
ஜி. குப்புசுவாமி, சென்னை: ரம்ஜான் பிரியாணி சாப்பிட்டீர்களா சார்?
நான் தான் கத்திரிக்காய், 'பார்ட்டி' ஆயிற்றே... ஆனால், நம் அலுவலக ஊழியர்கள் அனைவரும் சாப்பிட்டனர். தேனியின், காங்., -முன்னாள் எம்.பி., ஹாருன் பாய், மிகப்பெரிய எவர்சில்வர் கேரியரில், அலுவலகத்திற்கு பிரியாணி அனுப்பி வைத்திருந்தார்! அத்துடன், 'கேரியரையும், நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்...' என, கூறி விட்டார்!
* ப. காளிதாசன், நீர்விளாங்குளம், புதுக்கோட்டை: எந்தத் துறை எல்லாம் தனியார் மயமாவதை வரவேற்கிறீர்கள்?
அரசுக்கு, 'கமர்ஷியல்' வருமானம் வரும் துறைகள் எல்லாவற்றையும் கை கழுவி, அவற்றை, தனியாரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்!
முருகு. செல்வகுமார், சென்னை: தனி மெஜாரிட்டியுடன், தமிழகத்தில், பா.ஜ., ஆட்சி அமைக்கிற மாதிரி கனவு கண்டேனே... அந்துமணி என்ன சொல்கிறார்?
இதனால் தான், 'பகலில் துாங்காதீர்கள்...' என, அனுபவப்பட்ட பெரியவர்கள் கூறுகின்றனர்!
ஜி. கண்ணாத்தாள், திருச்சுழி: 'டிவி' தொடர்களை விடாது பார்த்து வருகிறேன். அதிலிருந்து மீள, ஒரு வழி சொல்லுங்களேன்...
அருகில் உள்ள நுாலகத்தில் உறுப்பினராக சேருங்கள்! நல்ல புத்தியைத் தரும் நுால்களை, 'டிவி' தொடர் பார்க்கும் நேரத்தில் எடுத்துப் படியுங்கள்; இந்த, 'டிவி' தொடர்களால் மனதில் தோன்றும் வன்மையான எண்ணங்கள் விட்டுப் போகும்!
* ம. வேல்முருகன், புதுச்சேரி: நடந்தே, சொந்த ஊர் திரும்பிய, புலம் பெயர்ந்த தொழிலாளர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்?
அவர்கள் இடத்தில், உங்களை நிறுத்திப் பாருங்கள், உங்கள் நிலை புரியும்; அவர்கள் மன நிலையும் தெரிய வரும்!
ஜே. அப்துல் கலாம் தமீஸ், கடலுார்: பத்து ஆண்டுகள் வெளிநாட்டில் வேலை பார்த்த நான், தற்போது, இந்தியாவில் தங்கி, வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்... சுய தொழில் செய்யலாமா?
தாராளமாக... ஆனால், அதை வெளிநாட்டிலேயே செய்யுங்களேன்! மக்கள் வயிற்றை நிரப்பும் தொழிலை தேர்ந்தெடுங்கள் வெற்றி நிச்சயம்!
* ரா.சா. சந்திரசேகர், சென்னை: 'தியாகத் தலைவி சசிகலா' எனக் கூறுகின்றனரே... அப்படி என்ன தியாகம் செய்தார்?
மதுரையில், சினிமா திருட்டு வீடியோ கடை வைத்திருந்தவர், சசிகலா! ஜெ.,யுடன் சேர்ந்து, அவருக்கு ஊழல் சொல்லிக் கொடுத்து, இன்று, அதன் மூலம் சம்பாதித்த, 913 கோடி ரூபாயை, ஜெ.,யின் அண்ணன் மகள் தீபா, மகன் தீபக்கிடம் ஐகோர்ட் மூலம் இழந்து நிற்கிறாரே... இவர், தியாகத் தலைவி தானே!
கே. மீனாட்சி, மதுரை: ரஜினி, கமல் - இருவரில் அரசியல் தெளிவு, ஞானம் யாருக்கு அதிகம்?
யாருக்கு அதிகமோ, குறைவோ... ஆனால், ரஜினிக்கு வாய்ப்புகள் அதிகம்!

