தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : பிப் 03, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 03, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தவறு செய்யும் அதிகாரிகள் தண்டிக்கப்படுவது வெள்ளைக்காரர் காலத்திலேயே நடந்துள்ளது. குப்பண்ணா ஒரு புத்தகத்தை ஓசைப்படாமல் என்னிடம் நீட்டி, 'அம்பி... இதப் படிச்சுப் பாருடா!' என்றார்.

அந்த ஞாயிற்றுக்கிழமை, ஒருவர் கண்ணிலும் படாமல், எக்மோர் மியூசியம் சென்று, வாகாக ஒரு மரத்தடி நிழலில் அமர்ந்து புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

ஜே.ராஜா முகம்மது என்பவர் எழுதிய, 'புதுக்கோட்டை மாவட்ட வரலாறு' என்ற நூல் அது.

அதில் —

கப்பத் தொகை, 16 ஆயிரத்து 550, மே 31, 1798 வரை பாக்கி இருப்பதாகவும், அத்தொகையை உடனடியாக கட்டும்படியும் கட்டபொம்மனுக்கு மதுரை கலெக்டராக இருந்த ஜாக்சன், எச்சரிக்கை கடிதம் அனுப்பி வைத்தார்.

ஆனால், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பாக்கியை செலுத்தவில்லை கட்டபொம்மன். இதனால், பாஞ்சாலக்குறிச்சியின் மீது படையெடுக்க விரும்பினார் ஜாக்சன். அப்போது, ஆங்கிலேயே படை, திப்பு சுல்தானுடன் போரில் ஈடுபட்டிருந்ததால், இதற்கு உடன்படவில்லை. மாறாக, கட்டபொம்மனை, ராமநாதபுரத்துக்கு அழைத்துப் பேசுமாறு பணித்தது.

இதன்படி, தன்னை ராமநாதபுரத்தில் ஆக., 18, 1798ல் சந்திக்கும்படி கட்டபொம்மனுக்கு கடிதம் எழுதினார் ஜாக்சன். இந்த கட்டளையை அனுப்பிவிட்டு, திருநெல்வேலி பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள, ராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டார் ஜாக்சன்.

அப்போதே ஜாக்சனை சந்திக்க, கட்டபொம்மன் தன் பரிவாரங்களுடன் சென்றார். குற்றாலத்தை ஜாக்சன் அடைந்த போது, கட்டப்பொம்மனும், அவரது பரிவாரங்களும், ஜாக்சனுக்காக காத்திருந்தனர். கட்டபொம்மனை அங்கு சந்திக்க மறுத்து விட்டார் ஜாக்சன்.

பின், சொக்கம்பட்டி, சிவகிரி, ஸ்ரீவில்லிபுத்தூர் போன்ற இடங்களிலும் சந்திக்க முயன்று, தோற்று, பயணம் தொடங்கி, 23 நாள் கழித்து, 640 கி.மீ., அலைந்து, செப்.,19, 1798ல் ராமநாதபுரத்தில், ஜாக்சனை சந்தித்தார் கட்டப்பொம்மன்.

கிஸ்தி கணக்கை சரி பார்த்தபோது, 5,000 (1080 பகோடா) ரூபாய் மட்டுமே பாக்கி இருப்பதை கண்டு கொண்டார் ஜாக்சன். ஆகவே, மே 31, 1798க்கும் செப்., 31, 1798க்கும் இடைபட்ட மூன்று மாத காலத்தில் கட்டப்பொம்மன், 11 ஆயிரம் ரூபாய் கிஸ்தி பண பாக்கியை கட்டிவிட்டதாக அறிகிறோம்.

அகந்தை கொண்ட ஜாக்சன், மேற்படி சந்திப்பின் போது, கட்டப்பொம்மனையும், அவரது அமைச்சர்களையும் மூன்று மணி நேரம் நிற்க வைத்தே விசாரணை செய்தார். சந்திப்பின் இறுதியில், ராமநாதபுரம் கோட்டையிலேயே அவர்கள் தங்கியிருக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கைகலப்பில், கட்டப்பொம்மன் தப்பிக்கும் முயற்சியில், லெப்டினன்ட் கிளார்க் என்பவர் கொல்லப் பட்டார். கட்டப்பொம்மனின் அமைச்சர் சிவசுப்ரமணிய பிள்ளை கைது செய்யப்பட்டார். கட்டப்பொம்மன் தப்பித்துக் கொண்டார்.

