
பா. ஜெய்குமார், வந்தவாசி: சம்பளம் முழுவதையும், மனைவியிடம் தரலாமா?
உங்கள் இருவர் பெயரிலும், வங்கியில் இணைந்து சேமிப்பு கணக்கு இருந்தால், தாராளமாகக் கொடுக்கலாம்; வீட்டுச் செலவு போக மீதமுள்ளதை, சேமிக்கும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும், மனைவி!
* எம். மிக்கேல்ராஜ், சாத்துார்: அரசியல் என்பது, பொது சேவையா அல்லது ஒரு தொழிலா?
காமராஜர் காலம் வரையிலும், எம்.ஜி.ஆர்., ஆட்சியிலும், நீங்கள் கூறியது போல், பொது சேவையாக இருந்தது! அதன் பிறகு, 'நாலாண்டு' ஜெயிலாக மாறி விட்டது! கருணாநிதி காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது இத்தொழில்; கடைசியாக ஜெயிலில் அடைக்கப்பட்டார், ஜெ., அது, இன்றும் தொடர்கிறது!
மெஹ்ருன்னிசா பேகம், திருச்சி: எங்கள் ஊர் திருச்சி என்றவுடன், உங்களுக்கு நினைவுக்கு வருவது எது?
ஆசிரியரிடம் அடி வாங்கியது! தினமும், பள்ளி அருகில் இருக்கும் காவிரியில், மதியம் நீச்சலடித்து குளித்து விட்டு, 'லேட்'டாக பள்ளிக்கு போகும்போது, நீங்கள் சொல்வது போல் நினைவுக்கு வருவது, முட்டிக்கால் போட்டது தான்!
என். ஜெயன், திருப்பூர்: பெண்களும், மதுவை விரும்பி அருந்தும் நாடுகள் எவை?
பிரிந்து போன ரஷ்ய நாடுகளிலும், ஐரோப்பாவில், பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்திலும் அதிகம்!
அதே. இளங்குமரன், சென்னை: ஒரு சில அரேபிய நாடுகளில், கண்ணுக்கு கண்; பல்லுக்கு பல் தண்டனை முறைகள் உள்ளதே... இதே போல, நம் நாட்டிலும் செய்தால் என்ன?
இதைத்தான் ஆதரித்தும், நான் எழுதி வருகிறேன். இங்கு, சுப்ரீம் கோர்ட் வரை சென்று, பின், ஜனாதிபதி வரை சென்று, அதன் மீதும், 'அப்ளை' செய்து விடுகின்றனரே... நம் சட்டம் அப்படி உள்ளது!
தண்டனை பெற்றவர்கள் தப்பிக்க, நம் நாட்டில் தான், வழிமுறைகள் ஏராளம் உள்ளது!
இதை, மாற்றியே தீர வேண்டும்!
தங்க. குஞ்சிதபாதம், சிதம்பரம்: உலக புகழ்பெற்ற, எங்கள் ஊர் கத்தரிக்காய் கொஸ்தை, இட்லிக்கு தொட்டு ருசித்திருக்கிறீர்களா?
ஓ... எனக்கே தயாரிக்க தெரியுமே... பிரமாதமாக இருக்கும்! ஆனால், நெல்லை, குமரி மாவட்ட கொஸ்துகளும் சுவையாகத்தான் இருக்கும்; தயாரிப்பது சுலபம்! உங்கள் ஊர் கொஸ்து, நேரத்தைப் பிடுங்கி விடுமே!
* கு. கணேசன், மறைமலை நகர், செங்கல்பட்டு: பெற்றோரின் அருமையை, பிள்ளைகள் எப்போது உணர்வர்?
பல பிள்ளைகளுக்கும், அவர்கள், உயிரோடு இருக்கும்போதே தெரியும்! சிலருக்கு, அவர்களை இழந்த பின் தான் தெரிய வரும்!