PUBLISHED ON : அக் 13, 2019

வி. வாசுதேவன், கோவை: அந்துமணி, உங்களுக்கு இப்போது என்ன வயதிருக்கும்?
பா.கே.ப., பகுதியில் வெளியாகும், என் புகைப்படங்களை வைத்துக் கூட கண்டுபிடிக்க முடியவில்லையா? ஆராயும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளுங்கள், வாசுதேவன்!
* எம். ரமேஷ், சிவகாசி: எப்படிப்பட்ட நண்பர்களை கழற்றி விடுவது நல்லது?
கூடவே இருந்து கழுத்தை அறுப்போர், காலை வாரி விடுவோர், 'பர்ஸ்' பலம் பார்த்து பின் தொடர்வோர்... இன்னும் பல... சொல்லிக் கொண்டே போகலாம்; இடமில்லை!
* பா. ஜெயஸ்ரீ, கடலுார்: நீங்கள் எழுதும் பதில்களை ஏற்று, ஒரு சில வாசகர்களாவது நடந்து கொள்கின்றனரா?
ஓ... இதை, அவர்கள் எழுதும் கடிதங்கள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. நேரம் மிச்சப்படுத்துவதில், சம்பாதிப்பதில், நண்பர்களுடன் பழகுவதில், பணத்தை சேமிப்பதில்... இப்படி இன்னும் பல.
அப்புறம்... நான் கூறும் சமையல் குறிப்புகளை கூட செய்து பார்த்து, சுவைத்ததையும் எழுதுகின்றனரே!
கே. சுரேஷ், கோவை: ஒரு சில நாளிதழ்கள் போல், நம் இதழில் சினிமா விளம்பரங்கள் அதிகமாக வருவதில்லையே...
சினிமா விளம்பரங்கள் அதிகம் வெளியாகும் இதழ்களை, சினிமா விரும்பிகள் தான் அதிகமாக படிக்க கூடும். அவற்றில், மற்ற முக்கியமான நாட்டு நடப்பு செய்திகளை படிக்க முடியுமா!
அப்பத்திரிகைகளில், வர்த்தக நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை விளம்பரம் செய்ய, 1 செ.மீ.,க்கு, 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும்; இதுவே சினிமா விளம்பரதாரர்களுக்கு, 100 ரூபாய்.
சினிமா செய்திகளை விரும்பி படிக்கும் சாதாரண மக்களால், விலை உயர்ந்த காரையோ, 42 அங்குல, 'டிவி' மற்றும் 'டபுள் டோர், ப்ரிஜ்'ஜையோ வாங்க முடியுமா? இது, அந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு புரிந்தால் சரி!
இந்த நிறுவனங்கள், அந்த இதழ்களை தவிர்ப்பது, அவர்களுக்கு லாபம்!
* ஆர். கிருஷ்ணமூர்த்தி, சென்னை: ஆக்கிரமிப்புகளை தடுக்க முடியாதா?
ரூபாய், 'நோட்டு'களில் சிரித்தபடி, காந்திஜி இருக்கும் வரை, அது, பகல் கனவு தான்!
ஜி.எஸ். கலாவதி சந்திரசேகர், சென்னை: கிரிக்கெட் வீரர், சச்சின் டெண்டுல்கர் போன்றோர், குறைவாக படித்திருந்தாலும், ஆங்கிலத்தில் சரளமாக பேசுகின்றனரே...
ஆங்கில மொழி போதனா முறை உள்ள பள்ளியில் படித்திருக்க வேண்டும்.
இப்போது தான், அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகள், இதற்கான பயிற்சி வகுப்புகளை, எல்லா நாடுகளிலும் நடத்துகின்றனவே... இவற்றில் படித்தால், நுனி நாக்கு ஆங்கிலம் பேச முடியும்!
