PUBLISHED ON : ஜூன் 26, 2022

* சி. கார்த்திகேயன், சாத்துார்: தமிழக அரசு ஏல விபரங்கள், ஊழல் விவகாரங்கள், தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு எப்படி கிடைக்கிறது?
சமீபத்தில், 51 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடம் மாற்றியுள்ளதே அரசு... அவர்கள் போன்றவர்களிடம் இருந்து தான் கிடைக்கிறது! இன்னும் எவ்வளவு இட மாற்றங்கள் நிகழ்ந்தாலும், அண்ணாமலைக்கு தகவல்கள் கிடைத்துக் கொண்டே தான் இருக்கும்!
ம. வசந்தி, திண்டிவனம்: 'பா.ம.க., தான் உண்மையான எதிர்கட்சியாக செயல்படுகிறது...' என, அக்கட்சி தலைவர் அன்புமணி கூறியுள்ளது பற்றி...
ஆட்சியில் நடக்கும் ஊழல் பற்றி, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை வெளிப்படுத்தியது போல், இதுவரை ஏதாவது செய்து இருக்கிறாரா? தலைவரானதும், ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெறுவதிலேயே குறியாக இருந்துள்ளார்... இவர், தி.மு.க., கூட்டணியில் சேர்ந்து விடுவார்; எதிர்க்கட்சி அல்ல!
எஸ். சுப்பிரமணியன், நெல்லை: அந்துமணி அவர்களே... எனக்கு வாழ்வில் இன்னல்கள் அதிகம் உள்ளதே... என்ன செய்ய?
உங்களுக்கு தேவையானது, பொறுமையும், நேர்மையும் மட்டுமே. இவை இருந்தால், இன்னல்களில் இருந்து தப்பலாம்!
ஜி. அர்ஜுனன், திருப்பூர்: 'விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என்றால், 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும்...' என்று, நாம் தமிழர் என்ற கட்சியின் தலைவர் சீமான், அறிக்கை விட்டு இருக்கிறாரே?
அத்திட்டத்தில் வேலை செய்பவர்கள் மரத்தடியில் துாங்கிக் கொண்டு தான் இருக்கின்றனர் என்பதை, ஏற்கனவே கூறி இருக்கிறேன். சீமான் அறிக்கையில் உருப்படியானது, இது ஒன்று மட்டும் தான்!
* எம். பார்த்தசாரதி, திருச்சி: ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க, எதிர்கட்சிகள் ஒன்று கூடியுள்ளதே... பயன் உண்டா?
இல்லை! விளம்பரத்திற்காக, ஒன்று சேர்வது போல் நடிக்கின்றன... பா.ஜ., கை காட்டுபவர் தான், ஜனாதிபதி ஆக முடியும்!
கே.எஸ். சவுந்தரராஜன், சென்னை: தன்னை திரையில் ரசிப்பவன், தனக்கு வாக்காளனாக மாற மாட்டான் என்பதை, கமலஹாசன் உணர வில்லையே...
எத்தனையோ நடிகர்கள் இதை உணராமல் தான் கட்சி ஆரம்பித்தனர்... அவர்களது கட்சிகள் எல்லாம் காணாமல் போய் விட்டன. இதை உணர்ந்து கொண்ட பின் தான், ரஜினி பின் வாங்கினார்... இது தெரியவில்லையே கமலுக்கு!
மு. நடராஜன், திருப்பூர்: தேர்தல் அறிக்கையில் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறாரே...
இந்த, 'ஸ்டேட்மென்ட்டை' நம்புகிறீர்களா... இல்லை தானே! இவர்கள் ஆட்சியில் இருக்கும் வரை, அவற்றை எல்லாம் நிறைவேற்ற முடியாது... காரணம், கஜானா காலி!
