தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : நவ 20, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 20, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எம்.பிலோமினா, மேட்டுப்பாளையம்: நான், பிளஸ் 2 மாணவி; என் வகுப்பில் மொத்தம், 50 பேர்; அதில், ஒருத்தி மட்டும் தனி, 'டைப்!' அதாவது, தன் அழகை, பிறர் ரசிக்க வேண்டும் என்று நினைக்கும் வகையில், உடை அணிபவள். அதனால், அவளுக்கு கெட்ட பெயர் ஏற்படுகிறது; நாங்கள் எவ்வளவு கூறியும் கேட்பதில்லை. அவளை எப்படி திருத்துவது அல்லது இந்த வயதில் இப்படித்தான் இருப்பரா?

அழகை ரசிப்பதிலும், ரசிக்க வைப்பதிலும் எந்த வித தவறும் இல்லை. வயதை இதற்கு காரணமாகக் கூற முடியாது. நாகரிகமாக, அழகாகத் தோன்ற, உடை அணிவதால் கெட்ட பெயர் ஏற்படுகிறது எனக் கூறுவது நகைப்புக்கு தான் இடமளிக்கிறது!

ஒய்.ராஜதுரை, பாண்டிச்சேரி: ஒரு நாளிதழில் வெளியான, 'மணமகன் தேவை' வரி விளம்பரத்தை பார்த்து, கணவனை இழந்த பெண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்க எண்ணி கடிதம் எழுதினேன். பதிலாக வந்த கடிதத்தில், 'நிறைய நகை போடுவர், அதிக சீர் செய்வர், உங்களுக்கே முடித்து வைக்கிறேன். 500 ரூபாய் மணியார்டர் செய்யுங்கள்...' என, தரகு நிறுவனம் எழுதி இருந்தது. பணம் சம்பாதிக்க, இது போன்று நடந்து கொள்கின்றனரே, என்ன செய்யலாம்?

சந்தேகம் இல்லாமல் காசு சுருட்டும் வேலை தான் இது. பணம், ஸ்டாம்பு அனுப்பச் சொல்லும் விளம்பரதாரர்களிடம் இருந்து வரும் கடிதங்களை உடனே, குப்பைத் தொட்டியில் எறியுங்கள் அல்லது போலீசில் புகார் கொடுங்கள். உங்கள் மூலம் இரண்டு காசு பார்த்த சந்தோஷமாவது பின்னவர்கள் அடைவர்!

பொ.கார்த்திகா, வேளச்சேரி: பெரும்பாலான திருமணங்கள் தோல்வியில் முடிவதற்கு காரணம், 'செக்ஸ்' பிரச்னைகள் தான் என்று ஒரு கருத்து நிலவுகிறதே... இது எந்த அளவுக்கு உண்மை என்று கருதுகிறீர்கள்?

ஓரளவுக்கு உண்மை இருப்பதாக, வாசகியரிடமிருந்து வரும் கடிதங்கள் மூலம் உணர முடிகிறது!

எம்.மீனலோசினி, திருவொற்றியூர்: ஒரு ஆண், நேர்மையாக, குழையாமல் பேசினால், 'கண்டிப்பான ஆசாமி' என்கின்றனர்; அதையே ஒரு பெண் செய்தால், 'அடங்கா பிடாரி, திமிர்...' எனக் கூறும் இச்சமூகத்தைப் பற்றி...

நம் ஜனங்களின், 'நவ துவாரமும்' பேசும். இதற்கு கவலைப்படுவது புத்திசாலித்தனமல்ல! 'நியாயமாக, நேர்மையாக இருக்கிறோம்...' என்ற உணர்வு உங்களுக்குள் இருந்தால் போதும்; இருப்பினும், அமுக்கி வாசிப்பது புத்திசாலித்தனம்!

வி.டி.கே.பன்னீர், நரிமேடு: பதினெட்டு வயதுக்கு உட்பட்டோருக்கு, சிகரெட் விற்க, சிங்கப்பூரில் தடையாமே... நம் நாட்டிலும் இந்தச் சட்டம் கொண்டு வந்தால்...

சட்டத்தை அமல்படுத்தும் அதிகாரிகள் மாட மாளிகைகளின் சொந்தக்காரர்களாகி விடுவர்!

க.ஜெயகாந்தன், வருஷநாடு: நூற்றுக்கு, தொண்ணூறு சதவீத மக்கள், போலீசாரைக் கண்டு பயப்படுவது ஏன்?

சைக்கிளில் போனால், 'டிரைவிங் லைசென்ஸ் இருக்கா...' என்றும், சும்மா நடந்து போனால், 'பாஸ்போர்ட் இருக்காப்பா...' எனவும் மிரட்டி, துட்டு வெட்ட வைத்து விடுவார்களே என்ற பயம் தான்!

எஸ்.வர்ஷிதா, அவிநாசி: உங்களுக்கு வரும் காதல் கடிதங்கள் பற்றி உங்கள் கணிப்பு என்ன?

வரட்டும்; அப்புறமல்லவா கணிக்க முடியும்!

என்.எம்.கருணாகரன், மடிப்பாக்கம்: 'பென்சில்' இதற்கு சரியான தமிழ் சொல் கூறுங்களேன்...

'கரிக் குச்சி' எனச் சொல்ல மாட்டேன். வழக்கத்தில் உள்ள, எல்லாரும் பயன்படுத்தும் சொற்களை அபத்தமாக தமிழ்படுத்துவதில் எனக்கு உடன்பாடு இல்லை!

த.விமலா, கொரட்டூர்: சில பத்திரிகைகளில், இன்னாரது படைப்புகள், அறிக்கைகள், பேச்சுகள் வெளியிடக் கூடாது என்று, 'பிளாக் லிஸ்ட்' இருக்குமாமே... உண்மையா?

உண்மையே! பல்வேறு காரணங்களால், சிலர், 'பிளாக் லிஸ்ட்'ல் ஏறி விடுகின்றனர்!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us