இந்த நிகழ்ச்சிக்குப் பின், கட்டப்பொம்மன், சென்னை கவர்னருக்கு, மேல் முறையீட்டுக் கடிதம் ஒன்று அனுப்பினார்...

இதைப் படித்துக் கொண்டிருக்கும் போது, 'செத்' என்ற சப்தத்துடன் காகத்தின் எச்சம் அருகே விழுந்து, கவனத்தை திசை திருப்பியது.

கையோடு வாங்கிச் சென்றிருந்த, 'டெட்ரா பேக்' ஜூசை திறந்து, இரண்டு மடக்கு குடித்தேன். அப்போது, சற்றுத் தொலைவில் இருந்த மரத்தடியில் ஒரு காதல் ஜோடி அமர்ந்து, முகத்துக்கு முகம் நெருங்கிப் பார்த்து, வாயைத் திறந்து மீன் மூடுவது போல உதடுகளை துருத்தி, 'உம்மா' கொடுப்பது போல் பேசிக் கொண்டிருந்தனர்.

'இது என்னடா தலைவலி' என்று நினைத்தபடி, புத்தகத்தில் மீண்டும் கண்ணை பதித்தேன்.

கவர்னருக்கு அனுப்பிய கடிதத்தில், தான் கலெக்டரின் கட்டளைக்கு மதிப்பளித்து அவரைச் சந்திக்க, பாக்கி இருந்த முழு கிஸ்தி பணத்தையும், ராமநாதபுரத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அங்கு ஏற்பட்ட கைகலப்பிற்கு, ஜாக்சனின் நடவடிக்கைகளே காரணம் எனவும் குறிப்பிட்டிருந்தார். (கட்டபொம்மன் படத்தில் சிவாஜி பேசும் வசனங்கள் எல்லாம், 'டுபாக்கூர்'தானா?)

கடிதத்தை கண்ட கவர்னர் கிளைவ், தற்காலிகமாக ஜாக்சனை பதவி நீக்கம் செய்தும், சிவசுப்ரமணியப் பிள்ளையை விடுதலை செய்தும் ஆணை பிறப்பித்தார். அத்துடன், ராமநாதபுரம் நிகழ்ச்சிகளை குறித்து விசாரிக்க, வில்லியம் பிரவுன், வில்லியம் ஆரம், ஜான் காசா மேஜர் ஆகியோர் அடங்கிய ஒரு குழுவையும் நியமித்தார்.

இக்குழுவின் விசாரணையில் (டிச.,15,1798) ராமநாதபுரத்தில், கட்டபொம்மனை, ஜாக்சன் நடத்திய விதம் ஏளனத்திற்குரியது என்று தெரிய வந்தது. விசாரணைக் குழுவின் முடிவு ஏற்கப்பட்டு, பதவியில் இருந்து ஜாக்சன் நீக்கப்பட்டார். அவரது இடத்தில் லூசிங்டன் என்பவர் கலெக்டராக நியமிக்கப்பட்டார்.

— இப்படி குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிகழ்வுகளுடன் இதையும் ஒப்பிட்டுப் பார்த்தபடி எழுந்தேன்... தூரத்தில் இருந்த காதல் ஜோடியை அருங்காட்சியக காவலர் ஒருவர், விரட்டிக் கொண்டிருந்தார்!

***

நம் இந்திய மக்களில் பெரும்பாலானவர்களுக்கு கல்வி அறிவு இல்லை; அவர்களை கல்வி அறிவு பெற்றவர்களாக்க, நம் அரசு பெரும் முயற்சி எடுத்து வருவது நாம் அறிந்ததே!

முதியோர் கல்வி, கரும்பலகை என பல்வேறு திட்டங்களை அமல்படுத்தியுள்ளது அர”. இந்தியாவிலேயே, கேரள மாநிலம் தான் முழுமையான கல்வி அறிவு பெற்ற மாநிலம் என அறிவிக்கப்பட்டு உள்ளது; தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் முழுமையான கல்வி அறிவு பெற்றவர்கள்.

