
ஜெ.அருணாச்சலபிரசாத், கவுண்டம்பாளையம்: நான் எது செய்தாலும், 'இது சொள்ளை... இது நொள்ளை' என, என் நண்பன் கூறுகிறான். என்னுடைய எந்த செயலையுமே அவன் பாராட்டுவதில்லை. இது ஏன்?
உங்கள் நண்பர் குறை உள்ளவர்; அவரால், உங்களைப் போல் செயலாற்ற முடியவில்லை. அவர் ஏற்கும் பணிகள் அனைத்திலும் தோல்வி காண்பவராய் இருக்கிறார். அதனாலேயே உங்களைப் பாராட்டுவதில்லை. குறையுள்ளவர் பிறரை பழிக்கும் குணம் கொண்டிருப்பர். இது போன்றவரை ஒதுக்கித் தள்ளுங்கள்; அவர் கூற்றை மதிக்காதீர்கள்.
சி.சுஜித்ரா, வத்திபட்டி: உலகில் எல்லாரும் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், நான் மட்டுமே துயரத்தில் மூழ்கி இருப்பதாகவும் ஒரு, 'பீலிங்'... இது எதனால்?
சுய பச்சாதாபம்! உங்களை எப்படியாவது பயனுள்ள வகையில் பிசியாக வைத்துக் கொள்ள முயலுங்கள். அதற்கான வழிமுறைகளைக் கண்டு, நேரமே இல்லை என்ற நிலைக்குச் செல்லுங்கள். இந்த, 'பீலிங்' ஓடிப் போய்விடும்.
பெ.ராஜேஷ்கண்ணன், முகவூர்: வஞ்சிக்கும் நண்பர்களை முன்னரே அடையாளம் காண்பது எப்படி?
கண்கள் இருக்கின்றனவே... அவை கண்டிப்பாக காட்டிக் கொடுத்து விடும்!
வி.எஸ்.பி.மாலா, கண்டமனூர்: தன் நேசிப்பை ஒரு பெண், ஆணிடம் கூறலாமா?
இங்குள்ள ஆண்களில், 10 சதவீதம் பேர் மட்டுமே,'ஜென்டில்மேன்'கள்! நேசிப்பை முதன் முதலில் ஒரு பெண் சொன்னால், நேசிக்கப்படும் நபர், 90ல் ஒருவராக இருந்து விட்டால், பெண்ணுக்கு மானக்கேடு வந்துவிடும். எனவே, அதிக கவனம் தேவை!
கே.விவேக், வில்லாபுரம்: 'நாம் ஏன் வாழ வேண்டும்' என, சில நேரங்களில் தோன்றுகிறதே!
நம்மை மோசம் செய்து, வயிறு வளர்க்க பெரும் கூட்டமே இருக்கிறது. அந்த மோசக்காரர்கள் பிழைத்துக் கிடக்க, நாம் வாழ்ந்து தானே ஆக வேண்டும்!
கே.தேவிகாராணி, மதுரை: என் பக்கத்து வீட்டுப் பெண்ணுக்கு திருமணமாகி, ஐந்து ஆண்டுகள் ஆகிறது; குழந்தை இல்லை. தன் கணவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கலாமா என, என்னிடம் கேட்கிறாள்; தங்களின் பதில் என்ன?
இக்காலத்தில் தம்பதியரில் யாருக்கு குறை இருந்தாலும், அதை சீர் செய்து குழந்தை பெற வைக்கும் வைத்திய முறைகள் ரொம்பவே முன்னேறி விட்டன. ஒரு வேளை இருவரில் யாருக்காவது குழந்தை பாக்கியமே இல்லை என்றாலும், ஒரு குழந்தையை தத்து எடுத்துக் கொள்ளலாமே!
டி.விக்னேஷ், மந்தவெளிப்பாக்கம்: வெளிநாட்டு மோகம் நம் இளைஞர்களிடையே குறைந்து விட்டதா?
வாய்ப்புதான் குறைந்து விட்டது. ஆனால், இளைஞர்களிடையே கம்ப்யூட்டர் மோகமும், அமெரிக்க ஆசையும் துளி கூட குறையவில்லை. இன்னும் சில ஆண்டுகளில் நிலைமை சீராகும் என்கின்றனர்.
வி.ஆரோக்கியமேரி, பல்லாவரம்: எப்போதும் அடுத்தவர்களை குறை கூறுபவர்கள் பற்றி...
தங்களை ஒரு,'பர்பக் ஷனிஸ்ட்' என்ற தப்பான எண்ணம் கொண்ட, 'இன்பீரியாரிட்டி காம்ப்ௌக்ஸ்' ஆசாமிகள் இவர்கள்! 'இக்னோர் தெம்!'
என்.கோபிகா, தேனி: அடங்கிப் போற மனைவியைத் தானே நல்ல குடும்பப் பெண் என்று சமூகம் சொல்கிறது...
சமூகம் சமூகம்ன்னு ஏன் தான் அடிச்சுக்கிறீங்களோ... நாளைக்கு இதே, 'அடங்கி'ப் போற பெண்ணை புருஷங்காரன் கொடுமைப்படுத்தினா இந்த சமூகம் எதுத்து நின்னு கேட்கவா போகுது!

