PUBLISHED ON : நவ 27, 2016

எம்.ரேணுகா, சென்னை: தனக்கு பிடித்த எழுத்தாளர் மற்றும் வாசர்களின் படைப்புகளுக்கே, ஒவ்வொரு பத்திரிகையும் முக்கியத்துவம் தரும் என்கின்றனரே... உண்மையா?
கதாசிரியர்களைப் பொறுத்தவரை உண்மையே! வாசகனாய் இருந்து, துணுக்குகளும், சிரிப்புகளும், கேள்விகளும், ஆசிரியருக்கு கடிதங்களும் எழுதுவோரை, வேண்டியவர், வேண்டாதவர் என, பொதுவாகப் பிரிப்பது இல்லை. விதிவிலக்கு, .002 சதவீதம் இருக்கலாம்!
ஜி.ராஜசுலோசனா, கோட்டூர்: பணம் இல்லாமல் வாழ முடியுமா?
முடியாது; பசி இல்லாமல் வாழ ஒரு வழி பிறந்தால் அன்றி, பணம் இல்லாமல் வாழ முடியாது. பசி இருப்பதால் தானே பணத்தை தேடி ஓடுகிறோம்!
டி.அப்துல்லா, அனுப்பானடி: இப்போது தான், முதன் முதலாக காதலிக்க நினைக்கிறேன். காதலில் வெற்றி பெறுவது எப்படி?
அதுதானே எப்படி... அனுபவப்பட்டவங்க எனக்கும் சேர்த்து பதிலை எழுதுங்களேன்!
எஸ்.குமாரவேல், பண்ருட்டி: வாழ்க்கை வெறுப்பாக இருக்கிறது. ஏனிப்படி?
உங்களிடம் குணம் இல்லாமல் இருக்கிறது. அத்துடன், பணமும் இல்லை. இந்த இரண்டும் இல்லாதவர்களால், பலவற்றை இவ்வுலகில் பெற முடிவதில்லை. இதனால் ஏற்படும் தவிப்பு, வெறுப்பாகிறது!
எஸ்.டி.கதிரேசன், பழவேற்காடு: வாரத்தில் இரண்டு நாள் விடுமுறையை வரவேற்கிறீர்களா?
சனிக்கிழமை விடுமுறை அளிக்கும்போது, அது மிச்சம், இது மிச்சம், அரசுக்கு கோடிக் கணக்கில் செலவு குறையும் என்றனர். எது மிச்சமாச்சோ இல்லையோ, இன்னமும் பற்றாக்குறை பட்ஜெட் தான் போடுகின்றனர். மனிதனை சோம்பேறியாக்கும் சனிக்கிழமை விடுமுறையில் எனக்கு ஒப்புதல் இல்லை!
சி.ஜார்ஜ் ஸ்டீபன், பெரம்பூர்: நான் கூச்ச சுபாவமுள்ளவன்; இதனால், பல நல்ல வாய்ப்புகளையும், உதவிகளையும் இழந்துள்ளேன். என்ன செய்வது?
உங்களிடம் உள்ள குறையை நீங்களே உணர்ந்து விட்டீர்கள். இதேபோல், அதைத் தவிர்க்கவும் செய்யுங்கள். கூச்ச சுபாவத்தை அகற்ற, அசட்டு துணிச்சல் போதும் முதலில்... முயன்று பாருங்கள்!
பி.ரதிமாலை, கோவை: பொறுப்பான பதிலைச் சொல்லுங்கள்... ஆண்களை நம்பலாமா?
உங்கள் மீது உங்களுக்கே நம்பிக்கை இருக்கிறதா என, சோதித்துக் கொள்ளுங்கள்; அப்போது பிறக்கும் தன்னம்பிக்கை. பின், சுலபமாக எதிர்கொள்ளலாம் யாரையும்!
என்.கே.அருணன், பொள்ளாச்சி: என் மனைவி நல்ல குணவதி; ஆனால், அழகில்லை. மற்ற அழகான பெண்களைக் கண்டால், மனம் சபலப்படுகிறது. தப்பென்று தெரிந்தும், மனதை அடக்க இயலவில்லை. மனதை சாந்தப்படுத்த என்ன செய்யலாம்?
திருமணமான அனேக ஆண்களிடம் உள்ள குறைபாடு தான் இது! அழகிய பெண்களை கலைக் கண்ணோடு பாருங்கள்; தவறு இல்லை. ஆனால், சபலப்படுவது தான் தவறு. உங்கள் மனைவியும் உங்களைப் போல எண்ணினால்... நினைத்துப் பாருங்கள்... சபலம் இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும்!
