PUBLISHED ON : அக் 09, 2016

கே.பிச்சைமுத்து, திருப்பூர்: 'மூன்று பெண்களை பார்க்க வேண்டும்; இரண்டு பெண்களுடன் பழக வேண்டும்; ஒருத்தியை மட்டும் காதலிக்க வேண்டும். ஆனால், வேறு ஒருத்தியை திருமணம் செய்ய வேண்டும்...' என்கிறானே என் நண்பன்...
மொத்தத்தில் ஏழெட்டு துடைப்பக் கட்டை சாத்துக்கு தயாராக்குகிறார் உங்களை... ஜாக்கிரதை!
சி.ஜான்சன், மடிப்பாக்கம்: மனிதனுக்கு பைத்தியம் பிடிப்பதால், பலன் ஏதும் உண்டா?
உண்டே... எதிர்ப்பேதுமின்றி தம் கருத்தைக் கொட்ட பைத்தியங்களால் தானே முடிகிறது!
டி.வந்தானா ராஜகோபால், கடலூர்: இன்று மக்களிடையே சேமிப்பு பழக்கம் வளர்ந்துள்ளதா?
வளர்ந்துள்ளது; கஷ்டப்பட்டு சம்பாதித்து, மிச்சம் பிடித்த பணத்தை முதலீடு செய்வது எப்படி என்ற கலைதான் வளரவில்லை. 30 முதல், 47 சதவீதம் வட்டி தருகிறோம் என விளம்பரம் செய்யும் நிதி நிறுவனங்களில் முதலீடு செய்து, படித்தவர்கள் கூட ஏமாந்து போகின்றனர்.
கே.ஷேக்முகம்மது, நெய்வேலி: இக்காலத்திலும் இரக்கமுள்ளவர்கள் இருக்கின்றனரா?
இருக்கின்றனர்; பாத்திரங்களையும், ஏன் துணிகளைக் கூட ஏழை, எளியோரிடமிருந்து அடகு பெற்று, கடன் கொடுக்கின்றனரே சிலர்... அவர்கள் இரக்கமுள்ளவர்கள் தானே...
எஸ்.ஹரிப்பிரியா, அனுப்பானடி: இப்போது அமலில் இருக்கும், 'மெட்ரிக்' அளவுமுறை, எப்போது இந்தியாவில் ஆரம்பமானது?
அக்.,1, 1958ல்! அதற்கு முன் இருந்த அளவைகள், பலம், வீசை, மணங்கு, கண்டி. 40 பலம், ஒரு வீசைக்கு சமம்; எட்டு வீசை, ஒரு மணங்கு; 20 மணங்கு ஒரு கண்டிக்கு சமம். என்ன தலை சுற்றுகிறதா... இன்னும் கேளுங்கள்... ஒரு பலம் என்பது, 35 கிராம்; ஒரு வீசை என்பது ஒரு கிலோ, 400 கிராம்; ஒரு மணங்கு என்பது, 11 கிலோ, 200 கிராம். ஒரு கண்டி என்பது, 224 கிலோ!
'அப்பாடா... மெட்ரிக் சிஸ்டம் வந்ததே...' என்கிறீர்களா?
வி.செந்தில்நாதன், திருப்பரங்குன்றம்: பொறாமைப்படாமல் வாழ முடியுமா?
முடியுமே... ஆனால், ஆசைப்படாமல் வாழ முடியாது; அப்படி வாழ்பவன், துறவி, ஞானியாகி விடுகிறான்.
எம்.ராஜாமுகம்மது, சென்னை: பத்திரிகைகள் எனக்கு அனுப்பும் இலவச பிரதிகளை எல்லாம், அஞ்சல் நிலையத்தில் பிரித்து படித்து விட்டே அனுப்புகின்றனரே...
உங்களுக்காவது பரவாயில்லை; படித்து விட்டு முழுமையாக அனுப்புகின்றனர். எனக்கு, இலவச பிரதி மட்டும் அல்லாமல், சந்தா கட்டி, உள்நாட்டு, வெளிநாடுகளில் இருந்து வரும் பத்திரிகைகளின் பக்கங்களை கிழித்து எடுத்துக் கொண்டல்லவா அனுப்புகின்றனர்... தலைமை அஞ்சலகத்திலேயே புகார் கொடுத்தாயிற்று... 'நோ யூஸ்!'
என்.ரங்கராஜன், பொன்னேரி: எழுதாமல் என்னால் இருக்க முடியவில்லை; 'எழுதுவது வீண் வேலை...' என்று சிலர் என் மனதை புண்படுத்துகின்றனரே...
அவர்களுக்கு எழுத வரவில்லை; தம் பெயரை அச்சில் பார்க்க முடியவில்லை என்ற ஆற்றாமையால் சொல்லக் கூடும். நீங்கள் ஒன்றும் சூதாடவில்லையே... மது, மாதால், உடலை கெடுத்துக் கொள்ளவில்லையே... மனதிற்கு பிடித்த பொழுதுபோக்கான எழுத்தை, பலர் சொல் கேட்டு நிறுத்தி, ஏன் மனதை புண்படுத்திக் கொள்ள வேண்டும்!