நம் நாட்டு கதை இப்படி இருக்க, முன்னேறிய நாடுகளின் வரிசையில் நிற்கும் கனடா நாட்டின் கதையைக் கேளுங்கள்... கனடா நாட்டு அரசில், 'வேர்ல்ட் லிட்டரசி ஆப் கனடா' என்ற அமைப்பில் பணியாற்றும், அந்த தமிழ் அன்பர் ஒருவரை சமீபத்தில் சந்தித்த போது, அவர் கூறக் கேட்ட சமாச்சாரம் இது:

கனடா நாட்டு மக்களில், 50 லட்சம் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது! (கனடாவின் மொத்த மக்கள் தொகை, இரண்டு கோடி 70 லட்சம். இவர்களில் படிக்கத் தெரியாதவர்களின் சதவீதம் 19.)

கல்வி அறிவு இல்லாத கனடாக்காரர்களில், 15 லட்சம் பேருக்கு, தம் கார் டிரைவிங் லைசன்ஸ் எப்போது காலாவதியாகிறது என்பதை, லைசன்ஸ் புத்தகத்தைப் பார்த்து அறிந்து கொள்ளும் திறமை கிடையாது!

இவர்களில் 26 லட்சம் பேருக்கு, மருந்து, மாத்திரை பாட்டில்களில், அவற்றை எவ்வாறு உட்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளும் திறன் கிடையாது!

சாலையில் உள்ள வழிகாட்டும் சின்னங்களில் எழுதப்பட்ட எழுத்துக்களைப் படித்து அறியும் திறன், 28 லட்சம் பேரிடம் இல்லை!

இன்னும் சில லட்சம் பேரிடம் டெலிபோன் பில்லைப் பார்த்து, அதில் பண பாக்கி எவ்வளவு என்பதை அறிந்து கொள்ளும் திறன் கிடையாது. இதேபோல, இன்கம்டாக்ஸ் பாக்கி அறிதல், டெலிபோன் டைரக்டரியில், 'எல்லோ பேஜ்' பார்த்து, முகவரி அறிதல் போன்றவை தெரியாது, என்றார்.

(என்னடா இது... எழுதப் படிக்க தெரியாதவர் எண்ணிக்கை, 50 லட்சம் தான் என்றார். இவர் சொல்லும் 26 லட்சம், 28 லட்சம் இன்னும் சில லட்சம் என லட்சக்கணக்கில் சொல்லிக்கொண்டே போகிறாரே... அப்படியானால், கனடா நாட்டு மக்கள் எவருக்கும் கல்வி அறிவு இல்லையா அல்லது அந்துமணி, 'டுபாக்கூர்' அடிக்கிறாரா என நினைக்கிறீர்கள் தானே! சிறு விளக்கம்: எழுத்து அறிவு இல்லாத, 50 லட்சம் பேரில், இந்த இந்தத் தொகுதிகளில், அதாவது, சாலை விதி அறிவிப்புப் பலகை படிக்கத் தெரியாதவர், மருந்து பாட்டிலில் எழுதியுள்ளதைப் படிக்கத் தெரியாதவர்... என இவை கணக்கிடப்பட்டுள்ளது. ஆக, மொத்தம் படிப்பறிவில்லாதவர் எண்ணிக்கை, 50 லட்சம் தான்!)

தமிழ் அன்பர் தொடர்ந்தார்: இன்னொரு ஆச்சரியமான கணக்கெடுப்பு பாருங்கள் அந்துமணி... கனடாவில் குடியேறிய இங்கிலாந்து நாட்டு மக்களை விட, கனடாவில் வசிக்கும் தெற்கு ஆசிய மக்கள் கல்வியில் சிறந்தவர்களாகவும், முன்னேறியவர்களாகவும் உள்ளனர்.

தெற்கு ஆசிய மக்களில், இந்தியர்கள் சிறப்பான இடத்தை வகிக்கின்றனர். கல்வி அறிவு அற்ற கனடா நாட்டு மக்களால், கனடா அரசுக்கும், வியாபாரிகளுக்கும் தினமும் பல லட்சம் பொருள் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது... கல்வி அறிவை இவர்களிடம் வளர்க்க பெரும் பொருட் செலவு செய்து வருகிறது கனடா அரசு, என முடித்தார்!

'கனடாவிலேயே இந்த நிலை தானே...' என, நம் சட்டைக் காலரைத் தூக்கி விட்டுக் கொள்ள வேண்டாம். கல்வி அறிவு அற்றவர்களால் கனடாவுக்கு பல கோடிக்கணக்கில் இழப்பு என்றால், வளர்ந்து வரும் நம் இழப்பு பல விதங்களிலும் எவ்வளவு என நினைத்துப் பாருங்கள்!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us