
எஸ்.கனகசுப்பு, திருவான்மியூர்: சிரித்துப் பேசுபவர்கள் எல்லாம் கழுத்தறுப்பவர்கள் என்பது உண்மையா?
'அனா'வாதிகளின் சிரிப்பை சிரிப்பவர்களை மட்டும், 'கானா' அறுப்பவர்கள் கோஷ்டியில் சேர்த்துக் கொள்ளலாம்!
ம.சுரேந்திரன், புதுச்சேரி: போட்டியும், பொறாமையும் நிறைந்த உலகத்தை திருத்த ஏற்றது ஆன்மிகமா, சமத்துவமா?
'சமத்துவம்தான்' என நினைத்து செயல்பட்ட இடங்களில் - நாடுகளில் எல்லாம், அக்கொள்கை அடிப்பட்டு, பொடிப் பொடியாகி விட்டதே!
எம்.ரகுராமன், நங்கநல்லூர்: இதுவரை உம்மை,'சைட்' அடித்த பெண், திடீரென எந்த காரணமும் இல்லாமல், உம் கண் முன் மற்றவனை,'சைட்' அடித்தால், உம் மனம் என்ன பாடுபடும்... சீரியசா கேட்கிறேன்... நன்றாக சிந்தித்து பதில் சொல்லும்...
இதுவரை சும்மா,'சைட்' தானே அடிச்சாங்க... 'நான் உன்னை காதலிக்கிறேன்... நீ இல்லாமல் என் வாழ்க்கை இல்லை...' என, எந்த வசனமும் பேசவில்லையே...
காய்கறி கடையில் கத்தரிக்காய் பார்க்கிறோம்... நன்றாக இருப்பது போல தெரிகிறது. வாங்கலாம் என நினைக்கும் போது, பக்கத்து கடைக்கு எதிர்பாராமல் கண் செல்கிறது. இந்தக் கடையை விட அந்தக் கடையில், 'ப்ரஷ்' கத்தரிக்காய்கள் இருப்பதாக தெரிகிறது. என்ன செய்வோம்...
'சைட்' அடிப்பதை எல்லாம் ரொம்ப சீரியசாக எடுத்துக் கொள்வது இதயத்திற்கு நல்லது அல்ல!
ம.நரேஷ், அடையாறு: நான் சலவைத் தொழிலாளி. இஸ்திரி போட்ட துணிகளை மாலை, 6:00 மணிக்கு மேல் கொடுத்தால், 'விளக்கு வைத்த பின், காசு கொடுக்க மாட்டோம்...' என, சில வாடிக்கையாளர்கள் கூறுகின்றனரே... இதன் பின்னணி என்ன?
ஒருநாள் காசு கொடுக்காமல் கழிக்கலாமே என்ற, 'நல்லெண்ணம்' தான்! 6:00 மணிக்கு மேலே, 'செகண்ட் ஷோ'சினிமாவுக்கு காசு கொடுக்காமல், 'ஓசி'யிலா பார்க்கப் போகின்றனர்?
இத்தகைய, 'தர்ம பிரபுகள்' ஏழைத் தொழிலாளியின் நிலையை எண்ணிப் பார்ப்பது நலம்!
என்.கங்காதரன், திருவல்லிக்கேணி: தகுதி இல்லாதவர்கள் கையில் பதவியைக் கொடுத்து, பிறகு, அவன் ஒன்றுமே செய்யவில்லை எனக் கூறும் மக்களைப் பற்றி...
நமது மக்கள் இப்போது,'லேர்னிங் பிராசசில்' தான் இருக்கின்றனர். 'டிரயல் அண்ட் எரர்' தியரியை கையாளுகின்றனர். இன்னும், 20 ஆண்டுகளில் ஓரளவு விவரம் வரும் என, எதிர்பார்க்கலாம்!
டி.எஸ்.சந்திரா, செய்யார்: கணவருக்குத் தெரியாமல் போஸ்டாபீசில் பணம் சேமிக்கிறேன். இது தவறா?
கணவன் கண் அயர்ந்த நேரத்தில், அவன்,'பாக்கெட்'டில் கை போட்டு, அதை சினிமா தியேட்டரில் கொண்டு கொட்டுவது தான் தவறு!
ம.ரஹமத், பெண்ணாடம்: நாம் ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, நம்மைப் பேச விடாமல் அவர்கள் புராணத்தையே பாடி அறுப்பவர்களைப் பற்றி...
இப்படிப்பட்ட ஆசாமிகளை என்ன செய்தாலும் திருத்த முடியாது. சிறிது நேரம், 'ஹி... ஹி...' என அசடு வழிந்து பின், நைசாக, 'கட்' செய்து விடுவதே மேல்!
எஸ். விஸ்வநாதன், சிதம்பரம்: மன நிம்மதியோடு வாழ ஒரு வழி சொல்லுங்களேன்...
அடுத்தவரின் நல்வாழ்வு கண்டு பொறாமைப்படும் குணத்தை ஒழியுங்கள்; ஆசையை, தேவைகளைக் குறையுங்கள். தானாகத் தேடி வரும் மன நிம்மதி!
எஸ்.சாகுல்அமீது, நசரத்பேட்டை: யாரைக் கண்டால் உங்களுக்கு பிடிப்பதில்லை?
சிரித்துப் பேசி, பின்னால் பள்ளம் பறிக்கும் கயவர்களை, முகஸ்துதி செய்யும் குள்ளநரிகளை, உப்புப் சப்பில்லாத விஷயங்களை திரும்பத் திரும்பச் சொல்லி கழுத்தறுக்கும், 'லூசு'களை, மேதாவிகளாக நினைத்துக் கொள்ளும் மூடர்களை!