PUBLISHED ON : ஜன 28, 2018

கு.வசந்தி, கடலுார்:அரசின் எந்த இலவச திட்டத்தை வெறுக்கிறீர்கள்?
எல்லா இலவச திட்டங்களையும்! இலவசங்கள், இடையில் உள்ளோரின் இல்லங்களை வளமாக்கவே பயன்படுகிறது; பயனீட்டாளர்களின் கையில் முழுமையாக சென்று அடைவதே இல்லை. மேலும், இலவசங்கள், சோம்பேறிகளை வளர்ந்து விடவே வித்திடுகிறது!
* எஸ்.சத்யபாமா, உடுமலைப் பேட்டை: ஒரு குடும்பத்தில் அதிகம் உழைப்பது ஆணா? பெண்ணா?
சந்தேகம் இல்லாமல் பெண் தான்; சம்பாதித்து போடுவதுடன் தம் கடமை முடிந்து விட்டதாகவே பெரும்பாலான ஆண்கள் கருதுகின்றனர். சமைப்பதில் ஆரம்பித்து, பிள்ளைகளின் கல்வி, எதிர்காலம் வரை நெடுந்துார சிந்தனையுடன் உழைப்பது பெண்கள் தான்!
பி.கோபிநாத், திருப்பூர்: ஒரு திறமையும் இல்லாமல், கர்வத்துடன் அலைபவர்கள் பற்றி...
இவர்களிடம் உள்ள அடிப்படை பிரச்னை - தாழ்வு மனப்பான்மை; நம்மிடம் எந்தத் திறமையும் இல்லையே... எதைத் தொட்டாலும் தோல்வியடைகிறதே என்ற குறை! இதை மற்றவர்களிடம் மறைக்க, ஏன் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்ள, 'கர்வ' போர்வையை போர்த்தியபடி அலைகின்றனர்!
* என்.எச்.ராமன், உடுமலை: நன்றி மறந்தவர்களைத் தண்டிப்பது எப்படி?
தண்டனை கொடுக்க நாம் யார்? நன்றி மறந்தவருக்கு தண்டனை கொடுப்பது எப்படி என்று சிந்தித்துக் கொண்டே இருந்தால், நம் நிம்மதி போய், பல தொல்லைகளும் வந்து சேர்ந்து விடும். அவரவருக்கு கிடைக்க வேண்டியது, அந்தந்த நேரத்தில் கிடைத்தே தீரும்... நிம்மதியாக மற்ற வேலைகளைப் பாருங்கள்!
ப.ராஜேஸ்வரி, சென்னை: வேலையில்லா திண்டாட்டம் எப்போது ஒழியும்?
பிறரிடம் வேலை கேட்கும் பழக்கம் என்று ஒழிகிறதோ, அப்போது, இப்பிரச்னை தீரும்! ஒவ்வொருவரும் தம் தகுதிக்கு ஏற்ப, தமக்கென ஒரு சொந்த தொழிலை மேற்கொள்ள வேண்டும். அப்போது, வேலையில்லை என்ற சொல்லைக் கேட்க முடியாது!
எஸ்.சாத்தப்பன், திருவள்ளூர்: இன்றைய சூழ்நிலையில் பிழைக்கத் தெரிந்தவர்கள் யார்?
கூடவே இருந்து குழி பறிக்கத் தெரிந்தவர்கள்; கோள் சொல்லக் கற்றுக் கொண்டவர்கள்; 'உங்களைப் போல் உண்டா?' என, ஜால்ரா தட்ட பழகிக் கொண்டவர்கள்... இவர்கள் பிழைத்து வருகின்றனர். ஆனால், இவர்களின் இந்த மாதிரி பிழைப்பு அதிக நாள் நீடிக்காது!
ஆர்.பத்மினி மதுரை: எது, எதற்கு பொறுமை தேவை?
வெற்றிக் கனிகளைப் பறிக்க, நல்ல முடிவுகளை பெற, சாதனைகள் படைக்க பொறுமை தேவை. 'பொறுத்தார் பூமி ஆள்வார்' என்று கேள்விப்பட்டதில்லையா?
