PUBLISHED ON : ஆக 18, 2019

ஆர். பூமாதேவி, புதுச்சேரி:பத்திரிகை துறையில், இல்லத்தரசிகளுக்கு வாய்ப்பு உண்டா?
எனது இந்த பதிலை, 'எடிட்' செய்யப் போவது, பி.இ., படித்துக் கொண்டிருக்கும், ஒரு இளைஞரின் அம்மாவான, செல்வி, என்ற, 'மேடம்' தான்! அதன் பிறகு, பொறுப்பாசிரியர் பார்வைக்கு செல்லும்!அதனால், உங்களுக்கு சந்தேகம் ஏதும் வேண்டாம்!
* கே. கோமளம், மதுரை:'டிவி' சேனல்களில் செய்தி பார்த்துக் கொண்டிருக்கும்போது, 'ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்...' என, அறிவிப்பாளர் சொல்லும்போது, என்ன செய்வீர்கள்?
அனைத்து நோக்கர்களும் செய்வது போல், அடுத்த, 'சேனல்' மாறி விடுவேன்! திரும்பத் திரும்ப ஒளிபரப்பப்படும் விளம்பரங்களை பார்த்தபடி இருக்க முடியுமா?
* கி. பிச்சுமணி, நெல்லை: ஞானி என்று சிலரைக் கூறுகின்றனரே... அவர்கள் யார்?
மிகுந்த கெட்டிக்காரர்கள்... தம்மிடம், 'மணிபர்சை' வைத்துக் கொள்ளாதவர்கள்... அது உள்ளவர்களை, தம் சிஷ்யர்களாக்கி விடுவரே, இக்காலத்து ஞானிகள்!
* மு. சம்சுகனி, துாத்துக்குடி: அடிக்கடி கட்சி மாறும் அரசியல்வாதிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
மிக மிக தேச பக்தி மிக்கவர்கள்! நம் நாட்டிற்கு விடுதலை வாங்கிக் கொடுத்தவரை, தம் நெஞ்சில் உள்ள சட்டையில் எப்போதும் வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும், 'தியாகிகள்' என்றே தோன்றுகிறது!
எ.வி. பாலன், நெல்லை:நண்பன் ஒருவன், என்னை ஏமாற்றி விட்டானே...
நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. 'நண்பரிடம் ஏமாந்து விட்டேன்...' எனக் கூறுங்கள். இது, ஒருமுறை என்றால், அறியாமை... இரண்டாவது தடவையும் நடந்திருந்தால், முட்டாள் தனம்.
பி. பாலாஜி கணேஷ், சிதம்பரம்:முகநுால் பக்கமே வருவதில்லையா அந்துமணியாரே...
வம்புகளின் பக்கம் தலை திருப்ப மாட்டேன்; என்னுடன், 'செல்பி' எடுத்துக் கொள்ள விரும்புவோரையும், 'ம்ஹும்' என்று தவிர்த்து விடுவேன்!
ஆர். பிரசாத், புதுச்சேரி: உயர்ந்த பேச்சாளர்கள் என, யாரைக் கருதுகிறீர்கள்?
வானில், 30 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் விமானத்திலிருந்து, கீழே இருப்பவர்களுக்கு செய்தி அனுப்பும், 'பைலட்'டுகள் தான்!
