PUBLISHED ON : டிச 19, 2021

* கு. அருணாச்சலம், தென்காசி: 'டாஸ்மாக்' கடை நேர மாற்றம்; இரவு, 10:00 மணி வரை என்பது பற்றி...
தமிழக குடும்பத் தலைவியரின் நலன் பற்றி யோசித்த தமிழக அரசு, காலை, 10:00 மணிக்கே திறக்காமல் செய்திருக்கிறது. குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய கணவன்மார், காலையில், 'டாஸ்மாக்' பக்கம் செல்லாமல் வேலைக்கு சென்று விடுவரே!
* எஸ்.கே. சவுந்தரராஜன், திண்டுக்கல்: அரசு, இவ்வளவு முயற்சி எடுத்தும், 'பாலிதீனை' ஒழிக்க முடியவில்லையே...
அவற்றை, தமிழகத்தில் தயாரிக்கும் தொழிற்சாலைகளை மூட வேண்டும்; மற்ற மாநிலங்களிலிருந்து வரும், 'பாலிதீனை' பறிமுதல் செய்ய வேண்டும்!
ம. செல்லம்பிள்ளை, தேனி: உங்களுக்கு எத்தனை மொழி தெரியும்? பிடித்த மொழி எது?
இதோ உங்களுக்கு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறேனே, அந்த மொழி தான்... மற்ற மொழிகளை படித்துக் காட்ட உதவி ஆசிரியர்கள் இருக்கின்றனரே!
ந. தனசேகரன், துாத்துக்குடி: பல மாதங்களுக்கு முன், மதுரையில் ஒரு திருமணத்தில் நாம் சந்தித்தபோது, என்னிடம் நீங்கள் கடனாக வாங்கிய பணத்தை எப்போது தருவதாக உத்தேசம்... என்னை ஞாபகம் இருக்கா?
தனசேகரன்... நீங்கள் விரைவில், நிச்சயமாக, துப்பறியும் நாவல்கள் எழுத ஆரம்பித்து விடுவீர்கள்!
* ஆர். பிரசன்னா, திருச்சி: கோடிக்கணக்கில் செலவு செய்து உருவாக்கப்படும், 'டிவி' விளம்பரங்கள் வரும்போது, 'சட்' என, சேனலை மாற்றி விடுகிறோம்; பிறகு விளம்பரதாரர்களுக்கு என்ன லாபம்?
அவர்களுக்கு லாபம் இல்லை; 'டிவி' அதிபர்களுக்கு தான் லாபம்!
அ. கணேசன், நெல்லை: ஹெலிகாப்டரில் இறந்த, முப்படைத் தளபதி பெயரையும், மத்திய மந்திரிகள் பெயரையும் உச்சரிக்க கஷ்டமாக உள்ளதே...
பெயர்களை உச்சரிப்பதே கஷ்டமாக இருக்கிறது என்று கூறுகிறீர்கள்... ஹிந்தி தெரியாத நமது, எம்.பி.,கள் பார்லிமென்டில் எவ்வளவு கஷ்டப்படுவர்... மூன்றாம் மொழி வேண்டாம் என்பதன் பலன் இது!
ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம், தென்காசி: 'வாட்ஸ் ஆப்'பில், 'குட்மார்னிங், குட் - நைட்' எது அதிகம் வரும்?
'குட்மார்னிங்' தான், விடிகாலை, 4:30 மணியிலிருந்தே வர ஆரம்பித்து விடும்... 'குட் - நைட்' ஓரிருவரிடமிருந்து தான் வரும். என் மொபைல் எண் தெரியாதவரிடமிருந்து, 'இ - மெயிலில்' காலை வணக்கம் வரும்!'
