PUBLISHED ON : அக் 15, 2023

* பி. மோகன்ராஜு, சென்னை: அரபு நாடுகளின் சட்டங்களை, நம் நாடும் பின்பற்றினால், லஞ்சம் ஒழிந்து விடுமா?
கண்டிப்பாக... லஞ்ச ஒழிப்பு துறையையே கலைத்து விடலாம். ஆனால், அந்த சட்டங்கள் நம் நாட்டில் கொண்டு வரப்படுமா என்பது சந்தேகமே!
இ. கஸ்துாரி, பொட்டல்புதுார்: இந்த ஆண்டு, டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், பெண்களின் பங்களிப்பு எப்படி?
இந்த ஆண்டு வந்த, மொத்த போட்டி சிறுகதைகள், 1,358. இதில் ஆண்கள் எழுதியது, 814; பெண்கள் எழுதியது, 544. ஆண்களுக்கு இணையாக, பெண்களும் எழுத ஆரம்பித்து விட்டனர்.
கே. கல்யாணம், சென்னை: சந்தர்ப்பவாத அரசியல், ராஜதந்திரம்... இரண்டிற்கும் என்ன வித்தியாசம்?
தி.மு.க.,வின் செயல்பாட்டை கவனித்துப் பாருங்கள். இரண்டுக்குமே வித்தியாசம் இல்லை என்பதை புரிந்து கொள்வீர்கள்!
க. விஜயகுமார், மதுரை: ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியமா?
அவசியம் தான். ஆனால், பொருளாதார அடிப்படையில் நிகழ்ந்தால், இன்னும் பயனுள்ளதாகும்!
க. சித்தார்த், சென்னை: மது கடைகளை மூடச்சொல்லி போராடுவதற்கு பதில், மது அருந்துபவர்களின் வீட்டில் உள்ளவர்கள், அவர்களை ஏன் அப்பழக்கத்திலிருந்து மீட்க, முயற்சிக்கக் கூடாது?
ஏன் முயற்சிக்காமல், அவர்கள் முயன்று கொண்டு தான் உள்ளனர். ஆனால், உ.பா., பிரியர்கள், தம் உடல் நலத்திற்கு கேடு வந்தால் மட்டுமே அதை நிறுத்துவர்!
வி. நாகராஜன், துபாய்: எதிர்க்கட்சி என்றால், ஆளும் அரசு கொண்டு வரும், நல்ல திட்டங்களுக்குக் கூட, எதிர்ப்பு தெரிவிக்க வேண்டுமா என்ன?
தங்கள் கட்சி உயிரோடு இருப்பதை, பொது மக்களுக்கு தெரியப்படுத்தி ஆகணுமே... அதனால் தான், இந்த எதிர்ப்புக் குரல்!
* கே. அருண், மதுரை: வாழ்வில் வெற்றி பெற நினைக்கிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
எதைச் செய்தாலும், ஈடுபாட்டோடு செய்ய வேண்டும்; அதை முழு மனதோடு செய்ய வேண்டும்; உற்சாகத்துடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம்!
