
கி. சுரேஷ், கோவை: பெரும்பாலான பத்திரிகைகள், 'டிவி' சேனல்கள், நஷ்டத்தில் தான் இயங்குகின்றன என்கின்றனரே... உண்மையா?
ஓரளவு உண்மை தான்... ஆனால், அவர்கள், காந்தி நோட்டை, 'சேர்த்த' பெரும் பணக்காரர்கள்; கட்சி மற்றும் ஆட்சியின் மூலம்!
அதனால், இந்த நஷ்டம் அவர்களுக்கு, ஒரு பொருட்டே அல்ல!
* மா. சுதிக் ஷா, சேலம்: அரசு வேலையில் உள்ள பெண்களும், லஞ்ச, ஊழலில் ஈடுபடுகின்றனரே...
அவர்களுக்குள்ளும், ஆண்களின் மனப்பான்மை இருப்பதையே காட்டுகிறது; இதற்கு காரணம், உடன் பணியாற்றும் ஊழல், ஆண் அதிகாரிகளிடமிருந்து தொற்றி கொண்டதாகவும் இருக்கலாம்!
ப. மகாலிங்கம், சென்னை: ரஜினி நடித்த, 'தர்பார்' படம் நல்லாதானே இருக்கு?
'டிவி'யில் பார்த்தேன்... விளம்பர இடைவேளைகளின் போது, வேறு சேனல்களுக்கு மாறி விட்டேன் என்பது வேறு விஷயம். படத்தின் கரு நன்றாக இருந்தாலும், ரஜினிக்கு ஏற்ற கதை அல்ல... அதனால் தான் படம் தோல்வியைத் தழுவியது!
கட்சி ஆரம்பிக்கும் முன், ஒரு வெற்றி படத்தை தரவேண்டும் ரஜினி!
டி. பாரதி, சென்னை: கொரோனாவால் லாபம் சம்பாதித்தவர்கள், மளிகைக் கடைக்காரர்களும், காய்கறி கடைக்காரர்களும் என்பது உண்மை தானே!
உண்மையாக இருந்து விட்டுப் போகட்டும்; அவர்கள் திறந்திருக்கவில்லை என்றால், நீங்கள் பசி ஏப்பத்தில் அல்லவா தவித்திருப்பீர்கள்; அதை உணர்ந்து பார்த்தீர்களா?
அ. ராஜா ரகுமான், கம்பம்: 'ஒரு மணி நேரத்தில், ஒரு லட்சம் கோடி ரூபாய் திரட்டித் தருகிறேன்...' என, முன்னாள் நிதி அமைச்சர், ப.சிதம்பரம் கூறியுள்ளாரே...
ஊழல் வழக்கில் சிக்கி, சிறையில் இருந்தவர், மனம் இளகி, தன் வீட்டின் உள் அறைகளை திறந்து விடலாம் என, நினைத்து விட்டாரோ என்னவோ!
ஆர். சுப்பு, திருத்தங்கல்: தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்துக்கு முதல்வராகும் அதிர்ஷ்டம் கிடைக்குமா?
ஓ... ஆழ்ந்த துாக்கத்தில் அவர் கனவில் இருக்கும்போது... ம்... அதிலாவது அனுபவித்துப் போகட்டுமே!
* எஸ். ராஜலட்சுமி, மதுரை: அலுவலகத்தில் வேலை செய்யும் ஆண் ஊழியர் ஒருவர், என்னிடம் அடிக்கடி, அந்தரங்கம் பற்றி ஆலோசனை கேட்கிறார்... நான் என்ன செய்ய?
முதலில் அவரிடமிருந்து, 'கட்' போடுங்கள்... இவற்றை பற்றி எல்லாம் கேட்டு, உங்களை, 'வளைக்க' முயற்சிக்கிறார் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!