PUBLISHED ON : மே 02, 2021

ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்: கோடை வெயில் வாட்டி வதைக்கிறதே... அலுவலகத்தில் உங்களுக்கு, 'ஏசி'யா, 'பேன்'தானா?
எங்களுக்கு, முழு, 'ஏசி' - அலுவலகம் முழுவதும் அதுதானே... கோடையை சமாளித்துக் கொள்கிறேன்!
* கா. நாகராஜ், பொள்ளாச்சி: 'தியாகத் தலைவி' என்றால் என்ன அர்த்தம்?
கோடிக்கணக்கில் லஞ்சம் வாங்கி, அரசு சொத்துக்களை கொள்ளையடித்து, ஜெயிலுக்கு போய் வந்தவர்கள் தான், தியாகத் தலைவி - சில கட்சிகளுக்கு!
ஆ. பெரியசாமி, துாத்துக்குடி: அரசியல்வாதிகள், பொது மக்களுக்கு எப்போது மரியாதை தருகின்றனர்?
சந்தேகம் இல்லாமல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அல்லது ஒரு எம்.எல்.ஏ., இறந்து, இடைத்தேர்தல் வந்தால் மீண்டும் மரியாதை... அவ்வளவே!
சி.பி. ராஜு, சென்னை: ராசி பலன் பார்ப்பவர்கள், இன்னும் இருக்கின்றனரா என்ன?
ஏப்ரல் 14ல், நம் இதழுடன் வழங்கிய, 'பிலவ வருஷ வாக்கிய பஞ்சாங்கம்' ஒரு லட்சம் பிரதி அதிகமாக விற்பனையாகி உள்ளதே!
(நான் அதைப் படிக்கவில்லை!)
சி. சிவக்குமார், சென்னை: 'கொரோனா' தடுப்பூசி போட்டுக் கொள்வது பாதுகாப்பானதா, ஆபத்தானதா?
எனது ஆயுர்வேதிக் மருத்துவர், 'அது தான் உனக்கு, 'இந்து காந்த கஷாயம்' கொடுத்திருக்கிறேனே... அதுவே போதும்...' என்கிறார்!
சி. ரகுபதி, போளூர்: புதிய, புதிய மாடல்களில் ஏகப்பட்ட கார்கள் வந்து விட்டனவே... நமது, 'அம்பாசிடர்' கார்களின் நிலை இப்போது எப்படி இருக்கிறது?
அவர்கள் தான் எப்போதோ உற்பத்தியை நிறுத்தி விட்டனரே... ஒரு சில அரசு அலுவலகங்களில் வேறு, 'எஞ்சினுடன்' ஓடிக் கொண்டிருக்கின்றன!
ஆர். மனோகரன், நெல்லை: எனக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் உள்ளன... இவற்றை எப்படி மறப்பது?
அவைகள் மறக்கப்பட வேண்டியவைகள் அல்ல; தீர்க்கப்பட வேண்டும்! அதற்காக பாடுபடுங்கள் அல்லது அவற்றை தாங்கிக் கொள்ளும் மனப் பக்குவத்தைப் பெற பாடுபடுங்கள்!
* மூ. மோகன், வேலுார்: 'டிவி' தொடர்களை, குடும்பத்தோடு பார்க்க முடியவில்லையே... ஏன்?
அதைப் பார்ப்பது உங்கள் தவறு. அவற்றை தவிர்த்து, நல்ல புத்தகங்களை படிப்பதில் அந்த நேரத்தை செலவிடுங்களேன்!
