
* ஓ.எ.கே.ஆர்.சரவணன், சென்னை: 'அரசு ஊழியர்கள், முறைகேடாக சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும்...' என, நீதிபதிகள், கருத்து தெரிவித்ததைப் பற்றி...
உண்மை தான்... அதைத் தான் செய்ய வேண்டும்! அப்படி செய்தால், நிதி உதவி கேட்டு, மத்திய அரசிடம் தொங்காது மாநிலங்கள்!
எம். கார்த்திகா, கடலுார்: தமிழகத்தில், ஹிந்தி மொழிக்கு எதிர்ப்பு அதிகரித்து வருகிறதே...
ஹிந்தியை எதிர்த்து போராடுபவர்களுக்கே, 'தமிழ்' என்று சொல்லத் தெரியாதே... அவர்கள், 'தமிள்' என்று தான் உச்சரிக்கின்றனர். இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழி, நகரங்களில், ஆங்கிலம்; மற்ற மாநிலங்களில், ஹிந்தி!
பா. ஜெயப்பிரகாஷ், கோவை: 'தி.மு.க., - திருமாவளவன் போன்ற தீய சக்திகளை, இஸ்லாமியர்கள் மற்றும் மற்ற மத மக்கள் புறக்கணிக்க வேண்டும்...' என்று, 'ஏகத்துவ ஜமாத்' நிறுவனர், இப்ராஹிம் கூறியுள்ளது சரியா?
சரியே! எல்லா மதத்தினரும் இணக்கமாக செல்ல வேண்டும் என்ற நல்லெண்ணத்திலேயே சொல்லியுள்ளார். அவர் கூறிய மேற்கண்டவர்கள் தான், மத வேற்றுமையைத் துாண்டுகின்றனர், ஓட்டுக்காக!
ஆ. மாடக்கண்ணு, தென்காசி: கடந்த ஒன்பது மாதங்களாக உங்கள் பதிலுக்காக, வாரம் தோறும் கேள்வி அனுப்பி வருகிறேன். ஆனால், இதுவரை ஒரு பதிலும் இல்லையே ஏன்?
உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கும் திறமை, என்னிடம் இல்லையோ என, நினைக்கிறேன்! இதோ, இன்று உங்கள் கேள்வி வெளியாகி விட்டதே; சந்தோஷம் தானே!
என். கணேசன், நெய்வேலி: இந்திய பெண் ஒருவர், அமெரிக்காவில் துணை ஜனாதிபதி ஆகி விட்டாரே... நானும் அமெரிக்க பிரஜை ஆகி விட்டால், என்னாலும் முடியுமா?
முடியாது! அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தான் இந்த வாய்ப்பு கிடைக்கும்!
* சி. அக்கினி, மதுரை: வி.ஆர்.எஸ்., திட்டத்தின் கீழ், தொலைபேசி ஊழியர்களை, வீட்டிற்கு அனுப்பியது பற்றி...
சந்தோஷமாக இருக்கின்றனர்; சில, பல லட்சம் அவர்களுக்கு கிடைத்திருக்கிறது... அத்துடன், ஓய்வூதியமும் ஆயிரங்களில் கிடைக்கிறது. சந்தோஷமாக இருக்கின்றனர். சொன்னவர், 'ரிட்டயர்' ஆன நண்பர் ஒருவர்!
தொலைத் தொடர்பு துறையை தனியார் மயமாக்கும் இந்த முயற்சிக்கு, மத்திய அரசை பாராட்டுவோம்!

