PUBLISHED ON : ஆக 25, 2019

ஆர். காளிதேவி, மறைமலைநகர்: வாய்ப்புக்காக காத்திருப்பவர் - அதை உருவாக்கிக் கொள்பவர்... யார் புத்திசாலி?
இரண்டாமவர் தான். சமீபத்திய உதாரணம்: சரவணபவன் ராஜகோபால். சென்னை, கே.கே.நகரில், சாதாரண மளிகை கடை துவங்கி, கோடீஸ்வரர் ஆனவர்! (அவரது மறுபக்கம் கேவலமானது; அதை நாம் புரட்ட வேண்டாம்!)
ஆணை கூத்தன், சென்னை: தற்போது எடுக்கும் திரைப்படங்கள், 100 - 200 கோடிகளில் எடுத்து விட்டு, கட்டணத்தை, 200 - 300 ரூபாயாக வைப்பதில் என்ன நியாயம்?
முதலாவது, 'அள்ளி' விட சேர்த்து வைத்துள்ளனர்... இரண்டாவது, நடிப்பதற்கு நடிகையரும் கிடைத்து விடுகின்றனர். மூன்றாவது, 'சேர வேண்டியவர்'களுக்கு, 'பெட்டி'கள் பலவும் கோடிகளுடன் சேர்ந்து விடுகின்றனவே... அதன்பின், எங்கிருந்து நடவடிக்கை வரும்?
எஸ். பிரேமாதேவி, சென்னை: தீய எண்ணங்கள் நுழையாதபடி, மனக் கதவை பூட்டும் சாவி, மனிதனிடம் இருக்கிறதா?
சாவி அவனிடம் தான் உள்ளது. அவன் சாவியைத் தொலைத்து விடவேண்டும். நன்மை வரும்போது மட்டுமே அதை தேட வேண்டும்!
* பி. பாலகுமார், மதுரை: பல அயல்நாடுகள் போல், இரண்டே கட்சி முறையை, நம் நாட்டிலும் கொண்டு வர முடியுமா?
தற்போது, காஷ்மீரில், சிறப்பு அந்தஸ்தான, 370ஐ துாக்கி எறியப்பட்டது போல், பற்பல நெருக்கடிகளை ஏற்படுத்தி, 'திண்டுக்கல்'லின் வியாபாரத்தை, சிறிய கட்சிகளின் மூலம் பெருக்கி விடுவர் என்றே தோன்றுகிறது
* எஸ். தீபா, சாலிகிராமம், சென்னை: அலுவலகத்தில், சிலருக்கு மட்டும், சிறப்பு முக்கியத்துவம் கிடைக்கிறதே... அது, அதிர்ஷ்டத்தினாலா?
நீங்கள் கேட்பது போன்று, உலகில் எதுவும் இருப்பதாகவே நான் நம்பவில்லை. தன் மூளையை பயன்படுத்தி, அபார வெற்றிகளைக் குவிப்பவர்களுக்கும், தன்னை விட மேலானோருக்கு கொடுக்கும் மரியாதையில் கிடைப்பதையே, 'அதிர்ஷ்டம்' என்று கூறித் திரிகின்றனர்!
பி. கவிதா, சிதம்பரம்: சசிகலா, 'வெளியே' வந்து, அ.தி.மு.க.,வின் தலைமையை ஏற்க வாய்ப்பு உள்ளதா?
இதென்ன கேள்வி... 100க்கு 120 சதவீதம் வாய்ப்புள்ளது. சிறந்த, 'கட்-அவுட்' தயாரிப்பாளர் ஒருவர் மூலம், தன் தலையை அளவெடுத்து, அதில், 'அ.தி.மு.க., தலைமை' என, வண்ணத்தில் எழுதி, அதை சூடிக்கொண்டால்... 'தலைமையோ தலைமை' பொறுப்பு தானே!
பாரதி முருகன், மணலுார்பேட்டை: வெளிநாட்டு, உ.பா.,களில் உங்களுக்கு பிடித்தது எது... என்னிடம், இந்த கேள்வியை கேட்கிறீர்களே... லென்ஸ் மாமாவிடம் இதற்கான பதிலைக் கேட்டேன்...
இங்கிலாந்து நாட்டில், ஸ்காட்லாண்ட் பகுதியில், தயாராகும், 12 ஆண்டுகள், 'ஜானி வாக்கர் - டபுள் பிளாக்' தான் பிடிக்குமாம்... அவ்வப்போது, ரஷ்ய நாட்டில் தயாராகும், 'வோட்கா' என்ற, உ.பா.,வை சாப்பிட்டு விடுவாராம்; இதில், தண்ணீர் கூட கலக்க வேண்டாமாம்!
