தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : ஆக 11, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 11, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'முதன் முதலில் ஜனக் கணக்கெடுப்பு நடந்தது வரி வசூலிப்பதற்காகத்தான். எவ்வளவு பேர் மொத்தம் இருக்கின்றனர்... யார், யார் வரி கொடுக்காமல் ஏமாற்றுகின்றனர் என்பதைக் கண்டுபிடிப்பதற்காக இங்கிலாந்தில் இந்த ஏற்பாடு வந்தது...' என்றார் குப்பண்ணா.

'அப்படியா...'

'ஆமாம்... 'சென்சரி' என்றால், ஆங்கிலத்தில் வரி என்று அர்த்தம். சென்சரிக்காக எடுக்கப்படும் கணக்கு, 'சென்சஸ்' என்றாகிறது!'

'உலகத்திலேயே அதிக ஜனத்தொகை உள்ள நாடு சைனா தானே?'

'சைனா என்பது வெள்ளைக்காரன் சொல்வது. ஆனால், சைனாக்காரனே சொல்லுவது, 'சீனா' என்று தான். பல வார்த்தைகள் இப்படித் தமிழில் நாம் உச்சரிப்பதுதான் அசல் உச்சரிப்பு. துருக்கியை வெள்ளைக்காரன், 'டர்க்கி' என்கிறான். ஆனால், துருக்கி மொழியிலேயே அதன் உச்சரிப்பைச் சொன்னால், 'துருக்கி' என்று தான் வரும்...'

'ரஷ்யாவைக் கூட சில பேர் ருஷ்யா என்று எழுதுகின்றனரே...' என்றேன்.

'ருஷ்யா என்பது தான் சரி. ரஷ்ய மொழிப்படியே அதுதான் சரியான உச்சரிப்பு!'

'டீ இருக்கிறதே, அதன் உச்சரிப்பு கூட, 'டெ' என்பது தான் சரியாம்...' என்றார் பெரியசாமி அண்ணாச்சி.

'அடெ...' என்றேன்.

***

'இந்தியாவில் எத்தனையோ வகை, 'இங்கு' கள் தயாரிக்கின்றனர். ஆனால், டிராயிங் போடுகிற இந்த கறுப்பு இங்கை மட்டும் ஏன், 'இண்டியன் இங்க்' என்கின்றனர்?' என, என்னிடம் விசாரித்தார், அலுவலகத்தில் பயிற்சியாளராய் சேர்ந்துள்ள ஓவியர் ஒருவர்...

'இந்தியன் இங்குக்கும், இந்தியாவுக்கும் உள்ள சம்பந்தம், மைசூர் போண்டாவுக்கும், மைசூருக்கும் உள்ள சம்பந்தம் மாதிரி தான். ஆரம்பத்தில் சைனா, ஜப்பான்காரர்கள் தயாரித்த இங்குக்குத் தான், 'இந்தியன் இங்க்' என்று பெயர் வைத்தனர்.

'அது மட்டுமல்ல... டயர், பென்சில் அழிக்கும் ரப்பர் இதற்கெல்லாம் கூட, இந்தியா ரப்பர் என்று தான் பெயர்...' என்றேன்.

'இந்திய முத்திரை போட்டால் நன்றாக வியாபாரமாகும், ராசியான பெயர் என்று அவர்கள் நினைத்திருக்கலாம்...' என்று, அருகே இருந்த லென்ஸ் மாமா பெருமைப்பட்டுக் கொண்டார்.

'இவை மட்டுமல்ல... என்சைக்குளோபீடியா ஆப் பிரிட்டானிகா போன்ற உயர்ந்த புத்தகங்களுக்குப் போட்டிருக்கிற பேப்பர் மெல்லியதாக, ஆனால், மிகவும் வலுவானதாக இருக்கும் - அதற்கு ஆக்ஸ்போர்டு இந்தியா பேப்பர் என்று தான் பெயர். மை அடைசல் இல்லாமல் சுத்தமாக அச்சை ஒற்றி எடுப்பதற்காக ஒருவிதமான பேப்பர் உபயோகிப்பர்; அதற்கும் இந்திய பேப்பர் என்று பேர்...'

'சரிதான்... நீ சொல்வதைப் பார்த்தால், இந்தியாவிலேயே தயார் செய்யும் காகிதத்துக்குக் கூட இந்திய பேப்பர் என்று பெயர் வைக்க முடியாது போலிருக்கிறதே...' என்றார் அப்போது அங்கே இருந்த குப்பண்ணா.

