PUBLISHED ON : நவ 07, 2010

** ஆர்.ராதா, தேனி: இந்த வரதட்சணைக் கொடுமை எப்போது ஒழியும்? பெண்கள் வரதட்சணை கேட்கும் காலம் என்று வரும்?
அடுத்த 20 ஆண்டுகளில் ஒழியும் அறிகுறிகள் தென்படுகின்றன. ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பின் போதும், ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. 'ஸ்கேனிங்' என்ற நவீன விஞ்ஞான வளர்ச்சியின் மூலம் கருவில் உள்ளது ஆணா? பெண்ணா? என்பதை அறிந்து, பெண் என்றால் அதன் கதையை அப்போதே முடித்து விடும் நகரத்து தம்பதிகளும், பிறந்த குழந்தை பெண் என்ற உடன் அதன் பிஞ்சு வாயில், கொதிக்கும் கோழி குழம்பு அல்லது நெல்மணியைத் திணித்து, மேல் உலகம் அனுப்பிவிடும் கிராமத்து பெற்றோரும் பெருத்துவிட்ட இந்த நாளில் பெண்கள் தொகை ஆண்களை விட வெகு வேகமாக குறைந்து வருகிறது! இரண்டு ஆணுக்கு ஒரு பெண் தான் என்ற நிலை இந்தியாவுக்கு இன்னும் 20 ஆண்டுகளில் வரலாம். பெண்கள் வரதட்சணை கேட்பது போன்ற நிலை நம் நாட்டிலும் உருவாகலாம்! ***
*ஆர்.வேணுகோபால், பல்லடம்: நெருக்கடியான சூழ்நிலை வரும்போது, மனம் கலங்கி நின்ற அனுபவம் உண்டா?
கலங்குவது, தவிப்பது என்பது என் அகராதியில் கிடையவே கிடையாது! நெருக்கடியை சமாளிக்கும் விதம் பற்றி யோசித்து, அதன் வழிமுறைகளை சரிவர பின்பற்றி தீர்ப்பேன் - தீர்ப்போம் - தீருங்கள்! ***
** கெ.உஷா, கோவை: 'விதவைகளுக்கு மறுவாழ்வு தருகிறோம்...' எனக் கூறும் இளைஞர்கள், அதற்கு பதிலாக, ஊனமுற்ற பெண்களுக்கு வாழ்வு கொடுத்தால் என்ன? அதைவிட இது சிறந்ததில்லையா?
'பளீர்' எனத் தெரிந்து கொண்டிருந்த இரண்டு கண்களும் திடீரென பார்வை இழந்தால் எப்படி இருக்கும்? அதேபோன்ற நிலையில் இருப்பவர்கள் விதவைப் பெண்கள்! வாழ்வின் சுவையை, ஆணின் அன்பை, பாசத்தை, ஸ்பரிசத்தை உணர்ந்து மகிழ்ந்தவர்கள் - அவை திடீரென பறிக்கப்பட்டால்... எனவே, ஊனமுற்ற பெண்களை விட விதவைகளுக்கு இளைஞர்கள் முன்னுரிமை கொடுத்தால் எந்தக் குறையும் சொல்ல முடியாது.
***
*எம்.அன்பு ப்ரியா, புதுச்சேரி: நான் ஏதாவது ஒரு சாதனை புரிய நினைக்கிறேன். ஆனால், அதற்குள் என் பெற்றோர் எனக்கு மணம் முடிக்க நினைக்கின்றனர். திருமணம் என் லட்சியத்திற்கு குறிக்கீடு தானா?
உங்கள் லட்சியம் என்ன என்பதில் கூட இன்னும் நீங்கள் தெளிவு பெறாததை, 'ஏதாவது ஒரு சாதனை!' என நீங்கள் குறிப்பிடுவதிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது! எனவே, காலம் கடத்தாமல் கல்யாணம் செய்து கொள்வது நல்லது. அதன்பின் லட்சியம் என்ன என்பதை யோசித்து, முடிவு செய்து, கணவர் அனுமதியுடன் நிறைவேற்ற முயலுங்கள்! ***
*என்.பெருமாள், திருக்கோவிலூர்: வாரத்தில் இரண்டு நாள் விடுமுறையை வரவேற்கிறீர்களா?
சனிக்கிழமை விடுமுறை அளிக்கும் போது, அது மிச்சம், இது மிச்சம். அரசுக்கு கோடிக்கணக்கில் செலவு குறையும் என்றவர்கள் எது மிச்சமாச்சோ, இல்லையோ, இன்னமும் பற்றாக்குறை பட்ஜெட்தான் போடுகின்றனர். சாதா ஜனங்களுக்கு எக்கசக்க கஷ்டம் சனிக்கிழமை விடுமுறையால்! மனிதனை சோம்பேறியாக்கும் சனிக்கிழமை விடுமுறையில் எனக்கு ஒப்புதல் இல்லை! ***
*பா.நாகராஜன், மேட்டுப்பாளையம்: அண்ணன், தம்பி சண்டையைத் தூண்டி விடுபவர்களைக் கண்டால் என்ன செய்யத் தோன்றும்?
தூண்டி விடுபவர்களை ஒன்றும் செய்யத் தோன்றாது. அவர்கள் மீது பரிதாபம் தான் ஏற்படும் - பாவம். கையை உதறும் போது ஏதாவது எச்சுப் பருக்கை விழாதா, அதை உண்டு காலட்சேபம் செய்யலாமே என நினைக்கும் பாவப்பட்ட ஜென்மங்கள்! தூண்டி விடுபவர்கள் பேச்சைக் கேட்கும் ஆசாமிகளைக் கண்டால் தான் மனது சங்கடப்படும்! சுய சிந்தனை இல்லாதவர்கள் என எண்ணத் தோன்றும்!
