
எம்.கண்ணபெருமாள், கடலூர்: போலி அரசியல்வாதிகளுக்கு புத்தி புகட்ட தேர்தலை தவிர, பொது மக்களுக்கு வேறு ஏதும் வழி உண்டா?
உண்மையான ஜனநாயக நாட்டில் இது தான் வழி! ஆனால், நம் ஜனங்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள தவறி விடுகின்றனர்!
க.கோவிந்தன், வேலூர்: மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்வது, தானே அனுபவித்து உணர்வது... எது படிப்பினையூட்டும்?
'தம்பி... அது நெருப்பு; தொட்டால் சுடும்; கை பொத்து விடும்...' என்கிறார் விவரமறிந்த ஒருவர். 'இல்ல... சூடு எப்படி இருக்குன்னு எனக்கு தெரிஞ்சாகணும். அதன் மூலம் எனக்கு படிப்பினை வரும்...' என்றால், அது, 'காஸ்ட்லி' படிப்பினை; எது தேவலாம்... நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்!
ம.கிருஷ்ணமூர்த்தி, பெருமாள்பட்டு: காரியம் முடிந்ததும் கண்டு கொள்ளாமல் ஒதுங்கி விடும் நண்பர்கள் உங்களுக்கு உண்டா, அவர்களை எப்படி பழி தீர்த்துக் கொள்வீர்கள்?
இந்த அடிப்படை மனித இயக்கங்களை புரிந்து கொண்ட காரணத்தால், காரியம் செய்து கொடுக்க ஆரம்பிக்கும் போதே, 'கண்டுகொள்ள மாட்டார்...' என்ற மனப் பக்குவத்தை ஏற்படுத்திக் கொள்வேன். இதனால், டென்ஷன் அடைவதில்லை!
என்.குமணன், நாகர்கோவில்: என் மனைவி, எதற்காகவாவது என்னிடம் வாதாடும்போது, கோபமடைந்து கன்னாபின்னா வென்று திட்டி விடுகிறேன். பின், தனிமையில் சிந்தித்து பார்க்கும் போது, அவளது வாதம் நியாயமாகப்படும். உடனே, அவளிடம் மன்னிப்பு கேட்கும் எண்ணம் கூட வரும். ஆனால், மனைவியிடம் மன்னிப்பு கேட்பதா என்ற எண்ணம் எழுந்து தடுத்து விடுகிறது. என்ன செய்யலாம்?
'நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் தான்...' என்ற பிடிவாதம் இல்லாமல், காரியத்தை அலசிப் பார்க்கும் மனமாவது உங்களிடம் இருக்கிறதே... பாராட்டத்தான் வேண்டும். மன்னிப்பு கேட்க தயக்கம் இருந்தால், உங்களது செயல்களின் மூலம் மன்னிப்பு கேளுங்கள். அதை உணர்ந்து கொள்ளும் திறன் உங்களது மனைவியிடம் இல்லை என்றால், எவ்வளவோ, 'பிக்ச்சர் கார்டுகள்' விற்பனை ஆகின்றன. அவற்றில் ஒன்றை வாங்கி அளியுங்கள். அதுவும் கிடைக்கவில்லை என்றால், துண்டு காகிதத்தில் எழுதிக் கொடுங்கள். அதைக் கண்ட பின் கிடைக்கும், 'ரெஸ்பான்சை' பாருங்கள்... ஆச்சரியப்படத் தக்க விதத்தில் இருக்கும். இதை அனுபவப் பூர்வமாக நண்பர்களிடம் சோதித்து வெற்றி கண்டவன் நான்!
வி.ரங்கராஜன், எண்ணூர்: பத்திரிகை, 'டிவி' வானொலி ஆகியவற்றில், வாஷிங்டன் டி.சி., என அமெரிக்க தலைநகரை குறிப் பிடுகின்றனரே... 'டி.சி.,' என்பது என்ன?
'டிஸ்டிரிக்ட் ஆப் கொலம்பியா' என்பதன் சுருக்கம் டி.சி., அதாவது, கொலம்பியா மாநிலத்தில் உள்ள வாஷிங்டன் என்று பொருள். இன்னொரு வாஷிங்டன் அமெரிக்காவில் இருப்பதால், பிரித்து வித்தியாசம் காட்ட, தலைநகரை வாஷிங்டன் டி.சி., எனக் குறிப்பிடுகின்றனர்!
கே.என்.ராகவன், நெய்வேலி: உங்களுக்கு அடையாளம் தெரியாத, ஆனால், அறிமுகமானவர்கள், 'என்னைத் தெரிகிறதா?' எனக் கேட்டு, யாரென்று தெரியாமலேயே பேசி சமாளித்த அனுபவம், உங்களுக்கு ஏற்பட்டுள்ளதா?
நிறைய! ஆனால், பல சந்தர்ப்பங்களில் குட்டு வெளிப்பட்டு, வெட்கப்படும் நிலைகூட ஏற் பட்டுள்ளது. இப்போதெல்லாம், 'பொலைட்'டாக, 'தவறாக நினைக்க வேணாம்... தங்களை நினைவு கொள்ளாதது எனக்கே சங்கடமாக இருக்கிறது...' என முதலிலேயே சொல்லி விடுகிறேன். இதற்கு, 90 சதவீதம் வரவேற்பும் உள்ளது!

