தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!

அந்துமணி பதில்கள்!


PUBLISHED ON : டிச 10, 2017

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : டிச 10, 2017


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எல்.ரகுபதி, சென்னை: தன் தவறை மனிதன் உணருவது எப்போது?

இரண்டு விஷயங்கள் நடந்த பின்னர் உணர்கிறான்; ஒன்று, பணத்தை இழந்த பின்; இரண்டு, மனதை கெடுத்துக் கொண்ட பின். இவை இரண்டையுமே இழக்காத போது, தவறை உணருவோர் சிலரே. இவர்கள் சந்தோஷமாக வாழ்கின்றனர்.

எம்.மகாராஜன், தேனி: லஞ்சம் வாங்கிக் கொழுப்பவர்கள், கடைசியில் அதை யாரிடம் கொண்டு கொட்டுவர்?

எம்.பி.பி.எஸ்., - எம்.எஸ்., - எம்.டி., முடித்தவர்களிடம் தான்!

* வி.பார்த்தசாரதி, விருதுநகர்: மற்றவர்களை கவர்ந்திழுக்க என்ன செய்ய வேண்டும்?

ஒரே ஒரு வேலைதான் செய்ய வேண்டும்... அது முகஸ்துதி! இன்றைய உலகில் முகஸ்துதிக்கு மயங்காத மனிதன் உண்டோ... 'ஆஹா... உங்களைப் போல் உண்டா... உங்கள் அறிவு கூர்மையை எப்படி பாராட்டுவது... உங்கள் தயாள சிந்தையை எப்படி மெச்சுவது...' என, அவிழ்த்து விடுங்கள். மற்றவர்களை சுலபமாக கவர்ந்து விடலாம்.

* அ.லட்சுமி, கோவை: பெண்கள் வேலைக்குப் போவதால் நன்மை அதிகமா... தீமை அதிகமா?

தொண்ணுாறு சதவீதம் நன்மை தான். வேலைக்கு செல்லும் பெண்ணுக்கு, தன்னம்பிக்கை கிடைக்கிறது; அடக்குமுறைக்கு தலை வணங்கி நடக்கும் நிலை மாறுகிறது; குடும்ப பொருளாதாரம் உயருகிறது. இன்னும் எத்தனையோ அடுக்கிக் கொண்டே போகலாம்!

டி.வாசுதேவன், ஒட்டன்சத்திரம்: 'இவன் வாழத் தெரிந்தவன்' என, யார் யாரை குறிப்பிடலாம்?

தன்னைப் பற்றி, பிறர் தவறாக, அவதுாறாக பேசும் போதும், சொல்லும் போதும் அதை சாதாரணமாக சிரித்துக் கொண்டே ஏற்றுக் கொள்கிறவன், கேட்டுக் கொள்கிறவனைச் சொல்லலாம்!

க.சந்திரன், மதுரை: தற்போதைய சூழ்நிலையில் ரசிகர்கள், சிறப்பான கதையோட்டமுள்ள படங்களை விரும்புகின்றனரா, கவர்ச்சி ஆட்டத்தை விரும்புகின்றனரா?

இடை, தொடை, கவர்ச்சி ஆட்டங்களைப் பார்த்து, அவற்றை ரசிக்க பழகி விட்ட ரசிகர்களுக்கு, அவற்றை முற்றிலும் துறக்க விருப்பமில்லை. அதே நேரம், நல்ல கதையம்சத்தையும் எதிர்பார்ப்பவர்களாகவும் இருக்கின்றனர்!

* பி.இந்திரா, புதுச்சேரி: குற்றம் செய்யும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மக்களே தண்டிக்க ஆரம்பித்து விட்டால்...

நாடு உருப்படுவதில் நம் மக்களுக்கு அவ்வளவு சீக்கிரம் ஆர்வம் உண்டாகுமென்று பகல் கனவு காண, நான் தயார் இல்லை.

எஸ்.ராணி, கம்பம்: எந்த மொழி மீது உங்களுக்கு பற்று அதிகம்?

மழலை மொழி மீது. மழலைக்கு எந்த பேதமும் கிடையாதே!

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us