PUBLISHED ON : ஆக 05, 2018

கே.வாசு, பொள்ளாச்சி: கணவன் குடிகாரனாக இருந்தால், மனைவி தகராறு செய்கிறாள்; கணவனும், மனைவியுமே குடிகாரர்களாக இருந்து விட்டால் தகராறு ஏற்படாது அல்லவா?
அபாரமான கண்டுபிடிப்புத்தான் போங்கள்! கீழ்தட்டு மக்களில் இருபாலாருக்குமே குடிக்கும் பழக்கம் இருக்கத்தான் செய்கிறது. அங்கே, குடித்து விட்டு கணவனுக்கு சரிசமமாக மனைவியும், சேலையை துாக்கிக் கட்டி தகராறு செய்வதை கண்டதில்லையா... மொத்தத்தில், குடி, குடியைக் கெடுக்கும்!
* ஜி.விமல், பண்ருட்டி: அதிர்ஷ்டம் என்றாவது ஒருநாள் வீட்டுக் கதவை தட்டும் என்று காத்து இருக்கலாமா?
உழைக்காமல், மூன்று வேளை கொட்டிக் கொள்ள வசதி இருந்தால், எம கிங்கரர்கள் கதவைத் தட்டும் வரை காத்திருக்கலாம். போங்க சார்... போய் வேறு ஏதாவது தொழிலை செய்யுங்க; உத்தியோகம் பாருங்க... அதிர்ஷ்டம் யோகம், நேரம்ன்னு காலத்தை வீணாக்காதீங்க!
வி.பார்த்தசாரதி, அரக்கோணம்: கிரிக்கெட் ஊழலை ஒழிக்க முடியாது என்றால் அந்த விளையாட்டையே தடை செய்து விட்டால் என்ன?
அருமையான யோசனை. மக்களின் நேரத்தை, உழைப்பை களவாடும் மோசமான திருடன் இந்த கிரிக்கெட்! மேட்ச்களின் போது, 'டிவி' முன் பழிக்கிடப்பது நின்று போகும்; மக்களின் உழைப்பும், நேரமும் நாட்டுக்குக் கிடைக்கும்.
* ஜி.சிவராமன், சென்னை:பிறரை ஏமாற்றாமல், உண்மையான உழைப்பு இருந்தும், சேமிப்பு இல்லாத நிலையில், அத்தியாவசியமான செலவுகள் வந்து விடுகிறதே!
'இயலாது' என்பது தோன்றி விட்டாலே எல்லா சங்கடங்களும் வந்து சேர்ந்து விடும்! தேவைகள் எதையாவது குறைத்துக் கொள்ளும் மனத் துணிவை வளர்த்துக் கொண்டால், 'சேமிப்பு' கை கூடிவிடும். சேமிப்பு இல்லாத வாழ்வு என்றுமே, 'டென்ஷன்' நிறைந்ததாகத் தான் இருக்கும்.
பா.துர்கா, திருவள்ளூர்: அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் கூட்டுக் குடும்ப முறை கிடையாதாமே... முதியவர்கள் இதனால் சிரமப்பட மாட்டார்களா?
அமெரிக்கா, ஐரோப்பா எல்லாம் ஏன் போகிறீர்கள்... இங்கே, நகரங்களில் என்ன வாழ்கிறதாம்... முதியோர் இல்லங்கள் பெருத்துக் கொண்டே போகின்றனவே!
* எஸ்.கண்ணன், விருதுநகர்: தனி மனித ஒழுக்கம் என்பதை எப்படி வரையறை செய்வது?
ரொம்ப சிம்பிள்! அடுத்தவர் செய்யும் எந்த செயல் எல்லாம் நம்மை பாதிக்கக்கூடாது என்று நினைக்கிறோமோ, அதையெல்லாம் அவர்களுக்கு நாம் செய்யாதிருப்பதே தனி மனித ஒழுக்கம்!
பி.ஸ்ரீநிவாஸ், ஊட்டி: உலகத்தில் சிறந்ததாக கருதப்படுவது கேள்வி கேட்பதா அல்லது பதில் சொல்வதா?
கேள்வி கேட்பது! 'கேள்வி கேளுங்கள்' என, மக்களைத் துாண்டி, புரட்சிக்கு வித்திட்டான் தத்துவஞானி அரிஸ்டாட்டில். இங்கே, நம்மூர் வாத்தியார்களில் பலர், மாணவன் வாயைத் திறந்தாலே பிரம்பைத் துாக்கி விடுகின்றனரே! அன்பான ஆசிரியர்களே... மாணவர்களைக் கேள்வி கேட்கத் துாண்டி விட்டுத்தான் பாருங்களேன்!
