PUBLISHED ON : மார் 26, 2017

எல்.சங்கர், திருவள்ளூர்: நெருங்கிய உறவினர் ஒருவருக்கு நெருக்கடியான நேரத்தில் உதவி செய்தேன்; இப்போது, அவர், என்னைப் பார்த்தும், பார்க்காதது போல் செல்கிறாரே...
இது தான் உலக நடப்பு. பிரதிபலன் எதிர்பாராமல் செய்வது தான் உதவி; எதிர்பார்ப்பு இருந்தால், ஏமாற்றம் தான் மிஞ்சும்.
எம்.பி.பார்த்தசாரதி, பழனி: போராட்டமே இல்லாத வாழ்க்கை எப்படி இருக்கும்?
உப்பு இல்லாத அவியல் போல், சர்க்கரை இல்லாத அல்வா போல் இருக்கும்.
எஸ்.இஸ்மாயில், துவரங்குறிச்சி: யாரை கண்டால் உங்களுக்கு பயம்?
உள்ளத்தில் இருந்து வராமல், உதட்டில் சிரிப்பைக் காட்டும், கள்ளச் சிரிப்பர்களைக் கண்டால், 'அலர்ஜி!'
மு.பிரசன்ன வெங்கடேஷ், தல்லாகுளம்: அதிர்ஷ்டம் என்றாவது ஒரு நாள் வீட்டுக் கதவை தட்டும் என்று காத்திருக்கலாமா?
உழைக்காமல், மூன்று வேளை கொட்டிக் கொள்ள வசதி இருந்தால், எம கிங்கரர்கள் கதவை தட்டும் வரை காத்திருக்கலாம். போங்க சார்... போய் வேறு ஏதாவது தொழிலை செய்யுங்க; உத்தியோகம் பாருங்க... அதிர்ஷ்டம் யோகம், நேரம்ன்னு காலத்தை வீணாக்காதீங்க!
என்.சத்தியமூர்த்தி, சென்னை: 'கை தூக்கி விட ஆளில்லையே...' என, புலம்புகின்றனரே சிலர்...
இவர்கள் சுயமுயற்சி இல்லாதவர்கள்; சோம்பேறிகள், துணிச்சல், தன்னம்பிக்கை அற்றவர்கள்; கடைசி வரை புலம்பிக் கொண்டே இருக்க வேண்டியது தான்!
சி.பெர்னாட்ஷா, காஞ்சிபுரம்: 'மாபியா' கும்பல்ன்னா என்னங்க?
'மாபியா' என்பது, இத்தாலி மொழிச் சொல்; 'என்னைக் காப்பாற்று' என்பது இதன் பொருள். இளம் பெண் ஒருத்தியை, ரவுடிக் கும்பல் ஒன்று துரத்திய போது, அவள், 'மாபியா... மாபியா...' என்று, அலறியபடியே ஓடினாளாம். அப்போது முதல், சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கும்பலைக் குறிக்க இச்சொல் பயன்பாட்டுக்கு வந்தது!
ரா.கிருஷ்ணா, வருஷநாடு: என் மனம் எப்போதும் அமைதியின்றி தவிக்கிறதே...
முன்யோசனை இன்றி செயல்படுவோரிடமிருந்து மன அமைதி ஓடிப் போய் விடும். முன்யோசனையுடன், உள்ளன்போடு, உறுதியுடன் கடமையை செய்பவர்களிடம், என்றென்றும் மன அமைதி குடி கொண்டிருக்கும்!
