதாயத்திற்கா?
உங்களிடம், 'நெகட்டிவ் அப்ரோச்' நிறைய இருப்பதாகத் தோன்றுகிறது! அரசியலில் மாறுதல் இல்லை என எப்படிக் கூற முடியும்? தமிழ்நாட்டை காங்கிரஸ் ஆண்டது. பின், தி.மு.க., அ.தி.மு.க., இப்போது, மீண்டும் தி.மு.க., சமுதாயத்தில் ஏன் மாறுதல் இல்லை? பெண்களையே எடுத்துக் கொள்ளுங்கள்... ஆண்களை விட, அதிக மதிப்பெண் எடுத்து, கல்வியில் முதன்மை பெற்று வருகின்றனர். ஸ்கூட்டர், கார், மோட்டார் பைக் ஓட்டுகின்றனர்... சேலையை துறந்து, 'மாடர்ன் டிரஸ்' அணிகின்றனர். ஏழு, எட்டு என பெற்றுக் கொண்டவர்கள் ஒன்று, இரண்டுடன் நிறுத்திக் கொள்கின்றனர்! பெரிய, பெரிய பதவிகளில் அமர்கின்றனர் - இதெல்லாம் மாறுதல் இல்லையா? 'பாசிடிவ்' அணுகுமுறை இன்னும் வேண்டும் உங்களுக்கு! ('அரசியலில் மாற்றம் இருக்கு; சரி! ஆனால், அரசியல்வாதிகளிடம் மாற்றம் இல்லையே!' என நீங்கள் கேட்பதும் காதில் விழுகிறது.)
எஸ்.நாகராஜன், நெய்வேலி: நகைச்சுவை உணர்வு அதிகம் ஆண்களிடமா, பெண்களிடமா?
நகைச்சுவை நேச்சுரலாக பெண்களிடம் தானே அதிகம்! கழுத்திலும், காதிலும், மூக்கிலும், காலிலும், கையிலும் பெண்களின், 'நகைச்சுவை'யைக் காணலாம்!
(பெண்கள் கோபப்படக் கூடாது. ஆண்களிடம் தான், 'நகைச் சுவை' - தமாஷ் உணர்வு அதிகம்.)
ஏ.சாந்தா, ராஜபாளையம்: இளமையாய் இருப்பதால் ஏற்படும் அசவுகரியம், முதுமையான பின் ஏற்படும் சவுகரியம் - ஒன்று சொல்லுங்களேன்...
பெண்களுக்கென இக்கேள்வி கேட்கிறீர்களா - ஆண்களுக்காக என தெரியவில்லை. இருந்தாலும், ஆண்களை மனதில் கொள்கிறேன்! 'பாப்பா... நல்லா படிக்கிறியா?' என்று இளம் பெண்கள் முதுகில், 'செல்லமாக' தட்டிக் கொடுக்கும், 'சவுகரியம்' முதுமையில் கிடைத்து விடுகிறது; இது இளமையில் கிடைப்பதில்லை!
என்.காளீஸ்வரி, சோழவந்தான்: வெளி மாநிலங்களில் வேலை பார்க்கும் தமிழ் இளைஞர்கள் விடுமுறையில் இங்கு வரும் போது, தமிழகத்தை தரக் குறைவாக விமர்சிக்கின்றனரே...
மொழி, இன, வட்டார குறுகிய உணவுகளைத் தூண்டிவிட்டு, ஆரோக்கியமான விமர்சனத்தைக் கூட கேவலமான விமர்சனம் என எண்ணக் கூடிய அளவில் நம் கண்களுக்கு கட்டுப்போட்டு, குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வைத்து லாபம் சம்பாதித்து விட்டனர் தமிழக அரசியல்வாதிகள்! உலக, மக்களைப் பற்றிய பரந்த அறிவு வேண்டும் நம்மிடையே. அதற்கு உதவுவது, 'டிராவல்' தான்! நாலு இடங்களை பார்த்து, நாலு வெளி மனிதருடன் பழக வேண்டும்! அப்போது தான் நம்மிடம் உள்ள குறைபாடுகள் தெரிய வரும்! வெளிமாநிலங்களில் வேலை பார்க்கும் தமிழ் இளைஞர்களுக்கு இந்த வாய்ப்பு கிட்டியுள்ளது. அவர்களது விமர்சனங்கள் நியாயமானதே - அவற்றை ஆரோக்கியமான விமர்சனங்களாக ஏற்றுக் கொள்ளுங்கள்!
எம்.அருணாசலம், பழனி: அந்துமணியாரே... நம்ம ஊரு ரோடுகள் எப்போதும் வாயைப் பொளந்து சிரிக்கின்றனவே... எப்போது வாயை மூடும்?
ஊர் மக்கள் சேர்ந்து, கான்ட்ராக்டரின் முதுகில் தோசை சுட ஆரம்பிக்கும் போது!
வி.தேவிப்ரியா,சிவகாசி: கற்பிழந்த பெண்ணைக்குறை கூறும் சமுதாயம், ஆணினத்தை அப்படிக் கூறாதது ஏன்?
இன்று பெண்கள் நிலையில் ஆண்கள் இருந்த காலத்தில் பெண்களை அடிமைப்படுத்த ஆண் இனம் கண்டு பிடித்த மாயச் சொல்தான் இந்த கற்பு விவகாரம் என சரித்திர பூர்வமாக சான்று கூறும் ஆங்கில நூல் ஒன்றை படித்து வருகிறேன்... (உ.ஆ., உதவியுடன் தான்!) முழுமையாக படித்து முடித்த பின், சில விளக்கங்களைக் கூற முடியும் என நம்புகிறேன்!
