
ஜி.ராஜேஸ்வரி, சிவகங்கை: கல்லூரியில் படிக்கும் என் மகள், ஆண் நண்பர்களுடன் பழகுவது மிகவும் பயமாக உள்ளது. என் பயத்தை அவளிடம் எப்படி கூறுவது?
இக்காலப் பெண்களுக்கு ஆண்களுடன் பழகும் எல்லை நன்றாகவே தெரியும். பொத்திப் பொத்தி வளர்ப்பதால் தைரியமற்றவர்களாக போவதுடன், எதிர்காலத்தில் ஊரை, உலகத்தை, கொடுமைக்கார புருஷன் வாய்த்தால் அவனை எதிர்கொள்ளத் தெரியாதவர்களாக, தெம்பற்றவர்களாகி விடுகின்றனர். உங்கள் பயத்தை விட்டொழியுங்கள்!
* எம். குமார், கடலுார்: ஆணின், 14 வயது மற்றும் 21 வயது காதல்... - இதில், எது நீடிக்கும்?
இரண்டுமே, 'பெயிலியர்' ஆகக் கூடும்! ஆண்களுக்கு, 26 - 27க்கு பிறகுதான் மனமுதிர்ச்சி ஓரளவேனும் வரும். அதன்பின், இந்த முயற்சியில் இறங்கினால் நலம்!
ஜி. கண்ணன், திருப்பூர்: டிபன் சாப்பிட்டு, கை கழுவிய பின், காபி சாப்பிடுவது, டிபன் சாப்பிட்டவுடன் காபி குடிப்பது எது நல்லது?
நல்லது, -கெட்டது என்ற பிரச்னையே இங்கு வேண்டாம். சுவை எதில் என்று கேட்டால், கடைசி ஐட்டத்திற்கு, 'ஆர்டர்' கொடுக்கும் போதே, 'காபியும் சேர்த்துக்கொண்டு வரவும்' என, சப்ளையரிடம் கூறி, கடைசி ஐட்டத்திற்கு ஒவ்வொரு விள்ளலுடன் ஒரு மடக்கு என, காபி சாப்பிடும் போது கிடைக்கும் திருப்தியும், சுவையும் இருக்கிறதே... முயற்சித்துப் பாருங்கள்!
மு. கலாவதி, கரூர்: உடலில் ஒரு சின்ன ஆபரேஷன் பண்ணிக் கொண்டால், அதையே சாக்கு வைத்து, 10 ஆண்டுகளானாலும், நோயாளி போல் நடந்து கொள்கின்றனரே பல பெண்கள்; காரணம் என்ன?
உங்களின் ஓரகத்தி, வீட்டு வேலைகளில் உங்களுக்கு ஒத்தாசை செய்யவில்லை என நினைக்கிறேன். உங்களின் ஆதங்கம், கேள்வி கேட்டுள்ள தொனியில் புலப்படுகிறது. சின்ன ஆபரேஷனோ, பெரிதோ மன வலிமையற்றவர்கள் தம்மை சீக்காளியாகவே நினைத்துக் கொள்வர். புரிந்து கொள்ளுங்கள்; பெண்ணை பெண்ணே குற்றம் காணும் குணத்தை விட்டொழியுங்கள்!
* என்.கிருஷ்ணன், சென்னை: மனைவிக்கு பயப்படாதவன் வீடு, நிதி நிலைமையில் முன்னேறுமா?
நிதி நிலையைப் பொறுத்தவரை சந்தேகம்தான்! குடும்பத்தின் நிதி அமைச்சர் பொறுப்பு பெண்கள் கையில் உள்ள இல்லங்கள் அனைத்தும் செழிப்புடன் இருப்பதென்னவோ உண்மைதான்!
மு.திலீபன், சிதம்பரம்:அறிவு, அடக்கம், அழகு... இம்மூன்றில் பெண்ணுக்கு மிக முக்கியமாக எது தேவை?
அறிவு! இக்காலப் பெண்களுக்கு அறிவு மிகத் தேவை. அறிவை வளர்த்துக் கொள்ளும் பெண்ணிடம், அடக்கம் போன்ற பண்புகள் தானாக வந்து ஒட்டிக் கொண்டு விடாதோ!
* ச.விஜயலட்சுமி, நீலகிரி: மனிதனுக்கு பணம் முக்கியமா, குணம் முக்கியமா?
முதலாவது வந்த உடன், இரண்டாவது சென்று விடக் கூடாது என்பது தான் முக்கியம்!

