தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்

அந்துமணி பதில்கள்


PUBLISHED ON : மார் 04, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மார் 04, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

** கே.சுந்தர், உத்திரமேரூர்: எப்படிப்பட்டவர்களை நம்பக் கூடாது?

நீங்க நல்லா இருந்தா அதுவே போதும் என்கிறார்களே... அவர்களை நம்பவே கூடாது! 'உங்களால் சில நன்மைகள் கிடைக்கும் என்பதால் தான், உங்களோடு பழகிக் கொண்டிருக்கிறேன்...' என நேரடியாக சொல்கிறார்களே அவர்களை முழுமையாக நம்பலாம்!

***

*சு.குணசேகரன், திண்டுக்கல்: மனிதனுக்கும், குரங்குக்கும் என்ன வித்தியாசம்?

வித்தியாசம் ஒன்றே ஒன்றுதான்; அதன் வால் வெளியே தெரியுது... இவனுக்கு உள்ளே இருக்கு! ஆனால், ஒற்றுமைகள் அதிகம், அதில் ஒன்று, பிடுங்கித் தின்னுவது!

***

*எம்.ஆனந்தன், பழைய பல்லாவரம்: விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை அதிகம் இருக்க வேண்டியது மாமியாரிடமா, மருமகளிடமா?

முதலாமவரிடம் தான்! மருமகளுக்கு என்ன அனுபவம் இருக்கப் போகிறது. ஒரு தாயின் அன்புடனும், பரிவுடனும், மருமகளை ஆரம்பம் முதலே நடத்த ஆரம்பித்தால், தன்னாலே வந்து விடாதோ, விட்டுக் கொடுக்கும் குணம் மருமகளிடம்.

***

*எஸ்.மகேஸ்வரன், திருமங்கலம்: அரசியல், சினிமா... எந்த துறையில், அதிக பணம் ஈட்ட முடியும்?

இரண்டிலுமே கோடிகளைக் காணலாம். முன்னதற்கு உழைப்பு தேவையில்லை; சினிமாவில் உடல் உழைப்பும் வேண்டும். பெண் ஆனால், அதை வெளிச்சம் போட்டு வெளியே காட்டவும் வேண்டியது இருக்கும்.

***

*என்.ராமர்பிள்ளை, பண்ருட்டி: உண்மையான நண்பர்களை எப்படி அடையாளம் கண்டு கொள்வது? என் நண்பர்கள் வட்டம் பெரிது; கூட இருந்தே குழிப் பறிக்கின்றனர்...

பெரிய சிக்கல் ஒன்று வந்திருப்பதாக கற்பனையாகக் கூறி, 'உன் உதவி இருந்தால் தான் இதிலிருந்து வெளியேற முடியும்...' எனக் கேளுங்கள்... ரியாக்ஷனைப் பாருங்கள், நீங்களே... தீர்மானத்திற்கு வந்து விடுவீர்கள்.

***

* ஆ.துளசிதாஸ், பெரிய நாயக்கன்பாளையம்: இந்தியாவில் எந்த மாநில ஆட்சியை, நல்லாட்சி என்பதற்கு உதாரணமாக கூறலாம்?

ஒன்றைக் கூட கூற முடியாது. தங்கள் பதவியை காத்துக் கொள்வதிலேயே, கவனத்தை செலவழித்துக் கொண்டுள்ளனர் ஆட்சியாளர்கள். வாங்கும் சம்பளத்தில், குடும்பத்தை நடத்திச் செல்ல இயலாத அளவில், விலைவாசி ஏறிக் கொண்டே போகிறது. ஏமாளிகளாக, 'வாழ்க, ஒழிக...' என, கோஷம் போட்டுக் கொண்டிருக்கிறோம் நாம்!

***

*ஜி.சந்தியா, திருநகர்: பிறமொழி கலப்பில்லாமல், தமிழில் பேச முடியுமா?

ரொம்ப சிரமம்! பிறரது நகைப்பை பொருட்படுத்தாதவராக இருந்தால், அறிவியல், மருத்துவம், பொறியியல், விவசாயம் போன்றவை தவிர்த்த விஷயங்களில் பேச முயலலாம்.

***

** ஆர்.மணி, கொளத்தூர்: சம்பாதிக்கும் பெண்கள், ஆண்களை, கணவனை மதிக்க மாட்டார்கள் என்ற குற்றச்சாட்டு பற்றி...

சுய சம்பாத்தியம், தன்னம்பிக்கையை அளிக்கிறது பெண்களுக்கு! இவர்கள் சாதாரணமாக ஒரு நியாயத்தை கேட்டாலே கணவன்மார்களுக்கும், ஆண்களுக்கும், 'ஈகோ' பஞ்சராகி விடுகிறது. 'ஆங்... இவள் கேள்வி கேட்டு விட்டாளே...' என ஆத்திரம் கொள்கின்றனர். சம்பாதிப்பதால் வந்த திமிர் என, 'ஸ்டேட்மென்ட்' விட்டு விடுகின்றனர். இதுதான் நடைமுறையே தவிர, 'சம்பாதிக்கும் பெண்களுக்கு திமிர் வந்து விடும்!' என்பது அபத்தம்.

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us