***

'எத்தனையோ குட்டிக் கதைகள் சொல்லி இருக்கிறார் ராமகிருஷ்ண பரமஹம்சர். அதன் மூலம் ஆன்மிகக் கருத்துக்களைப் பரப்பியிருக்கிறார். மறைந்த காஞ்சிப் பெரியவர் அப்படிக் கதைகள் சொன்னதில்லையே... அருளுரை, ஆசியுரை இப்படித் தானே சொல்லியிருக்கிறார்?' என்று குப்பண்ணாவிடம் கேட்டேன்.

'இல்லையே... 1957ம் வருஷம் அவர் சென்னைக்கு வந்து, உபன்யாசங்கள் செய்தார். அப்புறம், 30 ஆண்டுகளுக்கு மேல் அவர் சென்னைக்கே வரவில்லை. அப்போது நான் சிறுவன். என் தாயாருடன் தினமும் சென்று, அவரது உபன்யாசங்களைக் கேட்பேன்.

'அவர் சொன்ன நிறைய கதைகள் இப்போதும் என் நினைவில் இருக்கிறது; எல்லாம் வரலாற்று உண்மைக் கதைகள்...' என்றார் குப்பண்ணா.

'உதாரணத்திற்கு ஒன்றிரண்டு கதைகளைச் சொல்ல முடியுமா?'

'தாராளமாக... வித்தியாரண்யர் பிரம்மச்சாரியாக இருந்த காலத்தில் பரம ஏழையாக இருந்தார். இதனால், மகாலட்சுமியை குறித்துக் கடுமையான தபஸ் பண்ணினார். மகாலட்சுமி பிரசன்னமானாள்... 'உனக்கு என்ன வேண்டும்?' என்று கேட்ட போது, 'உலகத்தில் யாரிடத்திலும் இல்லாத ஐஸ்வர்யம் கொடு...' என்று இவர் கேட்டார்.

'மகாலட்சுமி, 'அப்பா... உனக்கு இந்த ஜன்மத்தில் ஐஸ்வர்யம் கிடைப்பதற்கு வழி இல்லையே; வேண்டுமானால், அடுத்த ஜென்மாவில் கொடுக்கிறேன்...' என்று சொன்னாள்.

'வித்தியாரண்யர், உடனே சந்நியாசம் வாங்கி, 'சந்நியாசம் வாங்கிக் கொண்டால், சாஸ்திரப் படி மறு ஜென்மமாகப் போய் விடாதா? இப்போது ஐஸ்வர்யத்தைக் கொடு...' என்றார். லட்சுமியும், சொர்ணத்தை அள்ளி வழங்கினாள்.

'நிலம் முழுக்க எங்கே பார்த்தாலும் ஒரே தங்கமாகத் தெரிந்தது; நவநிதியும் தெரிந்தது. இவற்றைப் பார்த்தவுடன் வித்தியாரண்யர், 'சந்நியாசம் வாங்கிக் கொண்ட பின் நமக்குத் தங்கம் எதற்காக? சந்நியாச ஆசிரமத்தில் இதைத் தொடவும் கூடாதே' என்று அழுதாராம்.

'அப்போது தான் மாலிக்காபூர் தென்னாட்டுக்கு படையெடுத்து வந்து எல்லா ராஜ்யங்களும், எல்லா கோவில்களும் சிதறுண்டு போகும்படியாகப் பண்ணிவிட்டுப் போயிருந்தான்... 'சரி, இந்த ஐஸ்வர்யத்தைக் கொண்டு இவற்றையெல்லாம் ஒழுங்கு செய்வது...' என்று தீர்மானம் பண்ணிக் கொண்டார் வித்தியாரண்யர்.

'அப்போது அங்கே ஹரிஹரன் - புக்கன் என்ற இருவர் - அண்ணன், தம்பி - ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனர். அந்த இரண்டு குறும்பர்களையும் அழைத்து, அந்த துங்கபத்திரைப் பிரதேசத்திலேயே ஒரு ராஜ்யத்தை ஸ்தாபித்து, அதற்கு ராஜாக்களாக அவர்களை நியமித்தார். அந்த ராஜ்யம் தான் விஜயநகர் சாம்ராஜ்யம்...'

'பலே... அடுத்த கதை?'

'பிறகு பார்க்கலாம்...' என, நடையைக் கட்டினார் குப்பண்ணா!

***

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us