PUBLISHED ON : செப் 24, 2023

* க. விநாயகம், கடலுார்: நாகரிகம், பண்பாடு என்ன வித்தியாசம்?
பழங்களிலே, வெளி அழகு, ஆப்பிள்; உள் அழகு, பலா. காய்களில், வெளி அழகு, மாங்காய்; உள் அழகு, தேங்காய். பறவைகளில், வெளி அழகு, மயில்; உள் அழகு, குயில். மனிதர்களிடம், வெளி அழகு, நாகரிகம்; உள் அழகு பண்பாடு. இது தான் வித்தியாசம்!
க. சிந்து, மலேஷியா: ஜாதி ஆதிக்கம், திராவிட மாடல், சனாதனம் என்று, வேண்டாத வெறுப்பை பரப்புவதிலே கவனமாக உள்ளனரே, உங்கள் ஊர் அரசியல்வாதிகள். எப்போது, ஆக்கப்பூர்வமாக செயல்பட ஆரம்பிப்பர்?
திராவிட மாடல் இல்லாத ஆட்சியைக் கொண்டு வர, மக்கள் முயல வேண்டும். அப்போது, மக்களும் பயன் பெறுவர்; திராவிட மாடல் ஆட்சி நடத்தியோரும் திருந்துவர்!
மு. அன்பு, சிதம்பரம்: வாழ்வில் நான் மேன்மையடைய விரும்புகிறேன். என்ன செய்ய வேண்டும். என் வயது: 24.
அன்பு... வாழ்வில் மேன்மை அடைய, தாய், தந்தையின் சொல் கேட்டு நடந்து கொள்ள வேண்டும்; அவர்களை கடைசி வரையிலும் காப்பாற்ற வேண்டும். மேன்மை அடைந்து விடலாம்!
க. சிவா, புதுச்சேரி: மனதில் தீமை கலந்து விடுகிறது எனக்கு. இது, எதனால்... இதைப் போக்குவது எப்படி?
உங்கள் பேச்சை, நீங்கள் உற்று நோக்குங்கள்; பேச்சில் தீமை கலந்து பேசாதீர்கள். அப்படி பேசினால், மனதிலும் தீமை கலந்து விடும்!
பா. கருப்பசாமி, சென்னை: ஒருவனின் செயலுக்கு விளைவு நிச்சயம் என்கின்றனரே...
உண்மை தான்... நல்லது செய்தால், நல்லது நடக்கும்; கெட்டது செய்தால், கெட்டது நடக்கும். குற்றம் செய்தவர்கள், சட்டத்திலிருந்து தப்பி விடலாம். ஆனால், இயற்கையின் பிடியிலிருந்து தப்பிக்கவே முடியாது!
க. லதிகா, ராமேஸ்வரம்: திருமண வரவேற்பு அழைப்பிதழ்களில், மாலை, 6:30 மணி முதல் என்று, நேரம் குறிப்பிட்டு விட்டு, சாவதானமாக, 8:00 மணிக்கு வருகின்றனரே, மணமக்கள்... அடுத்தவர்களின் நேரத்தை வீணடிக்கலாமா?
உங்களின் நேரத்தை காக்க முனைந்தால், நீங்களும் அறிவாளியாக மாறுங்கள். வரவேற்பு நிகழ்ச்சிக்கு, 6:30க்கு செல்லாமல், 8:00 மணிக்கு செல்லுங்களேன்!
* எம். சாமி, ராமநாதபுரம்: வாழ்க்கையில் எது நல்லது, எது கெட்டது?
அடுத்தவருக்கு நல்லது செய்ததை வெளியே சொல்லக் கூடாது. அடுத்தவர் நமக்கு செய்த உதவியை, அனைவரிடமும் சொல்வது நல்லது!
