PUBLISHED ON : ஜன 15, 2017

டி.ஜெசிந்தா, காஞ்சிபுரம்: ஹை கிளாஸ், மிடில் கிளாஸ், லோ கிளாஸ் -இவர்களில் யாருக்கு கனவுகள் அதிகம்?
எப்பவுமே நடுவில் சிக்கி தவிப்பது மிடில் கிளாஸ் வர்க்கத்தினர் தான்... 'ஆசை இருக்கு தாசில் பண்ண... அதிர்ஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க...' - எந்த பாட்டியோ, எப்போதோ சொன்ன பழமொழி இது!
ஐ.அறிவானந்தன், கோவை: படித்து, பட்டம் பெற்றவர்கள் கையில் ஆட்சி இருந்தால், நாடு எப்படி இருக்கும்?
இதோ, இன்று, இப்போது எப்படி இருக்கிறதோ அதே லட்சணத்தில் தான் இருக்கும். இப்போது ஆட்சி பொறுப்பில் இருக்கும் அமைச்சர்களில், 90 சதவீதம் டபுள் டிகிரியும், அதற்கு மேல் பட்டமும் வாங்கியவர்கள் தானே! படிக்காத ஒருவர், 50 ஆண்டுகளுக்கு முன், ஆட்சியின் தலைமைப் பொறுப்பில் இங்கு இருந்த போது, லஞ்ச லாவண்யம் தலைவிரித்து ஆடாமல் மக்களுக்காக ஆட்சி செய்ததாக பெரியவர்கள் கூற கேட்டுள்ளேன்!
ஜெ.ஜெயராமன், முருங்கம்பாக்கம்: காதலிப்பது, காதலிக்கப்படுவது... இரண்டில் எது அதிக சுவை?
முதலாவதே சுவை என்கிறார் ஆண் உதவி ஆசிரியர் ஒருவர்; இரண்டாவதே இனிமை என்கிறார் பெண் உதவி ஆசிரியை ஒருவர். இவ்விஷயத்தில் அனுபவப்படாமல் பதில் சொன்னால், யதார்த்தம் இருக்காதல்லவா... அதனால்தான், உ.ஆ.,களிடம் உதவியைப் பெற்றேன்.
என்.வரதராஜன், அம்மாபாளையம்: நான் விரைவில் ஓய்வு பெற இருக்கிறேன்; கிடைக்கப் போகும் பணத்தை வைத்து என்ன செய்யலாம்?
இவ்வளவு காலம் உழைத்தாகி விட்டதே... இனி ஓய்வு எடுங்கள். அதற்காக மொத்தமாக முடங்கி விட சொல்லவில்லை. உங்கள் இல்லத்தைச் சுற்றி எழுதப் படிக்கத் தெரியாத சிறுவர் - சிறுமியருக்கு அறிவு கண்ணை திறந்து வைக்கும் புனிதப் பணியில் ஈடுபடலாம். கிடைக்கும் பணத்தை பிரித்து, நாலு வங்கிகளில், 'டிபாசிட்' செய்து, நிம்மதியாக இருங்கள்!
ஏ.சேகர், வத்தலக்குண்டு: யாரைக் கண்டால் உங்களுக்கு பயம்?
என் நேரத்தை விரயம் செய்யும் ரம்பத்துடன் வருபவரை கண்டால்! சில நேரங்களில், இவர்கள் தவிர்க்க இயலாதவர்களாகவும் இருந்து விடுகின்றனர்.
பி.தில்சாத் அகமது, மதுரை: அரசு மதுக்கடைகளில் விற்கப்படும், 'உற்சாக பானங்களின்' சுவை, மணம், தரம் எப்படி உள்ளது? லென்ஸ் மாமாவிடம் கேட்டுச் சொல்லவும்!
அவரிடம் கேட்பதில் - பயன் இல்லை. அவர் ஸ்காட்லாந்து, 'சரக்கான' ஜானிவாக்கர், டபுள் பிளாக் பிரியர். அதைத் தவிர, மற்ற உ.பா.,களைத் தொடுவதில்லை. நம்மூர் சரக்கு நன்றாகவே இருப்பதாக, 'குடிமகன்'கள் சொல்கின்றனர்!
கே.சூரியகாந்த், பல்லாவரம்: ஒயிட் காலர் ஜாப் தேடுவது நம் நாட்டு இளைஞர்கள் மத்தியில் மட்டும் தான் உள்ளதா, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளிலும் இதே நிலை தானா?
அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில், சாதாரண வேலைக்கும், பெரிய பதவிகளுக்கும் சம்பள வித்தியாசம் பெரிய அளவில் கிடையாது. அங்குள்ளவர்கள் பெரும்பாலும் பள்ளி இறுதிக்கு மேல் படிப்பது கிடையாது. இதனால், டிகிரி படித்திருக்கிறேனே, எனக்கு கலெக்டர் வேலை கிடைக்கலயே என்ற ஏக்கம் கிடையாது. வாழ்வின் அடிப்படை வசதி அனைவருக்கும் கிடைத்து விடுவதால், 'ஒயிட் காலர் ஜாப்' மோகம் அதிகம் கிடையாது!
