PUBLISHED ON : ஜூலை 03, 2016

என்.ஆனந்தமூர்த்தி, திருவான்மியூர்: என் நண்பன், வெளியிடங்களில், என்னுடன் கேலி, கிண்டல் செய்தும், சிரித்தும் நன்றாக பேசுகிறான். ஆனால், அவன் வீட்டுக்குச் சென்றால், மூஞ்சியை, 'உம்' என்று வைத்து, பழகாதவன் போல் இருக்கிறான்; என்ன காரணமாக இருக்கும்?
நண்பரது வீட்டில் வயதுக்கு வந்த அக்கா, தங்கைகள் இருக்கின்றனரா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்; இருக்கின்றனர் என்றால், உங்கள் நண்பரது செயலுக்கு விடை கிடைத்து விடும்!
எஸ்.தட்ஷனேஷ்வரன், சென்னை: காமம், ஆத்திரம், கோபம் - மூன்றில் எதை அடக்குவது எளிது?
மூன்றுமே வெகு சுலபமாக அடக்க கூடியவை தான்; ஆனால், மனித மனம் ஒத்துழைக்க வேண்டுமே!
ஹெ.ஜாகிர் உசைன், கண்ணனேந்தல்: பணம் சம்பாதிப்பதில் டாக்டர்கள், இன்ஜினியர்கள், வக்கீல்கள்... யார் முன்னிலையில் உள்ளனர்?
நம்ம ஊரில் நோய்க்கும் பஞ்சமில்லை; வழக்குகளுக்கும் குறைவில்லை; புரிந்து கொண்டிருப்பீர்களே!
ஜி.சுகுமாறன், கூடலூர்: மனசாட்சிபடி நடக்க வேண்டும் என, அடிக்கடி வற்புறுத்துகிறீர்களே... ஏன்?
அது, தவறு செய்ய வழி காட்டாது. மனசாட்சியை மறந்து விட்டவரிடம் ஒழுக்கமோ, நேர்மையோ இராது. நற்குணங்கள் அடியோடு ஒழிந்து போகும். இவை எல்லாம் இல்லாமல் வாழ்வது வாழ்க்கையா?
எம்.பவன்குமார், மேலூர்: சென்னையில் பிறந்து, வளர்ந்து, பொது வாழ்வில் பிரபலமானவர்களின் எண்ணிக்கை பொதுவாக மிகக் குறைவு. சென்னைக்கு வாய்ப்பு தேடி வந்து உழைத்து, பெரிய இடங்களைப் பிடித்தவர்களே அதிகம். சென்னையில், ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து, பிரபலமாவது மட்டும் அரிதாக உள்ளதே... ஏன்?
சென்னையில் பிறந்து, வளர்பவர்களுக்கு, 'ப்பூ... இவ்வளவு தானா சென்னை... சென்னையில் நமக்குத் தெரியாதது என்ன இருக்கிறது...' என்ற தலைக்கனம் கலந்த அலட்சியம் உருவாகி விடுகிறது. கிராமத்தில் வளர்பவர்களோ, 'சென்னை சொர்க்க பூமி, அதை ஒரு முறையேனும் கண்ணால் காண வேண்டும்; அங்கு சென்றால் எப்படியும் உழைத்து முன்னேறி விடலாம்...' என நம்புகின்றனர். அவர்களது நம்பிக்கை வீண் போவதில்லை. கிராமத்துக்காரர்கள் சென்னையை தங்கள் லட்சியமாகக் கொள்வது போல், சென்னைவாசிகள், தங்களது கனவை, லட்சியத்தை, மும்பையையோ, டில்லியையோ, வெளிநாடுகளையோ நோக்கித் திருப்புவதில்லை. இதனாலேயே சென்னையிலேயே லட்சத்தில் ஒருவராக, முகவரி இல்லாமல் அமிழ்ந்து போகின்றனர்!
எம்.வான்மதி, பட்டிவீரன்பட்டி: என்னுடைய கடமையாக எண்ணி, சில நல்ல காரியங்கள் செய்ய நினைக்கிறேன்; என்ன செய்யலாம்?
சுயநலமிகளே நிறைந்துள்ள இவ்வுலகில், உங்களின் நல்லெண்ணத்திற்கு பாராட்டுகள்! மனிதராக பிறந்த ஒவ்வொருவரின் கடமையாக இருக்க வேண்டியது, பிறரின் துக்கங்களைக் குறைத்துக் கொண்டே இருப்பதாகும். இன்றே செயலில் இறங்குங்கள்!
